Sunday, November 12, 2017

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘‘நான் நிதியமைச்சராக இருந்தபோது, ரூபாய் நோட்டுகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று பிரதமர் உறுதியாக இருந்திருந்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்’’ என ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?


ரூபாய் நோட்டுகளை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்காது. அப்படியே இறங்கியிருந்தால்கூட, ப.சிதம்பரம் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்க மாட்டார். கிடைத்த பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்பாவி அல்ல ப.சி.!
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘தமிழக அரசியல் திசை திருப்பப்படுகிறது’’ என்று தமிழிசை கூறியிருக்கிறாரே?


எந்தத் திசை என்று சொல்லவில்லை. சரியான திசையா, தவறான திசையா? ஓ! அதனால்தான் விடாமல் மழை பெய்கிறதா?

அ.பரஞ்ஜோதி, கோடம்பாக்கம்.

அரசியலுக்கு வருவதற்கு கமல் பயப்படுகிறார் என்று கருதுகிறேன். சரிதானே?


ஓரளவு சரிதான். கட்சி ஆரம்பிக்க நாள், நட்சத்திரம் பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

கமல் என்ன எம்.எல்.ஏ-வா... ஆய்வுசெய்யக் கிளம்பிவிட்டாரே?


கமல், ஓர் இந்தியக் குடிமகன். அதனால், ஆய்வுசெய்ய அவருக்கு உரிமை உண்டு. நினைத்தால், நீங்களும் மக்கள் நலத் திட்டங்களை ஆய்வு செய்யக் கிளம்பலாம். 

எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள்தான் ஆய்வுசெய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘‘ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்’’ என்று தாராளமாகப் புகழ்கிறாரே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்?


ஜெயலலிதாவை இதைவிட யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. கொச்சைப்படுத்தியதும் இல்லை!
பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை-1.

‘‘நான் பச்சோந்தியாக இருந்ததில்லை’’ என்கிறாரே அமைச்சர் செங்கோட்டையன்?


திடீரென அப்படி ஏன் சொன்னாரென்று தெரியவில்லை. வழக்கமாக, அவர் இப்படிப் பேச மாட்டார். அதை மீறிப் பேசினாரென்றால் காரணம் இருக்கும்.

பரோலில் வந்த சசிகலாவிடம் சில அமைச்சர்கள் பேசினார்கள் என்று பரவிய செய்தியில், செங்கோட்டையன் பெயரும் சொல்லப்பட்டது. ‘அப்படியெல்லாம் நான் நிறம் மாறுபவன் அல்ல’ என்பதைச் சொல்ல வந்திருக்கலாம்.
இன்றைக்கு சசிகலாவை எதிர்ப்பவர்களாக நடித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி, பன்னீர் வகையறாக்களெல்லாம் ஒரு காலத்தில் சசிகலாவைப் பார்த்து நடுங்கிக்கொண்டு இருந்தவர்கள். அப்போது, சசிகலா குடும்பத்தை எதிர்ப்பவராக செங்கோட்டையன் இருந்தார். எனவே, ‘அன்றும் இன்றும் நான் சசிகலாவுக்கு எதிரிதான்’ என்பதைச் சொல்வதற்காக இப்படிச் சொன்னாரா? மொத்தத்தில், செங்கோட்டையன் ஆக்‌ஷன் கிங் ஆகப்போகிறார் என்பது தெரிகிறது.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.


பிரதமர் பெயர்கூடத் தெரியாதவரா அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?


அப்போலோவில் இட்லி சாப்பிட்டது ஜெயலலிதாவா, நர்ஸா என்பதுகூடத் தெரியாதவர்தான் திண்டுக்கல் சீனிவாசன்!

கே.வெங்கட், விழுப்புரம்.

மது விற்பனை இல்லாத தமிழகம், ஆயுத விற்பனை இல்லாத அமெரிக்கா - சாத்தியமா?


ஆயுத விற்பனை இல்லாத அமெரிக்காவை உதாரணமாகச் சொன்ன பிறகு, மது விற்பனை இல்லாத தமிழகம் எப்படி சாத்தியம் ஆக முடியும்?

‘மதுக் கடைகளை முற்றாக மூடுவோம், அதற்கு முன்னால் மது ஆலைகளை மூடுவோம்’ என்று ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வோ, ஆட்சியில் இருந்த தி.மு.க-வோ சொல்வதில்லை. எடப்பாடி, சில கடைகளை மூடினார்; பல கடைகளைத் திறந்தும்விட்டார். இப்படிப்பட்ட நாடகங்கள்தான் நடக்கும். தி.மு.க-வும் இதில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்று சொல்ல முடியாது. ‘மதுக் கடைகளை மூடுவோம்’, ‘ஒரு சொட்டு மதுகூட தமிழகத்தில் ஓடாது’ என்று சில கட்சியினர் சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்கள், ஆட்சிக்கு வர இயலாதவர்கள். தமிழக அரசியல் என்பது மதுவிலக்குப் பிரச்னையை மையம்கொண்டதாக மாறினால்தான் ‘மது விற்பனை இல்லாத தமிழகம்’ மலரும்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘‘தமிழகத்தில் டெங்கு இல்லவே இல்லை. கடவுள் அருளால் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்’’ என்கிறாரே அமைச்சர் கருப்பணன்?


தமிழ்நாட்டு மக்களை அந்தக் கருப்பண்ண சாமிதான் காப்பாற்ற வேண்டும்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ரேஷன் சர்க்கரை விலையைத் தமிழக அரசு இரட்டிப்பு ஆக்கியுள்ளதே?


மக்களின் நாக்கில் கசப்பைத் தடவுவதுதானே அரசாங்க நலத்திட்டங்களின் நோக்கம்!

வி.ஐ.பி கேள்வி!
நித்யானந்த் ஜெயராமன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்


தலைநகர் சென்னையின் பரப்பளவை எட்டு மடங்கு விரிவாக்கம் செய்யப்போவதாக அரசு அறிவித்துள்ளது. 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்போதைய சென்னையின் கட்டமைப்புகளையே கவனிக்க முடியவில்லை, சிறு மழைக்குக்கூட சென்னை தத்தளிக்கிறது. இந்த நிலையில், இது சாத்தியம்தானா?

எவ்வளவு பரப்பளவாக இருந்தாலும், எந்த அடிப்படையில் நிர்வாகம் செய்கிறார்கள் என்பதே அனைத்துக்கும் அடிப்படை. மக்கள்தொகை, நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிட வேண்டியது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்த அமைப்பு ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது; இருக்கும். பொதுப்பணித் துறை அமைச்சராக ஆவதற்கு எந்தளவுக்குப் போட்டி இருக்குமோ, அந்தளவு போட்டி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைக் கைப்பற்றுவதற்கும் இருக்கும். ஓர் அமைச்சருக்கு, சம்பாதிக்க முடியாத ஒரு துறை தரப்பட்டது. உடனே அவர், முதலமைச்சரிடம் போய் அழுதார். உடனே, ‘சரி... சி.எம்.டி.ஏ-வை வெச்சுக்கோ’ என்று கொடுத்தார். இப்படி தனி மனிதர்கள் வளர்வதற்காக அந்தத் துறை பயன்பட்டால், பிறகு எப்படி சென்னை வளரும்?

தொலைநோக்குத் தன்மையுடன் கூடிய திட்டமிடுதல், ஊழலும்  லஞ்ச முறைகேடுகளுமற்ற நிர்வாகம், அர்ப்பணிப்புடன் கூடிய அதிகாரிகள், விட்டுக்கொடுக்கும் தன்மையுடன் கூடிய மக்கள்... இந்த நான்கும் இணைந்தால் சென்னையைச் சீர் செய்யலாம். அதற்கான முயற்சிகளை உங்களைப் போன்றவர்கள் இறங்கிச் செய்ய வேண்டும்.

படங்கள்: க.பாலாஜி

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:   
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002  
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment