Sunday, November 12, 2017

தூர்வார ஒதுக்கிய நிதி எங்கே ஒதுங்கியது? - நாகையில் பயிர்கள் நீரில் மூழ்கின!

விவசாயிகளுக்கு மட்டும் இந்த விநோதப் பிரச்னைகள். கடந்த ஆண்டு வறட்சியால் பயிர்கள் கருகின. இந்த ஆண்டு வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கின. 

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பும், காவிரி ஆற்றில் நீர்வரத்தும் இருந்ததால் சம்பா, தாளடிப் பருவச் சாகுபடியை உற்சாகமாகத் தொடங்கினார்கள் விவசாயிகள். நடவு, நேரடி நெல்விதைப்பு செய்து, இளம் பயிர்கள் பசுமையாய் துளிர்விட்ட நிலையில்தான், வடகிழக்குப் பருவமழை வந்துசேர்ந்தது. இரண்டு நாள் மழையை மகிழ்வுடன் எதிர்கொண்ட விவசாயிகள், அடுத்தடுத்து இடைவிடாது பெய்த மழையால் பயிர்கள் மூழ்கத் தொடங்கியவுடன், செய்வதறியாது திகைக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள், மழையில் மூழ்கி அழுகிவிடும் நிலையில் உள்ளன. ஏக்கர் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.15,000 செலவு செய்துள்ளனர் விவசாயிகள்.

‘‘வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களைத் தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளுக்கான நிதியை, பொதுப்பணித் துறையினரும் ஆளும்கட்சிப் பிரமுகர்களும் பங்கிட்டுக் கொண்டனர். இதனால்தான், விவசாயிகளுக்கு மழையால் பேரழிவு’’ என்று விவசாயிகள் சங்கத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
கோடியக்கரை முதல் கொடியம்பாளையம் வரை நீண்ட கடற்கரையைக் கொண்ட நாகை மாவட்டத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாகப் பிரதானத் தொழில் மீன்பிடிதான். கடல் சீற்றத்தால் நவம்பர் 1-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால், கடலுக்குச் செல்லாமல் மீனவர்களும் வருமானமின்றி முடங்கினர். அதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது மழை.

சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கார்த்தி, குளத்தில் மூழ்கி பலியானான். திருக்கருகாவூரைச் சேர்ந்த விவசாயி கண்ணன், ஆடுகளுக்குத் தழை பறிக்கும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆடுகள், மாடுகள் என நாகை மாவட்டத்தில் கால்நடைகளின் பலி எண்ணிக்கை சுமார் நானூறைத் தாண்டுகிறது.  

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட வாய்க்கால்களில் உடைப்பெடுத்ததால், கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேதாரண்யம் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து தீவுகளாகிவிட்டன. வண்டல் என்ற கிராமத்திலிருந்து மாணவர்கள் அவுரிக்காட்டில் உள்ள பள்ளிக்குப் படகில் சென்ற காட்சியே மழையின் கோரத்துக்குச் சாட்சி.
மழை பாதிப்புகளைப் பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘நாகை மாவட்டத்தில், 27 நிவாரண முகாம்களில் 7,786 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றன. 33 சிறப்பு மருத்துவ முகாம்களும், 28 கால்நடை மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 வாய்க்கால்களில் ஏற்பட்ட உடைப்புகள் உடனடியாக சீர்செய்யப்பட்டன. இருப்பினும், ஒன்பது நாள்களுக்கு மேலாக நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் பிழைப்பது சந்தேகமே. பருவமழை முடிந்ததும், நிவாரணம் குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றார்.  

ஆனால், சீர்காழி அருகே தலைச்சங்காட்டில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை என்று சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். 

மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஜி.கே.வாசன், ‘‘தமிழக அரசு, குடிமராமத்துப் பணிகளை முறையாகச் செய்யாததே வெள்ள பாதிப்புக்குக் காரணம்’’ என்றார்.

நவம்பர் 8-ம் தேதி இரவு, வேதாரண்யம் அருகே பழையாற்றங்கரை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிப் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆனால், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘வடகிழக்குப் பருவ மழையால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’ என்று கூறியுள்ளார். இது, தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது’’ என்றார். 
அமைச்சரின் பேச்சுக்கு விவசாயிகள் சங்கத்தினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் தனபாலனிடம் பேசியபோது, ‘‘இந்த மாவட்டத்தில் 29 ஆறுகளும் தூர்வாரப்படவில்லை. ஆறுகளைத் தூர்வார முதல்கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாவதுக் கட்டமாக ரூ.300 கோடியும் அரசு நிதி ஒதுக்கியது. இந்தப் பணம் எங்கே ஒதுங்கியது என்றே தெரியவில்லை. இந்தப் பணத்தில் முறையாகத் தூர்வாரியிருந்தால், நாகை மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்காது. உண்மைநிலை இப்படியிருக்க, வேளாண்மை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி கணேஷ் பாபு, ‘‘ஆறுகளைத் தூர்வாரியதால்தான் பயிர்கள் தப்பித்தன என்று வேளாண்மைத் துறை அமைச்சர் பொய் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையானால், இன்றைக்குப் பொதுப்பணித் துறையினர் அவசர, அவசரமாக பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரி வருவது ஏன்? ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது தூர்வாரினாலே பல முறைகேடுகள் நடக்கும். இப்போது, மழைநீரில் தூர்வாருகிறார்கள். இதற்கு என்ன கணக்குக் காட்டப் போகிறார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்’’ என்றார் கவலையுடன். 

உரிய நிவாரணங்களை அரசு அளித்தால் மட்டுமே விவசாயிகளின் வேதனைகளைக் கொஞ்சம் தீர்க்க முடியும். எடப்பாடி அரசு செய்யுமா?

 - மு.இராகவன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment