Sunday, November 12, 2017

அமைச்சர்களே... அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவீர்களா?

‘‘நல்ல சிகிச்சை கிடைக்கிறது’’ குமரி அனந்தன் சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த அரசியல் தலைவரான குமரி அனந்தன், 85 வயதிலும் நடைப்பயணம், உண்ணாவிரதம் எனப் போராடிக் கொண்டிருக்கிறார். உடல்நலமின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குமரி அனந்தனைச் சந்தித்தோம். சோர்வுற்றுப் படுத்திருந்தாலும், உறுதிகுலையாமல் பேசினார்.

‘‘காமராஜரும், கக்கனும்கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் போகமுடியாது. அந்த அளவுக்குத் தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. அப்போதே அனைத்து மதத்தினரும் எந்தவிதப் பாகுபாடுமின்றி வந்துபோக வேண்டும் என்ற நோக்கத்துடன், 1923-ம் ஆண்டு பாப்பாரப்பட்டியில், ‘பாரத மாதா சமத்துவப் பொதுக்கோயில்’ கட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டினார். 94 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. இந்தக் கோயிலைக் கட்டித்தரக் கோரி, தமிழக அரசை வலியுறுத்தி 1977-ம் ஆண்டிலிருந்து ஆறு முறை நடைப்பயணம் மேற்கொண்டுவிட்டேன். மணிமண்டபத்தை மட்டும் கருணாநிதி கட்டினார். கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, கலெக்டருக்கு உத்தரவிட்டார் ஜெயலலிதா. ஆனாலும், அது நிறைவேறவில்லை. உயர் நீதிமன்றத்துக்குப் போனேன். 2015-ம் ஆண்டு, ‘இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக மனுதாரருக்கு நல்லதொரு முடிவைச் சொல்ல வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். வருடங்கள் இரண்டு முடிந்துவிட்டன. இன்னும் நல்லதொரு முடிவு எனக்குச் சொல்லப்படவில்லை. அதனால்தான் போராடினேன்’’ என்றவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘உடல்நிலை இப்போது எப்படியிருக்கிறது...  இங்கே நல்ல சிகிச்சை கிடைக்கிறதா?’’

‘‘இப்போது பரவாயில்லை. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கால் களைப்புற்றிருந்ததால், தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றினர். ஊசி குத்திக் குத்தி கை வீங்கிவிட்டது. இன்றைக்கு ஊசி குத்துவதற்காகத் தேடிப்பார்த்தும் ரத்தநாளம் கிடைக்கவில்லை. பொதுவாகவே, அரசு மருத்துவமனைமீது மக்களுக்கு நம்பிக்கையில்லாத சூழல் நிலவுகிறது. அது உண்மையல்ல... இங்கே நல்ல சிகிச்சை கிடைக்கும். அந்த நம்பிக்கையை விதைக்கும் விதமாகத்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். ஏற்கெனவே, எம்.எல்.ஏ., எம்.பி-யாகப் பணியாற்றியதால் கிடைத்துவரும் ஓய்வூதியத்தைக் கொண்டுதான், இப்போதைய என் வாழ்க்கையை நகர்த்திவருகிறேன். தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற என் குடும்பத்தினர் வற்புறுத்தினாலும்கூட ஏற்கமாட்டேன்.’’

‘‘உங்களின் உடல்நலனை விசாரிக்க வந்தவர்கள் என்ன சொன்னார்கள்?’’

 ‘‘நல்லகண்ணு, வைகோ, முத்தரசன், தீபாவின் கணவர் மாதவன், நடிகர் கே.ராஜன் எனப் பலரும் வந்து பார்த்தார்கள். ‘இவர் தமிழகத்தின் சொத்து. நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என மருத்துவர்களிடம் அக்கறையோடு வைகோ கூறினார். உண்ணாவிரதம் இருந்தபோதும் நிறைய தலைவர்கள் வந்து பார்த்தார்கள்.’’

 ‘‘உங்கள் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லையே?’’ 

‘‘மனைவி, மகன், மகள்கள் வந்து பார்த்தார்கள். ஆவடியில் உள்ள என்னுடைய பேராசிரியர் தம்பி வந்து பார்த்தார். வசந்தகுமார் இப்போது தொகுதிக்குப் போயிருப்பதால், போனில் நலம் விசாரித்தார். தங்கை தன் குடும்பத்தினருடன் வந்து பார்த்தார். மகள் தமிழிசையின் கணவர் மருத்துவர் என்பதால், உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்ததோடு, இங்கிருக்கும் மருத்துவர்களிடமும் ஆலோசனை செய்தார்.’’

‘‘தமிழிசை சௌந்தர்ராஜன் வரவில்லையா?’’

‘‘அவர் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார். கட்சிரீதியாக அவருக்குப் பல்வேறு பணிச் சுமைகள் இருக்கும். அதனால் அவர் நேரில் வந்து பார்க்கவில்லை.’’ 

‘‘தந்தையும் மகளும் எதிரெதிர்க் கட்சிகளில்  இருப்பதால்தான், பொது இடங்களில் நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறதே?’’ 

‘‘அப்படியல்ல... இது என் உடல்நலம் தொடர்பான தனிப்பட்ட விஷயம். இதற்கும், அவர் நேரில் வராததற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்குமேல் இதுகுறித்துப் பேச விரும்பவில்லை....’’ என்றார் மெல்லிய புன்னகையுடன்.
பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசினோம். ‘‘மோடி வருகை, பண மதிப்பிழப்பு நாள் நிகழ்ச்சிகள் எனத் தொடர்ச்சியான பணிகளில் இருந்தேன். அதனால்தான், அப்பாவைப் பார்த்து  வரச்சொல்லி கணவரை அனுப்பிவைத்தேன். அவர் கொடுத்த தகவல்களை வைத்து அப்பாவின் உடல்நிலை பயப்படும்படியாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியேதான் நாங்கள் வெவ்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள். வீட்டுக்குள் அப்பா - மகள்தான். அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் உண்மையாக இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு நான் உண்மையாக இருக்கிறேன். பொது இடங்களில் நேரில் சந்திக்க நேர்ந்தால், தேவையற்ற சர்ச்சைகளைச் சிலர் கிளப்புகிறார்கள்’’ என்றார். 

‘‘அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது’’ என்கிறார் குமரி அனந்தன். அப்போலோவுக்கும் குளோபலுக்கும் ராமசந்திராவுக்கும் போகும் மாண்புமிகு மந்திரிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்களா? ‘‘தரமான மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் தரப்படுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுங்கள்” என்றெல்லாம் முழங்கும் சுகாதாரத் துறை அமைச்சர், தனியார் மருத்துவமனைக்குப் போகாமல் இருப்பாரா?

- த.கதிரவன் 
படம்: ஸ்ரீனிவாசுலு
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment