Sunday, November 12, 2017

அக்டோபர் புரட்சியை முறியடித்த நவம்பர் சோதனை!

சிகலா குடும்பத்தினர்மீது நடத்தப் பட்ட சர்ஜிக்கல் ரெய்டுக்கு அக்டோபர் புரட்சிதான் விதை! 

  * ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்கு பின் நீடிக்காது’’ - அக்டோபர் 15-ம் தேதி திருச்சி. 

  *  ‘‘பொங்கலுக்குள் பழனிசாமி ஆட்சி கவிழ்ந்து விடும்’’ - அக்டோபர் 28-ம் தேதி மதுரை.

இந்த இரண்டு பேட்டிகளும் அக்டோபரில் தினகரன் அளித்தவை.

இந்தப் பேட்டிகள், மூன்றாவது நான்காவது பக்கங்களில் சாதாரணமாகத் தான் பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதற்கான மூவ் தினகரனால் தொடங்கப்பட்டிருந்தது. அதற்குள் போவதற்கு முன்பு, பேட்டியில் என்ன சொல்லியிருந்தார் என்பதைப் படித்துவிடுவோம். 

‘‘எடப்பாடி ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. டெங்குவைவிட கொடிய வி‌ஷம் பழனிசாமியின் அரசு. டெங்கு ஒழிக்கப்படுவதுபோல பழனிசாமியின் அரசும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இரட்டை இலை எங்களுடைய சொத்து. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எடப்பாடியின் அரசு, டிசம்பர் மாதத்தைத் தாண்டாது. எப்படியும் டிசம்பரில் சட்டப்பேரவையை நடத்தியாக வேண்டும். ஓட்டெடுப்பு நடத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயகக் கடமையை நாங்கள் செய்வோம்’’ எனப் பேட்டியில் விரிவாக  சொல்லியிருந்தார் தினகரன்.
‘‘எடப்பாடியை முதல்வராக ஏற்க முடியாது’’ எனச் சொல்லி, பொறுப்பு கவர்னர் வித்தியாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கடிதங்கள் வழங்கினார்கள். ஆனால், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆனால், எடப்பாடி அரசு வேறு நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது. 18 பேர்களையும் வளைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜக்கையனை மட்டுமே இழுக்க முடிந்தது. குடகுவில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு 
எம்.எல்.ஏ-க்கள்மீது சாம தான பேத  தண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை. செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர்மீது வழக்குகள் போட்டும் பலன் இல்லை. சட்டசபையைக் கூட்டவைத்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வேறுவழியில்லாமல்தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார்கள். இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

‘அரசுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தால், எடப்பாடி ஆட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ்உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வதில், சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்’ எனச் சொல்லி அடுத்த வழக்குப் பாய்ந்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் சரியென்றால், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தால், அந்த 18 பேரும் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆட்சியைக் கவிழ்க்க முற்படலாம். இந்தக் கணக்கை வைத்துதான், ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்குப்பின் நீடிக்காது’’ என தினகரன் சொன்னார்.

அதே நேரம், இன்னும் சில எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சிகளையும் தினகரன் எடுத்துக் கொண்டிருந்தார். எப்படி பார்த்தாலும் எடப்பாடி தலைக்குமேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசுதான் இதில் உதவ முடியும் என்பதால், ‘சோதனை’ நடத்தப்பட்டிருக்கிறது.

 வருமானவரி ரெய்டால் என்ன விளையும்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டால், அவர்கள் தினகரனுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியைக் கவிழ்க்கக்கூடாது என்பதற்கு இந்த மெகா ரெய்டைப் பார்த்து கொஞ்சம் பதுங்கலாம். அல்லது, எடப்பாடி அணியில் வந்து சேரலாம். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், தினகரன் பக்கம் தாவ நினைத்தால், ‘ரெய்டு நடக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தினகரன் இழுக்கும்போது கரன்சிகள் கைமாறுமே. அதற்கும் செக் வைக்கவும், இந்த ரெய்டு பயன்பட்டிருக்கும். 

தினகரனின் அக்டோபர் புரட்சியின் இன்னொரு விஷயம், இரட்டை இலை விவகாரம். தேர்தல் கமிஷனில் நடந்துவரும் வழக்கின் இறுதி விசாரணை முடிக்கப்பட்ட அடுத்த நாள்தான், ரெய்டு ஆப்ரேஷன் நடத்தப்பட்டிருக்கிறது. இரட்டை இலை  தங்களுக்குக் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால், எடப்பாடி அணிக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தினகரன். விசாரணையின்போது, தினகரன் அணி வைத்த வாதங்களே அதற்குச் சாட்சி. ஆட்சிக்கு ஆபத்து, இரட்டை இலை முடக்கம் என முன்னேறும் தினகரனை இதற்கு மேலும் விட்டுவைக்க முடியாது என முடிவெடுத்து நடத்தப்பட்டிருக்கிறது சோதனை. 

டிசம்பரில் ஆட்சிமீதான அட்டாக்குக்காக அக்டோபரில் தினகரன் போட்ட புரட்சி விதையை, நவம்பர் ரெய்டு மூலம் முறியடித்திருக்கிறார்கள்.

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
படம்: கே.ஜெரோம்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment