Sunday, November 12, 2017

அடகுக்குப் போன பஸ் நிலையங்கள்... முடங்கும் போக்குவரத்துக் கழகங்கள்!

பெரும் நஷ்டத்தாலும், கடன் நெருக்கடியாலும் தத்தளித்துக்கொண்டிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள், பஸ் நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்ட சொத்துகள் பல கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விகடன் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவை.

 போக்குவரத்துக் கழகங்களின் அவல நிலையால், அரசு பஸ்களைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு பஸ்களில் 75 சதவிகிதத்துக்குமேல் ஆயுள்காலத்தைக் கடந்து இயங்குகின்றன. சென்னை மாநகர், கோயமுத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, சேலம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என எட்டு போக்குவரத்துக் கழகங்களும், 2015-16-ம் நிதியாண்டு வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில், 2,602 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரண்டாயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும்’ எனக் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அது, இன்று வரையில் அறிவிப்பாகவே உள்ளது. புதிய பஸ்கள் வாங்க நிதியில்லாத சூழலில், ‘அரசு பஸ்களில் படிப்படியாக சி.சி.டி.வி கேமரா, கழிப்பறை வசதிகளுடன் கூடிய பஸ்கள், ஏ.சி பேருந்துகள், வைஃபை வசதி, பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள், படுக்கை வசதி கொண்ட ஏ.சி பஸ்கள் இயக்கப்படும்’ என இந்த ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகளும் செயல் வடிவம் பெறவில்லை. ஆயுள்காலத்தைக் கடந்து இயங்கும் பஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   
ஊழியர்களின் ஊதியம் உயரக்கூடும் என்பதால், போக்குவரத்துக் கழகங்களுக்கான நிதிச்சுமையும் கடன் சுமையும் கூடும். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுக் கோடி ரூபாய் அளவுக்குப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பஸ்களும் பஸ் நிலையங்களும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு, கடன் பெறப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு செய்தோம். இதற்கு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்த தகவல்கள் அதிர்ச்சியளிக்க வைப்பதாக உள்ளன.

 ‘சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,819 பஸ்கள் உள்ளன. இதில், 3,439 பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றில், 2,960 பஸ்கள் (80 சதவிகிதம்) ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் ரூ.7.50 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது. தி.நகர் (ரூ. 351.86 கோடி), அயனாவரம் (ரூ. 4 கோடி), மந்தைவெளி (ரூ. 8 கோடி), திருவான்மியூர் (ரூ. 10 கோடி), அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் (ரூ. 55 கோடி) ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் பணிமனைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன’ எனப் பதில் தரப்பட்டுள்ளது. பெரம்பூர், பட்டுலாஸ், பேசின் பிரிட்ஜ், சைதாப்பேட்டை பணிமனைகளும் அடமானத்தில்தான் இருக்கின்றன. 490 பஸ்கள் ரூ.44.27 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகச் சொத்துகள் மட்டும் ரூ.580.63 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன.

 இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம்,தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லாபம் ஈட்டுவதற்கான எந்த முயற்சியும் இல்லை.செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. செலவுகளை ஈடுகட்டத்தான் சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சென்னையைவிட, கோவையில்தான் அதிகமாக சொத்துகள் அடகு வைக்கப்
பட்டுள்ளன” என்றனர்.

 போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தினமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக பஸ்கள் எதுவும் வாங்கவில்லை. பல இடங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. வருவாயைப் பெருக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

அரசுப் பேருந்துகளில் போகும் மக்களையும் அடமானம் வைப்பார்களோ!

- ச.ஜெ.ரவி
படங்கள்: ப.சரவணகுமார்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிலை இது தான்!

மொத்தப் பேருந்துகள்    -    3,819
ஆயுட்காலம் முடிந்தும் இயங்குபவை    -    2,960
பயணிகள் எண்ணிக்கை    -    நாள் ஒன்றுக்கு 47 லட்சம் பேர்
நாளொன்றுக்கு இயக்கப்படும் சராசரி தூரம்    -    9.55 லட்சம் கி.மீ
ஒரு கி.மீ. தூரத்துக்கு வரவு    -    ரூ.40
ஒரு கி.மீ. தூரத்துக்குச் செலவு    -    ரூ.55
ஒரு கி.மீ தூரத்துக்கு இழப்பு    -    ரூ.15
2015-16-ம் ஆண்டு மொத்த வருவாய்    -    ரூ.1,304.81 கோடி
2015-16-ம் ஆண்டு மொத்த செலவு    -    ரூ.1804.48 கோடி
2015-16-ம் ஆண்டு இழப்பு    -    ரூ.499.67 கோடி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment