Sunday, February 18, 2018

180 நாள்களில் தேர்தல் அறிக்கை! - கமல் பயணம் ரெடி

மல்ஹாசனின் ‘நாளை நமதே’ தமிழகப் பயணத்துக்கான வாகனம் ரெடியாகிவிட்டது. உள்ளடங்கிய கிராமங்களுக்கும் செல்லும்வகையில் எல்லா வசதிகளுடனும் தயாராகியுள்ள அந்த வாகனத்தை, பிப்ரவரி 15-ம் தேதி தன் அலுவலகத்தில் வைத்துப் பார்த்து திருப்தி தெரிவித்திருக்கிறார் கமல். வாகனம் தயாராவதற்கு முன்பே, தன் நீண்ட பயணத்துக்கு அவர் ரெடியாகி விட்டார். பிப்ரவரி 21-ம் தேதி ராமேஸ் வரத்தில் கலாம் இல்லத்தில் பயணத்தைத் தொடங்கும் கமல், அன்று இரவு மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்; கட்சியின் கொடியை யும் அறிமுகம் செய்கிறார். 

கமலின் அரசியல் பயணத்துக்கு ஆதரவும் வாழ்த்துகளும் எல்லா பக்கங்களிலும் இருந்து வந்து குவிகின்றன. ‘‘கட்சியில் இணையப் போகும் பிரபலங்களைப் பார்த்து தமிழக மக்கள் ஆச்சர்யம் அடைவார் கள்; பல அரசியல்வாதிகள் அதிர்ச்சி அடைவார்கள். சினிமா பிரபலங்கள் பலரும், தொழிலதிபர்களும் அடிக்கடி வந்து கமலை சந்தித்துப் பேசுகிறார்கள். பிரபல தொழிலதிபர் ஒருவர் ஆரம்ப கட்டத்திலேயே கட்சியில் சேரவுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் இணைகிறார்; இப்போது பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவர், தன் பதவியைத் துறந்துவிட்டு வரப்போகிறார். இதேபோல ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் சேரப் போகிறார்கள். இப்போதும் பதவியில் உள்ள துடிப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு வரப்போகிறார். இப்படித் தமிழகத்தை மாற்றத் துடிக்கும் கமலின் அரசியல் பயணத்தில் நல்லெண்ணம் கொண்ட பலரும் கைகோக்கிறார்கள்’’ என்கிறார், கமலுக்கு நெருக்கமான நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர்.
கமலின் அரசியல் பயணத் தொடக்க விழா மாநாட்டுக்கு வருவதற்கு அகில இந்தியத் தலைவர்கள் பலர் ஆர்வமாக இருந்தார்களாம். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய மூவருமே, கமலிடம் இதுபற்றிப் பேசினார்களாம். ‘‘உங்களின் அரசியல் பயணத்துக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல நாங்கள் தயார். ஆனால், நாங்கள் வருவதால் உங்கள்மீது ஏதாவது அரசியல் முத்திரை விழும் என்று தயக்கம் இருக்கிறதா?’’ என்று கேட்டார்களாம். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘என்னால் அன்று வர முடியாது. ஒரு வாழ்த்துச் செய்தியை வீடியோவில் பதிவுசெய்து அனுப்புகிறேன். அதை மாநாட்டு மேடையில் ஒளிபரப்புங்கள்’’ என்றாராம். எல்லோருக்கும் கமல் கனிவோடு சொன்ன பதில் இதுதான்... ‘‘உங்களுக்குச் சிரமம் எதற்கு? உங்களின் அன்பே போதும். எப்போதும்போல என்னை வழிநடத்துங்கள்!’’
அமெரிக்கா சென்று திரும்பி வந்த நாளிலிருந்து பல சந்திப்புகளில் பிஸியாக இருக்கிறார் கமல். குறிப்பாக, நல்ல மாற்றம் வேண்டி நேர்மையாக இயங்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அவர் பேசிவருகிறார். அப்படி அவர் முதலில் சந்தித்தது, செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ உள்ளிட்ட ‘சட்டப் பஞ்சாயத்து இயக்கம்’ என்ற அமைப்பினரை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களை அம்பலப்படுத்தி, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் அமைப்பு இது. ‘அரசியல் எப்படி இருக்க வேண்டும்’ என இவர்கள் ஒரு சிறுவர் இதழில் எழுதியதைப் படித்துவிட்டு, கூப்பிட்டுப் பேசினார் கமல். ‘‘உங்களை என் கட்சியில் சேருங்கள் என வற்புறுத்த மாட்டேன். ஆனால், தமிழகத்தை வளமாக்கும் பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள். எல்லா தவறுகளையும் சுட்டிக் காட்டுவது போல, நான் தவறு செய்தாலும் தயக்கமின்றி என்னிடம் சொல்லுங்கள்’’ என்று கமல் சொன்னபோது உருகிவிட்டார்களாம் அவர்கள். 

இதேபோல ‘நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ‘பாலு ஐயா’ எனப்படும் பாலசுப்ரமணி யனையும் கமல் சந்தித்தார். பல்வேறு சமூக சேவை களை சென்னையின் பல பகுதிகளில் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் அமைப்பு இது. அப்துல் கலாமுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கமல் கேட்டறிந்தார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரையாற்றப் போனபோது, இந்தியாவிலிருந்துபோய் அங்கு இருக்கும் பல அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்துறை நிபுணர்களிடம் கமல் உரையாடினார். அவர்களில் ஆர்வமுள்ள 21 பேரை இணைத்து ஓர் அறிவுஜீவிகள் குழுவை கமல் அமைத்திருக்கிறார். ‘தமிழ்நாட்டை முன்னேற்ற என்னென்ன செய்யலாம்’ என அந்தக் குழு இப்போது இரவுபகலாக ஆலோசித்துத் திட்டங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பிரச்னைகள் என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன, தமிழக மக்களின் தேவைகள் என்னென்ன... இவைதான் இப்போது கமல் மனதில் ஓடும் சிந்தனைகள். ‘‘தான் சந்தித்துப்பேசும் அத்தனை பேரிடமும் இவை பற்றியே அவர் விவாதிக்கிறார். அத்தனை விஷயங்களையும் மனதில் சேமித்து வைக்கிறார். அறிவுஜீவிகளின் ஆலோசனையும் அவர் கைக்கு விரைவில் வந்துவிடும். ‘நாளை நமதே’ பயணம் தொடங்கியதிலிருந்து சரியாக 180 நாள்கள்... இந்த எல்லா விஷயங்களையும் வைத்து கமலின் தேர்தல் அறிக்கை அப்போது வெளியாகும். அது தமிழகத்தையே புரட்டிப் போடுவதாக இருக்கும்!’’ என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள்.

காத்திருப்போம்!

- ம.கா.செந்தில்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment