Sunday, November 12, 2017

“குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்தவர்கள் நாங்கள்!”

நியாயம் கேட்டு நர்சுகள் போராட்டம்
டல்நிலை சரியில்லாத நோயாளிகளைக் கருணைமிகுந்த தாய்களைப்போல கவனிக்கிற செவிலியர்கள், வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். பணி நிரந்தரம் கோரி, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நவம்பர் 6-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் பேசினோம். ‘‘நாங்கள் நர்சிங் டிப்ளோமா படித்தவர்கள். ஏகம்’ (EKAM) என்ற அமைப்பு மூலமாக 2010-ம் ஆண்டு, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், தமிழக அரசு எங்களைப் பணியமர்த்தியது. அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு  மருத்துவ மையங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களிலும் பணியாற்றிவருகிறோம். ஈடுபாடு மிகுந்த எங்கள் பணியால், 2010 - 2017 காலகட்டத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சதவிகிதம் 30-லிருந்து 12-ஆகக் குறைந்தது. இதனால், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், அர்ப்பணிப்புடன் உழைக்கிற எங்களுக்கு, மாத ஊதியம் 4,500 - 7,500  மட்டுமே தருகிறார்கள்.
எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே இரண்டு முறை போராட்டங்கள் நடத்தினோம். அப்போது, சிறப்புத் தேர்வு  நடத்தி எங்களுக்குப் பணி நியமனம் வழங்குவதாக ஆட்சியாளர்கள் வாய்மொழி உத்தரவை அளித்தனர்.  ஆனால், சிறப்புத் தேர்வு எதையும் நடத்தவில்லை. 2015-ல் போராட்டம் நடத்தியபோது, ‘உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்தனர். அதை நம்பி நாங்கள் மீண்டும் பணியில் தொடர்ந்தோம். ஆனால், வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. அதனால்தான், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். 

எங்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்குகிறார்கள். பணி நிரந்தரம் இல்லாததால், பணியிலிருந்து நீக்கப்படுவோமோ என்ற பயத்திலேயே இருக்க வேண்டியுள்ளது. எங்கள் குழந்தைகளைவிடவும், மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்குத்தான் எப்போதும் நாங்கள் முன்னுரிமை கொடுத்திருக்கிறோம். இந்தப் போராட்டத்தில்கூட, பாதி செவிலியர்கள்தான் ஈடுபட்டிருக்கிறோம்... மீதிப் பேர், குழந்தைகளை எப்போதும்போல கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தனித்தேர்வை நடத்தி, பணி நியமனம் செய்யுங்கள் என்பதுதான்  எங்களின் கோரிக்கை. ஆனால், அந்தத் தேர்வுக்கான அறிவிப்பையும் கொடுக்க மறுக்கிறார்கள். எம்.ஆர்.பி (மருத்துவப் பணியாளர் தேர்வு) தேர்வை ஒரு முறை எழுதினோம். உயர்படிப்பு முடித்தவர்களுக்கான அந்தத் தேர்வை எங்களைப் போன்று டிப்ளோமா முடித்தவர்களால் எழுதி பாஸ் பண்ணுவது மிகமிகக் கடினம். எட்டு வருடங்களாகப் பணியாற்றிவருகிறோம். எங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும். எங்களின் குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் விட்டு, போராடி வருகிறோம். எங்களைப் பணியமர்த்திய அமைப்பும் இப்போது எங்களுக்கு உதவ முன்வரவில்லை. கோரிக்கைத் தீர்க்கப்படும் என்று எழுத்து மூலமாக அதிகாரிகள் உறுதி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றனர். 

 இதுகுறித்து, அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, எம்.ஆர்.பி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. திறமையைப் பொறுத்தவரை, அவர்கள் சிறப்பாகப் பணியாற்றிப் பெயர் பெற்றவர்கள். அதனால், அவர்களைப் பணியிலிருந்து நீக்காமல், காலியாக இருந்த அந்த 520 இடங்களையும் நிரப்பாமல், அவர்களின் பணி தக்கவைக்கப்பட்டது. அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கு எம்.ஆர்.பி மூலமாக சிறப்புத் தனித் தேர்வு நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வயது உச்சவரம்பிலிருந்து விலக்கு, இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இருப்பதால், அந்தந்தத் துறைகளின் ஒப்புதலையும் எதிர்நோக்கி அரசின் பரிசீலனையில் உள்ளது. அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லியும், போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்துவது, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாதிப்பாக இருக்கும். மழைக்காலத்தில், செவிலியர்கள் தேவைப்படும் சமயத்தில், இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது, அவர்களுக்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். எழுத்து மூலம் ஒப்புதல் கொடுக்க, இது நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அந்த இரண்டு துறைகளும் விலக்கு அளிக்க ஒப்புக்கொள்ளுமா என்பதே இன்னும் தெரியாத நிலையில், எழுத்துபூர்வமாக எப்படி எழுதித் தர முடியும்’’ என்றார்.

இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், ஏழு ஆண்டுகளாக ஒப்பந்தத்திலேயே வைத்திருப்பது, செவிலியர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கையை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். 

- நந்தினி சுப்பிரமணி
படங்கள்: வீ.நாகமணி,  க.பாலாஜி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment