Tuesday, October 10, 2017

கொத்துக் கொத்தாக சாகும் குழந்தைகள்... விழாவில் எடப்பாடி!

டெங்கு கல்லறையான முதல்வரின் மாவட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது டெங்கு. அங்குதான், தமிழகத்திலேயே பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம். கொத்துக்கொத்தாக குழந்தைகள் செத்துக்கொண்டிருக்க, அதே சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஆடலும் பாடலுமாகக் கொண்டாடி  குதூகலிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் அழுகையும் கூக்குரலுமாக இருக்கிறது.  டெங்கு காய்ச்சலுடன் அட்மிட் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு குளுக்கோஸ் போடுவது முதல் அனைத்தையும் உறவினர்களே செய்கிறார்கள். தன் மகளுக்கான குளுக்கோஸ் இணைப்பைக் கழற்றிக்கொண்டிருந்த ஜே.பி. என்பவர், ‘‘நான் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர். என் இரட்டைக் குழந்தைகளான வினோத், வினோதினி இருவருக்கும் டெங்கு காய்ச்சல். நான்கு நாட்களாக இங்கு இருக்கிறோம். குளுக்கோஸ் முடிந்து விட்டால் கழற்றுவதற்குக்கூட யாரும் வருவதில்லை’’ என்றார்.

மணிமேகலை என்பவர், ‘‘என் நான்கு வயது மகள் பவ்யஸ்ரீக்குத் தொடர்ந்து காய்ச்சல்.  தம்மம்பட்டியிலிருந்து வந்திருக்கேன். ‘ஆத்தூர் மருத்துவமனைல சேர்க்காம இங்கு ஏன் கொண்டுவந்தீங்க. குழந்தை செத்துப்போனா எங்கமேல பழிபோடுறதுக்கா?’ என்று நர்ஸ்கள் திட்டுகிறார்கள். குழந்தைகளை டாக்டர்கள் வந்து பார்ப்பதில்லை. ஒரு படுக்கையில் மூன்று குழந்தைகளைப் படுக்க வைக்கிறார்கள். தினமும் நிறைய குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கிறது’’ என்றார்.
மருத்துவமனை வராண்டாவில் அழுதுகொண்டிருந்த செல்வி, ‘‘எனக்கு சேலம் கன்னங்குறிச்சி. குழந்தை பிறந்து ஒரே வருஷத்தில என் கணவர் இறந்துட்டார். அதன்பிறகு இந்தக் குழந்தைதான் உலகம்னு வாழ்ந்தேன். என் பையன் சந்தோஷுக்கு ஆறு வயசு. ஒரு மாசமா காய்ச்சல். இங்க கொண்டாந்து சேர்த்தேன். விடிய காத்தால நாலு மணிக்கே இறந்துட்டதா சொன்னாங்க. ஆனா, சாயந்திரம் நான்கு மணி ஆகியும் குழந்தையைக் கொடுக்கலை. டாக்டரிடம் கேட்டா, ‘மூளை, கிட்னி, இதயம் பாதிச்சிருக்கு. பிழைக்க வாய்ப்பில்லை. இன்னும் பத்து பர்சென்ட் உயிர் இருக்குது. செக் பண்ணிட்டு தர்றோம்’னு சொல்றாங்க. யாரும் பிரச்னை செய்யக்கூடாதுன்னு, இறந்துபோன குழந்தைகளை ராத்திரியில தான் தர்றாங்க’’ என்று தேம்பித் தேம்பி அழுதார். இவர் சொன்னதைப்போலவே, இவரின் குழந்தையின் உடலை இரவில்தான் கொடுத்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. இடையில் குறைந்தது, இப்போது அதிகரித்துள்ளது. முடிந்த அளவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக மாநகர் முழுவதும் குழிதோண்டியதும், குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதும், கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெற்று வருவதும், குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாகத் தண்ணீரைச் சேமித்து வைப்பதும் டெங்கு கொசுக்கள் பெருகக் காரணமாகி உள்ளன. அதைச் சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.

முதல்வரின் மாவட்டத்திலேயே இப்படியென்றால், மற்ற இடங்களை நினைக்கவே நடுங்குகிறது. 

- வீ.கே.ரமேஷ், 
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

தற்கொலை சோகம்!

சி
கிச்சை பலனின்றி பலர் இறக்கும் துயரம் ஒருபக்கம் என்றால், டெங்குவால் தற்கொலையும் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சலவைத் தொழிலாளி. இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பூங்கொடிக்கும், குழந்தை சர்வினுக்கும் தொடந்து காய்ச்சல். அக்கம் பக்கத்தினர், ‘‘இது டெங்கு அறிகுறிபோல இருக்கிறது. சேலத்துக்குச் சென்று பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தான் நீயும், உன் குழந்தையும் பிழைக்க முடியும்’’ என்று கூறியிருக்கிறார்கள்.  மனமுடைந்த பூங்கொடி, அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை தன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையைப் போட்டுவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ‘மர்மக் காய்ச்சலால் இறந்துவிட்டார்’ என முதல்வரோ, அமைச்சர்களோ இதைச் சொல்ல முடியாது.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment