Sunday, November 12, 2017

கலெக்டர் முதல் அமைச்சர் வரை கமிஷன்!

சத்துணவு ஊழியர் போஸ்டிங்... விஜயபாஸ்கர் உதவியாளர் வில்லங்கம்
த்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் கலெக்டர் முதல் அமைச்சர் வரை  கமிஷன் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் குவியும் புகார்களால் புதுக்கோட்டை பரபரத்துக் கிடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 130 சத்துணவுப் பணியாளர்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஜனவரியில் வெளியாகி பணி நியமனங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், பல லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு பணி ஆணைகளை வழங்கியுள்ளதாக புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம் ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏராளமான பெண்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சுகன்யாவிடம் பேசினோம். “எனக்குக் கால் கொஞ்சம் ஊனம் என்பதால், எங்கும் வேலைக்குப் போக முடியாது. கணவருக்கும் சரியான வேலையில்லை. திருமணமாகிப் பல வருடங்களாகியும் எங்களுக்குக் குழந்தையில்லை. அதனால், எங்கள் ஊரில் சத்துணவுப் பணிக்காக மனு கொடுத்தேன். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகத்தின் ஆட்கள் எங்களிடம் வந்து, ‘அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம் சொல்லும் ஆட்களுக்குத்தான் வேலை. அதனால், மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் வேலைக் கிடைக்கும்’ என்றார்கள். வேலைக்காக மனு கொடுத்த பலரையும் அவர்கள் பார்த்தார்கள். பணம் கொடுத்தவருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். மூன்று லட்சத்துக்கு நாங்கள் எங்கே போவோம்?” என்றார் வேதனையுடன்.

இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்ச்செல்வியிடம் பேசினோம். “எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இரு பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னையால் என் குழந்தைகளுடன் பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டேன். குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படும் நிலையில், பூவைமாநகர் சத்துணவு மைய அமைப்பாளர் பணிக்கு மனு கொடுத்தேன். என்னைப்போல, 32 பேர் மனு கொடுத்தார்கள். எங்களை, அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்களான பெரியசாமி, வேலாயுதம் ஆகியோர் சந்தித்து, ‘மூன்று லட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு வேலை’ என்று சொன்னார்கள். மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை 15 பேரிடம் வாங்கியுள்ளனர். அதில், அதிகமாகப் பணம் கொடுத்தவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம் மூலம் டோக்கன் வழங்கப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் கணேஷிடம் முறையிட்டோம். அவரும், ‘மூன்று லட்சம் கொடுத்தால் வேலை. இல்லையெனில்,அதை காலிப்பணியிடமாக அறிவிப்போம்’ என்றார். அவர் சொன்னபடி, பணம் கொடுக்காத 30 காலிப்பணிடங்களுக்குத் தேர்வு நடத்தவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்குப் புகார் கொடுத்தேன். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளேன். கலெக்டர், அவரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவசரகதியில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் விண்ணப்பித்த இடத்தில், கிராம நிர்வாக அதிகாரி ஒருவரின் மனைவியை நியமித்துள்ளார்கள். அந்தப் பெண், தன் கணவருக்கு வேலையில்லாதவர் எனச் சான்றிதழ் வாங்கியிருக்கிறார். தீபாவளிக்குச் சில நாள்களுக்கு முன்பு, மீண்டும் 160 பணியிடங்களுக்குச் சத்துணவு பணியாளர் நியமனங்கள் நடைபெற்றன. இதிலும் கலெக்டர், அவரின் உதவியாளர் அன்பானந்தம், விஜயபாஸ்கர், ஒன்றியச் செயலாளர்கள் எனப் பலரும் பணம் வசூல் செய்துள்ளனர். இதுதொடர்பான, ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.
கலெக்டர் கணேஷிடம் பேசினோம். “கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சத்துணவு பணியாளர்கள் தேர்வின் முடிவுகள் சில தவிர்க்க முடியாத நிர்வாகச் சூழலால், நிறுத்தி வைக்கப்பட்டது. மற்றபடி, அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறுவதில் உண்மையில்லை.வழக்குத் தொடர்ந்துள்ள தமிழ்ச்செல்வியை நான் பார்த்ததே இல்லை. இந்த விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் உதவியாளர் அன்பானந்தம் உள்ளிட்டோரைத் தொடர்புப் படுத்தி பேசுவது தவறு. இதன் பின்னணியில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியும், அவரின் தம்பி பரணி கார்த்திகேயனும் உள்ளார்கள். இருவரும் சிலருக்குச் சிபாரிசு செய்தனர். நான் மறுத்துவிட்டதால், எனக்குக் கெட்டபெயரை உண்டாக்க இப்படியான செயல்களில் ஈடுபட்டுள்ளார்” என்றார் கூலாக.

தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன், “ஒருபோதும் சிபாரிசுக்காகச் சென்றதில்லை. அவருக்கு எதிரான புகாரின் பின்னணியில் நான் இருப்பதாகக் கதைக்கட்டிவிடுவது சரியல்ல” என்றார்.
அன்பானந்தம், ‘‘நான் எந்த வகையிலும் இதில் சம்மந்தப்படவில்லை’’ என்றார். விஜயபாஸ்கர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

- சி.ய.ஆனந்தகுமார் 
படங்கள்: ம.அரவிந்த்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment