Tuesday, October 10, 2017

“என்னைக் கொலைகாரன் என்றார்கள்... அவர்களை ரத்தப்பிசாசுகள் என்றேன்!”

ஜெனீவாவில் நடந்ததை விவரிக்கும் வைகோ
ஜெனீவாவில் வைகோ மிரட்டப்பட்ட காட்சி, மனித உரிமைப் பேரவை மாநாடுகளில் இதுவரை நடக்காதது. அதேநேரத்தில், வெறும் சடங்குபோல நடக்கும் அந்த மாநாடு முதன்முதலாக உணர்ச்சிபூர்வமாகவும் நடக்க, வைகோவின் செயல்பாடுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. உலக அளவில் ஈழத்தமிழர் பிரச்னை கவனம்பெற இது காரணமானது. பத்து நாள்கள் பல்வேறு அமர்வுகளில் பங்கெடுத்து, ஈழப்பிரச்னையை விளக்கிவிட்டு வந்திருக்கும் வைகோவைச் சந்தித்தோம்.
‘‘நீண்டகாலத்துக்குப் பிறகு ஜெனீவா சென்றுள்ளீர்களே?”

‘‘ஆமாம். 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றுள்ளேன். 2001 ஏப்ரல் 3-ம் தேதி ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கட்டடத்துக்கு முன்னால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பேரணி நடத்தினார்கள். அதில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று தம்பி பிரபாகரன் கட்டளையிட்டார். அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான்கு முறை என் விசா விண்ணப்பம் தள்ளுபடியானது. இப்போது, ‘தமிழ் உலகம்’ எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பில் ஜெனீவா கூட்டங்களில் பேசுமாறு அழைத்தார்கள். விசாவுக்கு விண்ணப்பித்து 25 நாள்களாகியும் பதிலில்லை. திடீரென, கடைசி நாளில் விசா கிடைத்தது. அவசரமாகப் புறப்பட்டு செப்டம்பர் 18-ம் தேதி ஜெனீவா சென்றேன். ஐ.நா அலுவலகம் முன்பாக உள்ள முருகதாசன் திடலில் பேரணியில் கலந்துகொள்ள முடிந்தது. உண்மையில் திடீரென கிடைத்த வாய்ப்புதான் இது!” 

‘‘மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் என்ன மாதிரியான வாதங்களை வைத்தீர்கள்?”

“இரண்டு வாரங்கள் தங்கியிருந்து 11 கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினேன். ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அரசுகளின் பிரதிநிதிகளுக்கு தலா மூன்று நிமிடங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தலா இரண்டு நிமிடங்களும் பேசுவதற்காக முன்பு தருவார்கள். இப்போது அரசுசார்பற்ற பிரதிநிதிகளுக்கு ஒன்றரை நிமிடங்களாகக் குறைத்து விட்டார்கள். உரையை, காலை 9 மணிக்குள் அனுப்ப வேண்டும். அதை ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா, சீனம், ஸ்பானிஷ், உருது ஆகிய ஆறு மொழிகளில் மொழிபெயர்த்துச் சொல்வார்கள்.

நான் பேசிய 10 பேச்சுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்லியதாகவே நினைக்கிறேன். ‘இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலையே’ என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தேன். இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு ஆதரவாக 2009 மே 28-ம் தேதி இதே அவையில் பாராட்டுத் தீர்மானம் போடப்பட்டது. ‘அது தமிழர்களுக்கு எதிரானது’ எனக் குறிப்பிட்டேன். ‘அந்தந்த நாட்டுச் சட்டத்தின்படி, மனித உரிமைகளைப்  பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்து கடைசியாக ஆயுதக்கிளர்ச்சியை நாடுவதற்கு மக்கள் தள்ளப்படுவார்கள்’ என ஐ.நா-வின் கொள்கைக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். 

 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னாலிருந்து இந்திய அரசு இயக்கியிருக் கிறது. மிகக்கொடூரமாக இலங்கைப் படையினர் நடந்துகொண்டனர்  என்றதை ஆதாரங்களுடன் எடுத்துவைத்தேன். இதுதொடர்பாக ஐ.நா-வின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை ஆகியன இணைந்து, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.” 

‘‘நீங்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்குச் சாத்தியம் இருக்கிறதா?”

‘‘என்னுடைய 52 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் செய்ததாகவோ, மகிழ்ச்சியடைவதாகவோ சொல்லிக்கொள்ளும் ஒரு வேலை என்னவென்றால், இதைக் கூறுவேன். ஐ.நா-வின் கொள்கைக் குறிப்பிலேயே, உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டத்தில் அயர்லாந்து நாட்டின் பசுமைக்கட்சியின் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில்தான் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனச் சொன்னேன். அதை இங்கும் பதிவு செய்தேன். பொதுவாக்கெடுப்பு என்பது தமிழ் ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரிடமும் நடத்தப்பட வேண்டும். விரைவில் அதற்கான காலம் கனியும்!”
‘‘இந்தப் பிரச்னையில் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?”

‘‘ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சி, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கைகளில்தான் எனத் தம்பி பிரபாகரன் சொல்லியிருக்கிறார். புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் எல்லோரும் தம் பிள்ளைகளுக்குத் தமிழரின் வீரப் போர்களைப்பற்றி, வெற்றிகளைப்பற்றி எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள், அந்தந்த நாட்டு அரசுகளிடம் பொதுவாக்கெடுப்புக்காக அழுத்தம் கொடுக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும். அந்தந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உணரவைக்க வேண்டும். இப்போது இலங்கைத் தீவில் கலாசாரப் படுகொலை அரங்கேற்றப்படுகிறது. இதை, அனைத்துலக அரசுகளுக்கும் புரியவைத்தால் பொதுவாக்கெடுப்பு சாத்தியமாகும்.” 

‘‘ஐ.நா வளாகத்தில் சிங்களர்கள் உங்களைத் தாக்க வரும் அளவுக்கு எப்படிப் பிரச்னை ஏற்பட்டது?”

‘‘மனித உரிமைக் கவுன்சில் கட்டடத்தில் முதல் இரண்டு நாள்களும் பேசியபோது சிங்களத் தரப்பினர் யாரும் தொல்லை தரவில்லை. மர்சூகி தருஸ்மன் தலைமையிலான ஐ.நா-வின் மூன்று நிபுணர் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டதை வைத்தே, இனப்படுகொலை குறித்து விசாரிக்க முடியும் என்பதைக் கூறினேன். மறுநாள் இலங்கை பிரதமர் ரணில், ‘இலங்கையில் ஒரே தேசமாக வாழவே மக்கள் விரும்புகிறார்கள்’ என்று அறிக்கை விட்டார். புதன்கிழமையும் பேசினேன். ‘ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ், பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும்’ என்றும், அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், 90 ஆயிரம் விதவைப் பெண்களின் துன்பத்தையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றியும் பேசினேன்.  

பேசிவிட்டு வந்ததும் என்னிடம் வந்த சிங்களப் பெண் ஒருவர், ‘வெளியிலிருந்து எங்கள் நாட்டுக்கு விசாரிக்க வருமாறு சொல்ல நீ யார், பாதிக்கப்பட்டவர்களின் உறவினரா?’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘எங்கள் தொப்புள்கொடி  உறவுகளான ஈழத்தமிழர்களுக்காகப் பேசுவதை நீங்கள் தடுக்க முடியாது. உறவே இல்லை என்றாலும் அவர்களுக்கான ஆதரவுக் குரலை நிறுத்தமாட்டோம்’ என்றேன். சரத் வீரசேகர என்பவர் தலைமையில் வந்தவர்கள், ‘நீங்கள் எல்.டி.டி.இ கொலைகாரர்களின் ஆதரவாளர்கள்’ எனக் கத்தியதும், நானும் பதிலுக்கு, ‘ நீங்கள் எங்கள் தமிழர்களைக் கொன்ற ரத்தவெறி பிடித்த பிசாசுகள். எங்கள் பச்சைக்குழந்தைகளை, சிறுபிள்ளைகளைக் கொன்று குவித்தீர்கள்’ என்றேன். அவர்கள் என்னைத் தாக்க முயற்சி செய்தார்கள். அதற்குள் இயக்குநர் கெளதமன் போன்றவர்கள் அருகில் வந்துவிட்டார்கள். ஐ.நா போலீஸார் வந்ததால் தப்பித்தேன். 

 பொதுவாக இப்படி மனித உரிமைக் கவுன்சிலில் வாக்குவாதம் செய்யக்கூடாது; வீடியோ எடுக்கக்கூடாது. வாக்குவாதத்தில் நான் பேசியதை மட்டும் சிங்களர்கள் வீடியோ எடுத்தனர். அதை ஐ.நா போலீஸார் கைப்பற்றி அழித்தனர். மறுநாள் நான் பேசியபோது, வீடியோவை மறைப்பது மாதிரி அமர்ந்தனர். என்னை அடித்துவிட்டதாகவே, இலங்கை டி.வி-க்களில் செய்தி சொன்னதாகக் கேள்விப் பட்டேன். உலகப் பிரச்னையாக இதனை மாற்றுவதற்கான என் பயணம் தொடரும்”

- இரா.தமிழ்கனல், படம்: ப.சரவணகுமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment