கிணற்றில் போட்ட கிரானைட் கல்லாகக் கிடக்கிறது சகாயம் விசாரணை கமிஷன் கொடுத்த அறிக்கை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தரப்பட்ட அந்த அறிக்கை, அரசுக்கு வரவில்லை. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சகாயத்துக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்ததாகச் செய்தி பரவியது. இந்த நிலையில் சகாயத்தைச் சந்திக்கச் சென்றோம். ‘‘நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் நான் எதுவும் பேசக் கூடாதே... இந்த நேரத்துல நான் பேசணுமா?’’ என்று வந்து அமர்ந்தவர், தயக்கத்துடனும், சில கட்டுப்பாடுகளுடனும் நம் கேள்வியை எதிர்கொண்டார்.
‘‘உங்களுக்கு மீண்டும் கொலை மிரட்டல்கள் வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றனவே?”
‘‘கிரானைட் முறைகேடு தொடர்பாக என் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டேன். 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அந்த அறிக்கையுடன் சமர்ப்பித்திருக்கிறோம். வழக்கும் முடியும் சூழலில்தான் இருக்கிறது. வழக்கமாக எனக்கு வருகிற மிரட்டல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ‘உன்னை பீஸ் பீஸா வெட்டி கிரானைட் குவாரியிலேயே புதைத்துவிடுவோம்’ என்ற அளவிற்கும் மிரட்டல் வந்திருக்கிறது. அது வரத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தவில்லை. இந்த விசாரணையில் எனக்கு மிகவும் உதவிய கிராமத்து இளைஞர் சேவற்கொடியோனுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும், என்னுடன் சேர்ந்து பணியாற்றிய பார்த்தசாரதி என்பவரது மரணத்தில் சந்தேகம் இருப்பது பற்றியும்தான் முறையிட்டிருந்தேன். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆணையம் செயல்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும். பாதுகாப்பும் அவர்கள் சம்பந்தப்பட்டது அல்லவா?”
‘‘சேவற்கொடியோனுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறதா?”
‘‘ஆம். அவர் மிகுந்த தைரியத்தோடு என்னுடன் தோள்கொடுத்து நின்றார். மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து அவர் என்னுடன் காடுகளிலும் மலைகளிலும் அலைந்தார். பல தொல்லைகளை அவருக்குக் கொடுக்கிறார்கள். திடீரென அவருடைய வீடு தீப்பற்றி எரிகிறது. கொலை மிரட்டல்கள் தொடர்கின்றன. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்புகூட வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இதற்காகவே நீதிமன்றத்தில் முறையிட்டேன். அவரை பாதுகாக்கவேண்டிய அவசியம் எனக்கு அதிகம் இருக்கிறது.”
‘‘விசாரணையில் உங்களுக்கு உதவிய பார்த்தசாரதி எப்படி மரணம் அடைந்தார்?”
‘‘அந்த ஊரில் பறக்கும் கண்காணிப்புக் கேமராவை வைத்திருந்தவர் பார்த்தசாரதி. அதை இயக்குவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். நான் விசாரணைக்காகக் களமிறங்கியபோது தானாக முன்வந்து என்னிடம் பல விஷயங்களைப் பேசினார். அவரிடம் சமூக அக்கறை தெரிந்தது. அவரின் கேமரா மூலம் பல வீடியோக்கள் எடுக்கப்பட்டன. சில நாள்களில் தன் வீட்டு வாசலிலேயே அவர் விபத்தில் இறந்துபோனார். எனக்கு அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அது மர்ம மரணமாக இருந்ததால், அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என என்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறேன்.”
‘‘விசாரணையின்போது சில அதிகாரிகளிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை என்று குற்றம் சாட்டினீர்களே?”
‘‘எங்கள் குழுவுக்கு வேண்டிய அதிகாரிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. பல அதிகாரிகள் இந்தக் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டனர். நான் கேட்டிருந்த சில அதிகாரிகளைப் பெறுவதிலும் எனக்குச் சிரமம் இருந்தது. நான் கேட்டிருந்த சில அதிகாரிகள்கூட இந்த விசாரணையில் பணியாற்றுவதற்குத் தயக்கம் காட்டினார்கள், பயந்தார்கள். அதன்பிறகு சிலர் சுயவிருப்பத்துடன் முன்வந்தார்கள். மாவட்ட அதிகாரிகள் சிலரிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை விட, அதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்த அரசு அதிகாரிகள் மிகவும் ஆபத்தானவர்கள். மிகவும் அபாயகரமானவர்கள். கடைநிலை ஊழியர்கள் முதல் கட்டளையிடும் அதிகாரிகள் வரை பல பேர் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை பெரிய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அது இந்தக் காலகட்டத்தில் சாத்தியமா எனத் தெரியவில்லை!”
‘‘இந்த விசாரணை உங்களுக்கு எந்த மாதிரியான மனநிலையைக் கொடுத்துள்ளது?”
‘‘ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குச் சுடுகாட்டில் போய் படுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், அப்படி ஒரு இக்கட்டுக்குத் தள்ளப்பட்டேன். சக அலுவலர்களே, ‘சகாயம் ஸ்டன்ட் அடிக்கிறார்’ எனக் கூறினார்கள். ‘விளம்பரத்திற்காக செய்கிறேன்’ எனச் சொன்னார்கள். என் நேர்மையைப் பற்றி எனக்குத் தெரியும். அதுதான் என்னை வழிநடத்துகிறது!”
‘‘உங்கள் குடும்பத்தினர்கள் எதுவும் சொல்லவில்லையா?”
‘‘இதுபோன்ற பல மிரட்டல்களைப் பார்த்துவிட்டேன். அவற்றைத் தலையில் ஏற்றிக்கொள்வது கிடையாது. என் குடும்பத்துக்கும் இதெல்லாம் புதியதல்ல. என்னைப் புரிந்துகொண்டவர்கள் அவர்கள். என் மனைவி, குழந்தைகள்கூட என் செயல்களுக்கு என்றும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் என் மகனைத் தேற்றுவதற்குச் சிரமப்பட்டேன். ஆனால், இப்போது என் குடும்பத்தினர் தெளிவாகவே இருக்கின்றனர்.
என்னுடைய வாழ்க்கையில் கிரானைட் தொடர்பான விசாரணை ஒரு பகுதிதான். நான் அதிலேயே முடங்கிப்போக விரும்பவில்லை. இன்னும் நிறைய பயணிக்க வேண்டியிருக்கிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நான் நிறைவாக முடித்துவிட்டேன். இனி அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்!”
No comments:
Post a Comment