Friday, August 18, 2017

கோட்டையை உடைக்கும் தினகரன்!

கோட்டையை உடைக்கும் தினகரன்!

ஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்...

மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனும் மேலூர் வந்து கட்சிக்காரர்களை முடுக்கி விட்டார். டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மதுரை பப்பீஸ் ஹோட்டலைச் சசிகலா குடும்பமே வளைத்துப்போட்டதுபோல் தோற்றம் அளித்தது. ஹோட்டலைச் சுற்றி உளவுத்துறையினர் நோட்டமிட்டு, யார் யார் வருகிறார்கள் என நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.

மதுரை, தேனி என பல மாவட்டங்களில் தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் கிளைச் செயலாளர்கள் பலர் மூலம் கூட்டம் திரட்டப் பட்டது. எல்லா செலவுகளையும் சசிகலா குடும்பமே ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.  

முதலில் இந்த நிகழ்ச்சிக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்காமல் அமைதி காத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்டு அனுமதி வாங்கினர். அதன் பிறகுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற எல்லாவற்றையும், ஓர் அரசு விழாவுக்குச் செய்வது போன்றே போலீஸ் செய்தது.

கூட்டம் சேர்ந்துவிட்ட தகவல் தெரிந்து, மாலை 5 மணிக்கு மேல்தான் தினகரன் ஹோட்டலில் இருந்து கிளம்பினார். ஹோட்டலில் இருந்து மேலூர் 30 கி.மீ தூரம். வழிநெடுக கிராமங்களில் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். கூட்டம் நடக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்த நேரத்தில், கிட்டத்தட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் தினகரன்.

அதிகம் பேரைப் பேசவிடாமல், ஆரம்பத்திலேயே மைக் முன் வந்துவிட்டார் தினகரன். செங்கோல், வீரவாள் எல்லாம் வாங்கிக்கொண்டு அவர் பேச ஆரம்பித்தார். தன்னை ஒதுக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி அணியை அவர் வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுத்தார். ‘ஃபோர்ஜரி’, ‘420’, ‘ஆணவம்’, ‘தலைக்கனம்’, ‘மடியில் கனம்’, ‘அட்டைக்கத்தியைச் சுற்றுபவர்கள்’ என்று சிரித்த முகத்தோடு சீற்றம் காட்டினார்.

‘‘நமது கட்சித்தொண்டர் ஒருவர் பேசிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தான் நெல்லையில் இருந்து வருவதாகவும், இந்தக் கூட்டத்துக்கு வரும் பலருக்கும் தொந்தரவு கொடுத்துத் தடுப்பதாகவும் கூறினார். இப்படி இடையூறு செய்துவருகின்றனர். பஸ்களில் வருவதற்கு அனுமதி வழங்காமல் தடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தினர் இங்கு வருவதற்கு விடுப்பு கேட்டுள்ளனர். ‘வேலையை விட்டு விலக்கி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.

கோட்டையை உடைக்கும் தினகரன்!

இதற்கெல்லாம் யார் காரணம்? 30 பேரைச் சேர்த்துக்கொண்டு தலைமைச் செயலகத்தில் கண்களை மூடிய நிலையில் செயல்படுகின்றனர். எம்.எல்.ஏ-க்களை கடத்திக்கொண்டு போய் சென்னையில் ஒளித்துவைத்துள்ளனர். அவர்கள் மூலமே, ஒளித்துவைத்தவர்கள் ஒழிக்கப் படுவார்கள்.  அறைக்குள் இருந்து சொகுசாகத் தீர்மானம் போடுபவர்கள் இப்போது சற்று யோசித்துப்பார்த்தால் தெரியும்... அம்மாவிடம் யார் அவர்களை அறிமுகம் செய்துவைத்ததென்று.

கோட்டையில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அபகரித்துக்கொண்டு கொல்லைப்புற வழியாகச் சென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள். மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள். மக்கள் நலன் கருதித் திட்டங்கள் தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு ஃபோர்ஜரி வேலையைச் செய்யக் கூடாது. எம்.எல்.ஏ-க்களை விட தொண்டர் படைதான் பெரிது’’ என்ற தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தையும் விட்டு வைக்கவில்லை.

‘‘அம்மாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும், நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படி நீதி விசாரணை நடத்தினால் அவர்கள்தான் மாட்டுவார்கள். நீதி விசாரணைக்கு நான் தயார். நீதி விசாரணை நடத்த நானும் கோரிக்கை வைக்கிறேன். தர்ம யுத்தம் நடத்துவோம் என்று தர்மத்துடனே யுத்தம் நடத்துகின்றனர்’’ என்று பேசினார் தினகரன்.

கோட்டையை உடைக்கும் தினகரன்!

தங்களுக்கு இவ்வளவு பிரச்னைகளையும் கொடுக்கும் பி.ஜே.பி-யைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது குறித்து பலரும் தினகரனிடம் வருத்தப்பட்டார்கள். “நாம் பி.ஜே.பி-யை எதிர்க்கும் நேரம் இதுவல்ல. தொண்டர்கள் செல்வாக்குத் தங்களுக்குத்தான் எனச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் வார்த்தைகளை இனி பி.ஜே.பி நம்பாது. உண்மையான மக்கள் செல்வாக்கு நமக்குத்தான் என்பது இப்போது உறுதியாகிவிட்டது” எனச் சொல்லியிருக்கிறார் தினகரன். ஆனாலும், ‘பி.ஜே.பி-க்கு எதிராகப் பாய்ச்சல் காட்டுவார்’ என எதிர்பார்த்து வந்த கூட்டத்துக்கு தினகரன் ஏமாற்றத்தையே கொடுத்தார் என்கிறார்கள் கட்சியினர்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment