Tuesday, October 10, 2017

உயிரைவிடவும் பணம் பெரிது! - அமெரிக்காவின் துப்பாக்கி சரித்திரம்

‘துப்பாக்கிகள் மனிதர்களைக் கொல்லவே படைக்கப்பட்டவை’ என்பதை அடிக்கடி உணர்த்திக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. லேட்டஸ்ட் துயரம், ஸ்டீபன் படோக்கின் ஆட்டோமேட்டிக் துப்பாக்கித் துப்பிய தோட்டாக்களுக்கு இரையான 58 மனித உயிர்கள். அதில், 500 பேர் காயமடைந்துள்ளார்கள். 

சின்னச்சின்ன காரணங்களுக்காகக்கூட துப்பாக்கியைத் தூக்கும் மனிதர்கள் நிறைந்த தேசம் அது. ‘வேலையைப் பறித்துவிட்டார்கள்’ என்று நிறுவனத்தில் உள்ள 14 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளான் ஓர் இளைஞன். தனது வாகனத்தைச்  சரிசெய்யக் கொடுத்த இடத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னக்காக, எட்டுப்  பேரைச் சுட்டுக்கொன்றுள்ளார் ஓர் ஆசிரியர். வெறுப்பு அரசியலும், இன துவேஷமும் திட்டமிட்டு வளர்க்கப்படும் இன்றைய சூழலில், அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரம் அங்குள்ள இந்தியர்களுக்கும் ஆபத்தாக வளர்ந்து நிற்கிறது.
‘உங்களின் அடிப்படைத் தேவை என்ன?’ என்று இந்தியாவில் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் என பதில் வரும். இதையே ஓர் அமெரிக்கரிடம் கேட்டால், ‘பேச்சு, மதம், துப்பாக்கி’ என்று பதில் வரும். இந்தியா போன்ற நாடுகளில் துப்பாக்கி வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், அமெரிக்காவில் அனுமதியுடன் சொந்தமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 74 சதவிகிதம் பேர். அமெரிக்கர்கள் வேட்டையாடுவதில் ஆர்வமுள்ளவர்கள். அதற்கான தேவையாக ஆரம்பித்ததுதான் துப்பாக்கி. உலகின் பிற நாடுகளில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் சராசரியைவிட, அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூ சம்பவங்கள் 25 சதவிகிதம் அதிகம். நம் ஊரில் எலக்ட்ரானிக் பொருள்கள் விற்கும் சந்தை போன்றது, அமெரிக்காவின் துப்பாக்கிச் சந்தை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்டுக்கு சராசரியாக அமெரிக்காவில் 300 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தாலும்,  துப்பாக்கி என்பது எளிதில் கிடைக்கும் அத்தியாவசியப் பொருளாகவே அமெரிக்காவில் உள்ளது. துப்பாக்கி வைத்திருப்பதை அரசும் தடுக்கவில்லை. 

கடந்த 68 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிச்சூடுகளை எடுத்துக்கொண்டால், 32 சம்பவங்களில் 23 தருணங்களில் கொலையாளி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த மோசமான துப்பாக்கிச்சூடுகள் அனைத்தும், தனிமனிதத் தாக்குதல்களாகவே இருந்துள்ளன. அங்கீகார நிராகரிப்பு, வேலை-குடும்பச் சமநிலையைச் சமாளிக்க முடியாமல் வரும் கோபம், இயலாமையின் வெளிப்பாடு எனத் தனிநபரைத் தூண்டும் செயல்கள்தான் பெரும்பாலான துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணமாகியுள்ளன.

சில நிகழ்வுகள் இதோ...

2016, ஜூன் 12, ஒமர் சாதிக் மாடீன் எனும் 29 வயது நபர், ஓர்லாண்டோவில் இரவு விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 49 பேர் உயிரிழந்தனர். மாடீனையும் போலீஸ் சுட்டு வீழ்த்தியது.

2010, ஆகஸ்ட் 3, மான்செஸ்டரில் த்ரான்டன் என்பவர், ஹர்ட்போர்டு நிறுவனத்தில் மதுபான பாட்டில்களைத் திருடி விற்றதற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவர், எட்டுப் பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1990, ஜூன் 18, ஃப்ளோரிடாவில் ஜேம்ஸ் போக் என்பவர், கடனைத் திரும்பச் செலுத்தாததால் அவரது காரைப் பிடுங்கிக்கொண்ட நிறுவனத்துக்குள் நுழைந்து ஒன்பது பேரைக் கொன்றார். அவரும் தற்கொலை செய்து கொண்டார். 

இப்போது நடந்திருக்கும் லாஸ் வேகாஸ் தாக்குதலும், தனி மனிதத் தாக்குதல்தான். ஸ்டீபன் படோக், சூதாட்ட கிளப்களில் பணத்தை வாரி இறைக்கும் பெரும் பணக்காரர். வேட்டைக்காரர். ‘இப்படி மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் ஆள் இல்லை அவர்’ என்று அவரின் சகோதரர் கூறுகிறார். அவர் ஏன் இந்த மனநிலைக்கு வந்தார் என்பதும், இவ்வளவு பேரை ஏன் சுட்டார் என்பதும், அனைத்து துப்பாக்கிச்சூடு வழக்குகளையும் போலவே மர்மம் நிறைந்ததாக உள்ளது.
துப்பாக்கிச்சூடுகளின் தாக்கம் மற்றும் அமெரிக்காவில் நிலவும் பாதுகாப்பு குறித்து அங்கு பணிபுரியும் ஐ.டி ஊழியர் அருண்குமாரிடம் கேட்டோம். ‘‘உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப்பின், அமைப்பு சார்ந்த தாக்குதல்கள் நடக்காமல் இருக்கும் அளவுக்குப் போதிய பாதுகாப்பை அமெரிக்க அரசு செய்து வைத்துள்ளது. ஆனால், தனிமனிதத் தாக்குதல்கள்தான் அதிகமாக நடக்கின்றன. இங்கு வேலைபார்ப்பவர்களின் வேலைப்பளு என்பது மற்ற நாடுகளைவிட அதிகம். பிரஷரான வேலை, சரியான வொர்க் - லைஃப் பேலன்ஸ் இல்லாதது என ஒருவரை எளிதில் விரக்தியடையச் செய்யும் காரணிகள் அதிகம். இவைகூட, இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாம்’’ என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவும் இதுபோன்ற ஒரு விபரீதத்தை முன்பு சந்தித்தது.1996-ம் ஆண்டு நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டபோது, அந்த நாட்டு அரசு விழித்துக்கொண்டது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிகளைக் கடுமையாக்கியது. அவசியமில்லாமல், லைசென்ஸ் பெற்று மக்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை விலைக்கு வாங்கிக்கொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்தது. சுமார் ஆறரை லட்சம் துப்பாக்கிகள் இப்படி வாங்கப்பட்டன. இப்போது ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி என்பது அப்பாவிகளின் உயிரைப் பறிக்கும் ஆபத்தான ஆயுதம் இல்லை.

அமெரிக்காவும் இப்படி மாற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ‘துப்பாக்கிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என 75 சதவிகித அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். ‘ஒருவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டால், அவரின் பின்னணியை ஆராய வேண்டும். தவறான பின்னணி கொண்டவர்களின் கைகளுக்குத் துப்பாக்கி போகக்கூடாது. எவருக்குமே, கேட்ட உடனே லைசென்ஸ் கொடுத்துவிடக் கூடாது’ என ஏகப்பட்ட விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.

ஆனால், அவை எதுவுமே சாத்தியமல்ல என்பதுதான் சுடும் நிஜம். தேசிய ரைஃபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் போன்றவை, துப்பாக்கிக் கட்டுப்பாட்டை எதிர்த்து கடுமையாக லாபி செய்கின்றன. இதற்காக அரசியல்வாதிகளுக்கு வெளிப்படையாகவே அவை பணம் கொடுக்கின்றன. அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 435 பேரில், 232 பேர் இவர்களிடம் நன்கொடை பெற்றவர்கள். இவர்களைத் தாண்டி, துப்பாக்கி விற்பனையை எப்படி அரசு தடுக்கும்? 

துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உயிரைவிடவும் பணம் பெரிது. 

- ச.ஸ்ரீராம்  
இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment