Tuesday, October 10, 2017

தற்கொலை... சரிந்ததா ஸ்ரீதர் சாம்ராஜ்ஜியம்?

‘‘சாகப்போறேன்னு சொல்லுறவன் சாகமாட்டான்...’’ - பலரிடமும் சொத்துகளை மிரட்டி வாங்கும்போதெல்லாம், தன் கூட்டாளிகளிடம் இப்படித்தான் சொல்வார் ஸ்ரீதர். காஞ்சிபுரத்தையே பயத்தில் உறைய வைத்த ஸ்ரீதர், முன்கூட்டி அறிவித்துவிட்டே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். போலீஸில் சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற நிலையில், வெளிநாடுகளில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஸ்ரீதர், கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வந்தபோது, காஞ்சிபுரத்தில் பலர் முன்கூட்டியே தீபாவளி கொண்டாடினர்.
ஸ்ரீதர் வளர்ந்தது எப்படி?

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பருத்திக்குன்றம் கிராமம்தான் ஸ்ரீதரின் பூர்வீகம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு என்றாலும் திறமைசாலி. அதிகப் பணம் சம்பாதித்து பெரிய பணக்காரனாக வேண்டும் என்று ஆசையில், கள்ளச்சாராயத் தொழிலில் இறங்கினார். அப்பகுதியில் மிகப்பெரிய கள்ளச்சாராய டீலராக இருந்த சக்ரவர்த்தி என்பவரிடம் தொழில் கற்றுக்கொண்ட ஸ்ரீதர், அவரின் மருமகனாகவும் ஆனார். அதன்பின்னர் சாராய வியாபாரத்தை வெளி மாநிலங்களுக்கும் அவர் விஸ்தரித்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ருசியைப் பிறகு புரிந்துகொண்ட ஸ்ரீதர், எளியவர்களின் சொத்துகளை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்தார். பணபலம், படைபலம், அதிகார பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி தொடங்கி கொலை வரை க்ரைம் ரேட் எகிறியது. 

வழக்குகளும் தலைமறைவும்!

அடுத்தடுத்து ஸ்ரீதர் மீது பாய்ந்த வழக்குகள், என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சத்தை அவருக்கு ஏற்படுத்தியது. 2006-ல் என்கவுன்டருக்குப் பயந்து மலேசியா சென்று சில வருடங்கள் வசித்த ஸ்ரீதர், பின்னர் மீண்டும் காஞ்சிபுரம் வந்து தன் குற்ற வரலாற்றைத் தொடர்ந்தார். 2012-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலர் நாராயணன் கொலை, அதே ஆண்டு சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் பயணித்துக்கொண்டிருந்த ரவுடி தேவராஜ் கொலை என ஸ்ரீதரின் ஆட்டம் அதிகரித்ததால் மீண்டும் என்கவுன்டர் செய்யும் முடிவுக்கு வந்தது காவல்துறை. 

இதை அறிந்த ஸ்ரீதர், துபாய்க்குத் தப்பியோடினார். இன்டர்போல் உதவியுடன் அங்கு அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால், இந்தியாவுக்கு அழைத்துவரப்படவில்லை. ஸ்ரீதர் வந்தால், அவருக்கு உதவிய சில காவல்துறை அதிகாரிகளும் சிக்குவார்கள் என்பதால், அவர் தப்பிக்கப் பல இடங்களிலிருந்து உதவிக்கரங்கள் நீண்டன. அவர், பிறகு துபாய் சிறையிலிருந்து வெளியேறி, அங்கேயே சுகபோகமாக வாழத்தொடங்கினார். 

ஸ்ரீதரைச் சந்திக்க அடிக்கடி துபாய் சென்றுவந்த மனைவி குமாரியும், மகள் தனலட்சுமியும் ஒருகட்டத்தில் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எனப் பல நாடுகளுக்குச் சுதந்திரமாகப் பறந்துகொண்டே இருந்த ஸ்ரீதர், அங்கிருந்தபடியே தன் ஆள்கள் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலை இங்கு செய்து வந்தார். பலகோடி மதிப்பிலான விவசாய நிலங்கள், வீடுகள் என மிரட்டி மிரட்டி வாங்கிக் குவித்தார்.
வளைக்கப்பட்ட குடும்பம்... முடக்கப்பட்ட சொத்துகள்!

2014-ல் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரீநாத் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு, ஸ்ரீதரைப் பிடிக்கும் முயற்சி விறுவிறுப்படைந்தது. ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்மீது வழக்குப் போட்டும், மிகமுக்கியமானவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தும் ஸ்ரீதரின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினார் ஸ்ரீநாத். ஸ்ரீதரின் 180 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தேடப்பட்டு வரும் குற்றவாளியாக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ஸ்ரீதரின் மனைவி குமாரி, மகள் தனலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. குமாரியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து இந்தியா வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர். சொத்துகள் முடக்கப்பட்டதால் சொகுசு வாழ்க்கைப் பறிபோனது. ஸ்ரீதருடன் தொடர்பில் உள்ளவர்களைக் கைதுசெய்வதும், எச்சரிப்பதுமாக அதிரடிகளை ஸ்ரீநாத் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஸ்ரீநாத் பதவிஉயர்வு பெற்றுச் சென்றபோது, காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்தார். இதனால் போனில் பேசுவதைக்கூட குறைத்துக் கொண்டார் ஸ்ரீதர். 

கொதிப்படைய வைத்த குடும்ப உறவுகள்

காஞ்சிபுரத்தில் இருந்த காலத்தில், பெண் ஒருவருடன் ஸ்ரீதருக்குத் தொடர்பு இருந்தது. ஸ்ரீதரின் மூத்த மகள் தனலட்சுமிக்கும் அந்தப் பெண்ணின் மகனுக்கும் ஏற்பட்ட நெருக்கம், ஸ்ரீதரை மனம் நோக வைத்தது. இதேபோல் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார், மற்றொரு மகள் சாருமதி ஆகியோரின் வாழ்க்கைமுறையும் ஸ்ரீதருக்கு நெருடலை ஏற்படுத்தின. தன் மகனும், மகள்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியே சொத்துகளைச் சேர்த்தார் ஸ்ரீதர். ஆனால், அந்தப் பணத்தாலேயே அவர்களின் வாழ்க்கை மாறியதுதான், ஸ்ரீதருக்குப் பெரும் அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கொலைக்குத் தள்ளிய மனஅழுத்தம்!  

கம்போடியா சென்று தலைமறைவாக இருந்த ஸ்ரீதர், அக்டோபர் 4-ம் தேதி அய்யம்பேட்டையைச் சேர்ந்த சம்பத் என்ற டிரைவரிடம் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார். அப்போது, இதையெல்லாம் விவரித்திருக்கிறார் சம்பத். ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீதருக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. இது தொடர்பாக குடும்பத்தினரிடம் ஸ்ரீதர் பேசியபோது, அவர்கள் எதையும் மறுக்கவுமில்லை; ஸ்ரீதரை மதிக்கவுமில்லை. தன்மீது இருந்த பயம் தன் குடும்பத்துக்குப் போய்விட்டதை ஸ்ரீதர் உணர்ந்தார். 

அதே நேரத்தில் ‘இந்தியா வந்து சரணடைந்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. தற்கொலை செய்துகொண்டால் கிரிமினல் வழக்குகளையெல்லாம் முடித்துவிட முடியும். தனது சொத்துகளை ஓரளவு காப்பாற்ற முடியும்’ என நினைத்தார் அவர். 

ஸ்ரீதருடன் மணி என்கிற தெய்வேந்திரன் என்ற சமையல்காரர் தங்கியிருந்திருக்கிறார். அவர்தான் ஸ்ரீதருக்குக் கடைசி காலத்தில் உதவியாக இருந்தவர். தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, தன் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமனுக்கு இரவு 8.30 மணிக்குத் தகவல் சொன்ன ஸ்ரீதர், செல்போனில் பேசிப் பதிவுசெய்த வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் மகள் தனலட்சுமிக்கு அனுப்பினார். தயாராக வைத்திருந்த சயனைடை எடுத்து உட்கொண்டார். இரவு 9.30 மணிக்கு ‘ஸ்ரீதர் தற்கொலைசெய்துகொண்டார்’ என்ற செய்தி காஞ்சிபுரம் முழுவதும் பரவத் தொடங்கியது. ஸ்ரீதர் இறந்ததை உறுதிப்படுத்த, செல்போனில் அவரைப் படமெடுத்து வாட்ஸ்அப்பில் தனலட்சுமிக்கு மணி அனுப்பினார்.
தனது அத்தியாயத்துக்குத் தானே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்ரீதர்.

- பா.ஜெயவேல்

உடலைப் பார்க்காமல் நம்ப மாட்டோம்!

ஸ்ரீ
தரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர மகன் சந்தோஷ்குமார், மகள் தனலட்சுமி மற்றும் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் ஆகியோர் கம்போடியா சென்றிருக்கிறார்கள். ஸ்ரீதர் குடும்பத்திடம் பணம் இல்லாததால், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர்தான் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஸ்ரீதருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருப்பதால், போலி பாஸ்போர்ட் மூலம் கம்போடியா சென்றிருக்கிறார் ஸ்ரீதர். இதனால், உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் இருக்கும் எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

“ஒன்பது கொலை வழக்குகள் உட்பட 38 வழக்குகள் ஸ்ரீதர்மீது இருக்கின்றன. இதனால் அவரின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் கொடுத்த பிறகே, பெரும்பாலான வழக்குகள் முடிவுக்கு வரும். ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்பதைக் கைரேகை மற்றும் டி.என்.ஏ சோதனைக்குப் பிறகே உறுதிப்படுத்துவோம். குற்றச் செயலில் தொடர்புடைய மற்றவர்கள்மீதான வழக்குகள் தொடரும்’’ என எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தெரிவிக்கிறார். ஸ்ரீதரின் உடலைப் பார்க்கும்வரை, இந்தத் தற்கொலையை போலீஸ் உயரதிகாரிகள் நம்புவதாக இல்லை.

ஸ்ரீதர் இறந்த தகவல் கிடைத்ததும் அதை உறுதிப்படுத்த காவல்துறையினர், ஸ்ரீதரின் ஆதரவாளர்களுக்கு போன் செய்தார்கள். ஆனால், எல்லோருடைய மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. போலீஸார் நேரடியாகச் சென்று விசாரித்தபோது, ‘‘சக கூட்டாளிகளின் உத்தரவால் எல்லோரும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறோம்’’ என்றார்களாம்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment