Monday, August 21, 2017

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 3

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 3

இவான் வேற மாதிரி!

ஜோதிடர்கள் சிலர் அவையில் கூடியிருந்தனர். ‘மாமன்னர் எப்போது வருவார்... என்ன கேட்டுத் தொலைப்பார்... இன்றைக்கு உயிரோடு வீடு திரும்புவோமா?’ பயமும் படபடப்பும் அவர்களுக்குள் படமெடுத்துக்கொண்டிருந்தபோதே மகா கனம் பொருந்திய... மன்னிக்கவும், மகா தலைக்கனம் பொருந்திய ரஷ்யாவின் பேரரசரும் முதலாம் ஜார் மன்னருமான நான்காம் இவான் அங்கே பிரசன்னமானார். 53 வயதுதான். ஆனால், ஆடிக்களித்து தேடிச்சேர்த்த நோய்களால் தேகத்தின் வயது 73 என்று சொல்லும்படியாக இருந்தது. உடல் தளர்ந்திருந்தாலும் கம்பீரத்துக்குக் குறைச்சலில்லை. நீண்ட முகம். நீளத் தாடி. மிரட்டும் மீசை. சந்தேகம் புரளும் கண்கள். சைத்தானின் மூக்கு. தீயவற்றையே உச்சரித்துப் பழகிய உக்கிரமான உதடுகள். தலை தொடங்கித் தரை வரை புரளும் தடித்த அலங்கார அங்கி. கறுப்பு உறை அணிந்த கைகளில் ரத்தக்கறை படிந்த கோல். கொடுங்கோல் என்றே சொல்லலாம்.

வந்தார். அமர்ந்தார். அவர் உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்வது கடினம்தான் என்றாலும், கொள்ளாவிட்டால் கொல்லாமல் விடமாட்டார் என்பதால் ஜோதிடர்கள் பேரமைதி காத்தனர்.

‘‘நான் என்றைக்குச் செத்துப்போவேன் என்று நாள் குறியுங்கள்.’’

பேரரசரின் வார்த்தைகள், ஜோதிடர்களை ஸ்தம்பிக்கச் செய்தன. வேறு வழியில்லை. நாள் குறித்துதான் ஆக வேண்டும். பேரரசருக்கு, அல்லது தங்களுக்குத் தாங்களே. கணக்கிட்டார்கள். ராசிகளோடு பேசி, நட்சத்திரங்களோடு அளவளாவி, சூரியனையும் சந்திரனையும் கலந்தாலோசித்து முடிவாக தேதி ஒன்றை அறிவித்தார்கள்.

1584, மார்ச் 18. புதன்கிழமை.

சொல்லிவிட்டுப் பேரரசரையே பேரச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘‘அன்றைக்கு நான் தவறுவது தவறினால்?’’ என்றார் இவான். ‘‘எங்கள் கணிப்பு தவறாது’’ என்றார், ஒரு ஜோதிடர் மட்டும் தைரியமாக. ‘‘தவறினால் அதுவே உங்களுக்கான மரணத் தேதி!’’ - கிளம்பினார் இவான்.

அந்தத் தேதியில் இவான் இவ்வுலகை விட்டுக் கிளம்பினாரா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவரைப் பற்றி முகச்சுளிப்புடனும் பதைபதைப்புடனும் தெரிந்துகொள்ள நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டு ரஷ்ய வரலாற்றிலிருந்து ஆரம்பிப்பது வசதியாக இருக்கும்.

பதினைந்தாம் நூற்றாண்டு ரஷ்யா என்பது பரந்து விரிந்த பேரரசு அல்ல. அன்றைக்கு அது மாஸ்கோவிய ரஷ்யா, கீவிய ரஷ்யா, மங்கோலிய ரஷ்யா என்று உதிரி உதிரியாகக் கிடந்தது. வெவ்வேறு இன ஆட்சியாளர்கள். குறிப்பாக மங்கோலிய தத்தார் இனத்தவர்களே எல்லோருக்குமான எதிரிகளாகப் பயம்காட்டிக் கொண்டிருந்தார்கள். தத்தார் இனத்தவர்களின் வலிமை உட்பகையால் சிதைய, மூன்றாம் இவான் (நான்காம் இவானின் தாத்தா!) மாஸ்கோவின்   மன்னராகவும் ரஷ்யா முழுமைக்குமான மாமன்னராகவும் எழுச்சி பெற்றார். ஐரோப்பியப் பேரரசுகள், ரஷ்யாவைப் பேரரசாக அங்கீகரித்தன. அதனுடன் வணிக உறவை வளர்க்கும் எண்ணத்துடன் கைகுலுக்கின.

ரஷ்யாவின் அதிகார அடுக்கு என்பது ஒரு பிரமிடு வடிவில் இருந்தது. அனைத்து அதிகாரங்களும் நிரம்பியவராக கிராண்ட் பிரின்ஸ் (பேரரசர்) உச்சத்தில் இருந்தார். அடுத்த அடுக்கில் முந்தைய குறு மன்னர்களின் வாரிசுகள் ‘தங்களில் யார் செல்வாக்குமிக்கவர்’ என்று முட்டிமோதி அரசியல் செய்துகொண்டிருந்தனர். மூன்றாவது அடுக்கில் ‘போயர்கள்’ என்ற நிலப்பிரபுக்கள் பரவியிருந்தனர். ராணுவம், குடிமை நிர்வாகம் உள்ளிட்ட பல முக்கியமான துறைகள் போயர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ‘டூமா’ என்பது போயர்களின் கவுன்சில். பேரரசருக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரம் டூமாவுக்கு இருந்தது. ஆக, போயர்களின் கையே ஒட்டுமொத்தமாக ஓங்கியிருந்தது. பிரமிடின் கடைசி அடுக்கு... வேறு யார், பாவப்பட்ட குடிமக்களே.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 3

ரஷ்யப் பேரரசுக்கு அடித்தளமிட்ட மூன்றாம் இவான், கி.பி 1505-ல் இறந்துபோனார். அடுத்து அவரின் மகன் மூன்றாம் வாஸிலி அரியணை ஏறினார். போரிட்டார். தத்தார்களை அடக்கினார். தம் காலத்தில் பேரரசின் எல்லைகளை இயன்ற அளவு விரிவாக்கினார். தனக்கு ஆண் குழந்தை பெற்றுத் தராத முதல் மனைவியை ஒதுக்கிவிட்டு, தத்தார் வழியில் வந்த யெலெனா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று திருச்சபை முகம் திருப்பியது. 

கி.பி 1530, ஆகஸ்ட் 25. மாலை ஆறு மணி. மேற்கில் இடிச்சத்தம். பிரசவ வலியில் கதறி, ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் யெலெனா. மகர ராசி. கன்னி லக்னம். ‘‘எதுவுமே சரியில்லையே. எல்லாம் கெட்ட சகுனங்கள். சபிக்கப்பட்ட குழந்தை இது. கணக்கு வழக்கில்லாத மரணம் இவனால் நிகழும்’’ என்று ஜெருசலேமைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், வாஸிலியிடம் பதறினார். வாஸிலி காதில் போட்டுக் கொள்ளவில்லை. தன் குழந்தைக்கு இவான் வாஸில்யெவிச் என்று பெயரிட்டு, ராஜ வாரிசாக அறிவித்தார்.

அடுத்த மூன்றாண்டுகளிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார் மூன்றாம் வாஸிலி. அவரது உறவினர்களுக்கும், யெலெனாவின் உறவினர்களுக்கும் இடையே கிரெம்லின் எனப்படும் மாஸ்கோவின் அரண்மனையை யார் கைப்பற்றுவது என்பதில் பதவி வெறிப் போட்டி வீரியம் பெற்றது. ராஜ வாரிசான தன் மகன் நான்காம் இவானைக் காப்பாற்றும் நோக்கில், தானே அரசப் பிரதிநிதியாகப் பதவியேற்றாள் யெலெனா. இடைஞ்சலாக வந்த வாஸிலியின் உடன்பிறப்புகள் கதையை முடித்தாள். நம்பிக்கைக்குரிய போயர்கள் சிலரது ஆதரவுடன் ஆட்சி நடத்தினாள்.

கி.பி 1538-ல் ஒருநாள் யெலெனா திடீரென இறந்துபோனாள். போயர்களே அவளை விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாகக் கிசுகிசுத்தார்கள். எட்டு வயது இளவரசன் இவான் திகைத்து நின்றான். அவனுக்குத் துணையாகக் காது கேளாத, வாய் பேச இயலாத தம்பி யூரி மட்டும். சொந்த அரண்மனையிலேயே கெஞ்சிக் கூத்தாடி பிச்சை யெடுத்து உண்ணும் நிலையில்தான் இளவரசர்கள் இருந்தார்கள். 

அரண்மனையில் எல்லா நாளும் வன்முறை. கோட்டையில் தினமும் பல கொலைகள் விழும். இவானின் பால்யம் இப்படித்தான் இருந்தது. போயர்களும் பிற உறவினர்களும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள கொலைவெறி அரசியல் நிகழ்த்தினார்கள். சிறுவன் இவானுக்கு மதுவைப் பழக்கினார்கள். அவனைச் சித்ரவதைக் கூடத்தில் உட்காரவைத்து, ‘நடப்பதை வேடிக்கைப் பார்’ என்று மனத்தளவில் சித்ரவதை செய்தனர். காணக்கூடாத காட்சிகளைக் கண்டுகண்டு அவனது மனம் அதில் ருசி காண ஆரம்பித்தது. அவனது மனிதம் கரைந்து காணாமல் போனது. 

‘பூனையைப் பிடி... நாயை இழுத்து வா... கோட்டைச் சுவர் மீதேறி அவற்றைக் கீழே எறி. கதறித் துடிக்கின்றனவா? பறவையின் சிறகுகளைப் பிய்த்து, ரத்தம் சொட்ட அதன் உடலைக் கிழி. கிரீச்சிட்டு உயிர் துறக்கின்றனவா! ஆஹா, இந்த விளையாட்டு எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது.’

கி.பி. 1539-ல் இவானின் தாய்வழி உறவினர்களின் கை ஓங்கியது. குருதிக்கு மத்தியில் அவர்கள் கிரெம்லினைக் கைப்பற்றினார்கள். எதிரிகள் உயிருடன் தோலுரிக்கப்பட்டு, மாஸ்கோ சதுக்கத்தில் தொங்கவிடப்பட்டனர். யெலெனாவின் உறவினரான ஆண்ட்ரூ, அரசப் பிரதிநிதியாக அதிகாரம் செலுத்தினார். நாளடைவில் இவானுக்கு ஆண்ட்ரூவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. நல்லதொரு நாளில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார். வேட்டை நாய்கள் நிரம்பிய கூண்டுக்குள் உயிருடன் எறியப்பட்டார். டாட்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 3

தன் முதல் கொலையை நிறைவேற்றும் போது நான்காம் இவானுக்கு வயது 13. வெறி நாய்களுக்கு மத்தியில் அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்து ஆள வேண்டுமா? இதுவே பாதை. தவறென்றாலும் இது மட்டும்தான் சரியான வழி. எதிரியோ, இல்லையோ... ஒருவன்மீது சந்தேகம் வந்துவிட்டால், அவனை உலகத்தைவிட்டே வழியனுப்பி விடு. சந்தேக நிவர்த்தி அதுவே. இவான் மூர்க்கமான அரசியலுக்குத் தயாராகி நின்றார்.

தனது பதினாறாவது வயதில் ரஷ்ய ராஜ்ஜியத்தின் பேரரசராக, செஞ்சதுக்கத்திலுள்ள டோர்மிஷன் தேவாலயத்தில் முடிசூட்டிக்கொண்டார் (கி.பி 1547). தன்னை ‘ஜார்’ என்று பெருமிதம் பீறிட அழைத்துக்கொண்டார். (‘ஜார்’ என்பது ரோமானியப் பேரரசின் ‘சீஸர்’ பட்டத்துக்கு ஒப்பானது. பேரரசர் என்று அர்த்தம்.) 

பேரரசருக்கு பேரரசி வேண்டாமா? எட்டுத்திக்கும் சுயம்வரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ‘தகுந்த தகுதியுடைய பேரழகிகள் கிரெம்லின் வரலாம்’ என்று. ‘யாரும் தங்கள் வீட்டுக் கன்னிப் பெண்களை மறைத்து வைக்கக் கூடாது’ என்று கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ‘சுமார் 1,500 பெண்களை அலசி ஆராய்ந்தார்கள்’ என்கிறது ஒரு சரித்திரக் குறிப்பு. அதில் இவானைக் கவர்ந்த இதயக்கனி, அனாஸ்டாஸியா ரோமனோவா. போயர் ஒருத்தியின் மகள். பிரமாண்டத் திருமணம். அனாஸ்டாஸியாவை ‘ஜாரினா’ (பேரரசி) என்று அறிவித்தார் இவான்.

சந்தேகச் சக்கரவர்த்தி இவானுக்கு, அனாஸ்டாஸியா தன் மீது காட்டும் அன்பில் துளி சந்தேகமும் வரவில்லை. காதலாகிக் கசிந்துருகி களிப்புடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். மணமக்கள் சில தேவாலயங்களுக்குச் சென்று நாள்கணக்கில் வழிபாடு நடத்துவது மரபு. அதற்காக இவான், மாஸ்கோ அருகிலுள்ள ஆஸ்ட்ரோவ்கா என்ற ஊரில் முகாமிட்டிருந்தார். பனி படர்ந்த கடும் குளிர்காலம். 

அப்போது ஸ்கோவ் (Pskov) என்ற ஊரிலிருந்து 70 பேர் பேரரசரைத் தேடி வந்தனர். அவர்களது கொடுமைக்கார கவர்னர், ஊழலில் திளைக்கிறார். ஊரை அடித்து உலையில் போடுகிறார். தகுந்த ஆதாரங்களுடன் புகார் கொடுக்க, இவான் முன்வந்து நின்றனர்.

இவான் வேற மாதிரி அல்லவா... கொதித்துக் குதித்தார். ‘‘என் ராஜ்ஜியத்தை, என் ஆட்சியைக் குறை சொல்கிறீர்களா? ராஜ துரோகிகளே! இவர்களைப் பிடித்து அம்மணமாக்குங்கள். அந்தப் பனியில் போட்டுப் புரட்டுங்கள்’’ என்றார். அப்படியே செய்தார்கள்.

ஆள்பவன், எங்கும் மதுவை ஓடவிட்டுக் குடிமக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லலாம்; அல்லது இவான் மாதிரியும் செய்யலாம். தன் கையிலிருந்த சூடான சிவப்பு ஒயினை அந்த மக்களின் தலைமுடியிலும் தாடியிலும் ஊற்றினார் இவான். தீயால் தீண்டினார். பற்றியெரியும் நெருப்புடன் அவர்கள் கதறி உயிர்ப்பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும்போதே, தூதுவன் ஒருவன் ஓடோடி வந்தான். மூச்சிரைக்கக் கத்தினான்.

‘‘பேரரசரே! மாஸ்கோ நகரம் தீப்பற்றி எரிகிறது...’’

(வருவார்கள்...)

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment