Tuesday, August 15, 2017

கிறுக்கு ராஜாக்களின் கதை - 1

கிறுக்கு ராஜாக்களின் கதை - 1

WARNING: இந்தத் தொடரை வாசிப்பது உங்கள் மனநலனுக்குத் தீங்கானது!

பாபிலோனிய பல்வாள் தேவன்!

திகுதிகுவென வீட்டில் பரவ ஆரம்பித்தது தீ. வீட்டுக்காரன் பதறிப் போனான். நேரங்கெட்ட நேரத்தில் நின்றாடிய நெருப்பை அணைக்க முடியும் என்று தோன்றவில்லை. மனைவி, பிள்ளைகளை வெளியே இழுத்துப் போட்டான். ‘‘ஐயோ... எல்லாம் போச்சே!’’ என்று மனைவியின் கதறல் பின்னணி இசையென ஒலிக்க... அக்னி, பிரவேசம் செய்த வீட்டுக்குள் அவனும் பிரவேசித்தான். இன்சூரன்ஸ் இல்லாத காலம். இயன்ற அளவு பொருள்களை வெளியில் எடுத்துப் போட்டால் நஷ்டம் குறையும்.

அனலை உணர்ந்து வந்தான் பக்கத்து வீட்டுக்காரன். ‘அய்யகோ! அடுத்த வீட்டில் தீ... உதவி செய்வதே நீதி!’ - நொடியும் தாமதிக்காமல் நெருப்பைத் தாண்டிக் குதித்தான். அந்த வீட்டுக்காரனுடன் இணைந்து சில பொருள்களை மீட்க உதவினான். ஆனால், அவனும் சபலங்கள் நிறைந்த சராசரி மனிதன்தானே. எரியும் வீட்டிலுள்ள ஒரு சிறிய பொருளின் மீது ஆசைத்தீ பற்றியது. அதை எடுத்து அவசர அவசரமாகத் தன் உடைக்குள் மறைத்தான்.

ஆனால், வீட்டுக்காரனுக்கு சி.சி.டி.வி-யின் கண்கள். கண்டுபிடித்துவிட்டான். ‘‘அடேய் கிராதகா! என் வீட்டிலா திருடுகிறாய்?’’ என்று கத்தினான். அவன் கண்களில் நெருப்பைவிட அதிகத் தகிப்பு. நெஞ்சில் ஓங்கி ஒரே மிதி. நெருப்பில் விழுந்தான் பக்கத்து வீட்டுக்காரன். உடை பற்றிக்கொள்ள, கதறி எழுந்து ஓடியவனை, அடித்து உதைத்து மீண்டும் நெருப்பில் தள்ளி உயிரோடு எரித்தான். தீ தின்று முடித்த வீட்டில் பக்கத்து வீட்டுக்காரனும் சாம்பலாகிக் கிடந்தான்.
ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. நீதிபதிகள் விசாரித்தார்கள். ‘‘தீப்பிடித்த என் வீட்டில் திருடினான். அதனால்தான் அவனைத் தீக்கிரையாக்கினேன்’’ என்றான் வீட்டுக்காரன். ‘‘நீயொரு நீதிமான்! நீதியானை! நீதிசிங்கம்!’’ என்னும் ரீதியில் பஞ்சாயத்தார் வாழ்த்த, ஊரே அந்தக் கொலைகாரனைக் கொண்டாடியது.

‘இதென்ன காட்டு மிராண்டித்தனம்’ என்று பொங்க வேண்டாம்! ‘தீப்பிடித்த வீட்டில் உதவி செய்யச் சென்றவன் ஏதாவது திருடினால், அவனை அந்தத் தீயிலேயே தள்ளி எரிக்கலாம்’ என்பதே அப்போது அங்கே சட்டம். ஆம், அவர்களின் பேரரசர் அப்படித்தான் சட்டம் இயற்றியிருந்தார்.

அங்கே என்றால் எங்கே? எப்போது? யார் அந்தக் கூறுகெட்ட பேரரசர்?

ஹம்முராபி.

சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாங்கு வாழ்ந்த மாமன்னர். தந்தையை அடித்துத் துரத்திவிட்டு அமோரிட் நாட்டின் அரியணையைக் கைப்பற்றிய உத்தமபுத்திரர். வெறும் 50 சதுர மைல் பரப்பளவு கொண்ட ராஜ்ஜியத்தின் ராஜாவாகத்தான் தொழிலை ஆரம்பித்தார். தன் வீரத்தாலும் சாதுரியத்தாலும் மெசோபடோமியாவின் பல்வேறு பகுதிகளை வென்று, முதலாம் பாபிலோனியப் பேரரசைக் கட்டியெழுப்பிய பாபிலோனிய பல்வாள் தேவனாக வரலாற்றில் நின்றார். அன்னாரது ஆட்சிக்காலம் கி.மு. 1792 முதல் கி.மு. 1750 வரை.

வெவ்வேறு பிரதேசங்களைக் கைப்பற்றி, வேறு வேறு மொழி பேசும் மக்களை அடக்கியாள்வது எவருக்கும் கடினமான விஷயம்தான். ஆகவே ஹம்முராபி, தன் பேரரசின் எல்லா பகுதிகளுக்கும் நிபுணர்களை அனுப்பினார். எங்கெங்கே, என்னென்ன மாதிரியான சட்டங்களெல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன என்று திரட்டினார். அவற்றையெல்லாம் ஆராய்ந்து, வெட்டி, ஒட்டி, திருத்தம் செய்து, கூடுதலாகத் தனது அனுபவ மசாலாவைச் சேர்த்து, பாபிலோனியப் பேரரசு முழுமைக்குமான புதிய சட்டத்தொகுப்பை உருவாக்கினார்.

இதுவே நமக்குக் கிடைத்திருக்கும், மனிதக் குல வரலாற்றின் மிகப் பழைமையான முதல் சட்டத் தொகுப்பு. ஹம்முராபியின் முழுமையான சட்டங்கள் செதுக்கப்பட்ட கல்வெட்டு, கி.பி. 1902ல் பிரெஞ்சு தொல்லியல் ஆய்வாளர்களால் ஈரானின் சுஸா நகரில் கண்டறியப்பட்டது. (தற்போது பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது.)

நம் ஆள்காட்டி விரல் வடிவிலான, ஏழு அடி நான்கு அங்குலம் உயரமுள்ள கல் ஒன்றில், அக்காடியன் (Akkadian) மொழியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. வணிகம், அடிமைகள், திருட்டு, வேலை, விவசாயம், விவாகரத்து, குடும்பம், சமூகம் என்று பல்வேறு பிரிவுகளில் 282 சட்டங்களை ஹம்முராபி அருளியிருக்கிறார்.

‘இந்த மண்ணைத் தீய சக்திகளிடமிருந்து காக்கவும், ஏழைகளை அநியாயங்களிலிருந்து பாதுகாக்கவும், கடவுளர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து இந்தச் சட்டங்களை அருளினர்’ என்று ஹம்முராபியே இந்தச் சட்டத் தொகுப்புக்கு முன்னுரை கொடுத்துள்ளார். இதைக் காப்பி பேஸ்ட் செய்துதான் அவருக்குப் பின்வந்த பல்வேறு ஆட்சியாளர்கள் நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர் என்கிறது வரலாறு. சரி, ஹம்முராபியின் சட்டங்களில் அப்படி என்ன சிறப்பு?

புயலா, மழை பொய்த்துவிட்டதா, இன்ன பிற காரணங்களால் அந்த ஆண்டில் விளைச்சல் இல்லையா? விவசாயக் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டாம். கடன் கொடுத்தவர்கள் தம் கடன் பட்டியலை அழித்துவிட வேண்டும். (வாயில் எலி கவ்வி, நிர்வாணப் போராட்டம் நடத்தாமலேயே விவசாயக் கடன் ரத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஹம்முராபி தி கிரேட்!)

ஒரு பெண் தன் கணவனோடு வாழ விருப்பமில்லை என்று தெரிவித்தால், கணவனும் அதற்குச் சம்மதித்துவிட்டால், அந்தப் பெண் தன்னுடைய தந்தை வீட்டிலிருந்து வரதட்சணையாகக் கொண்டு வந்த பொருள்களையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டுக் கிளம்பி விடலாம். (இதுவல்லவோ பெண் சுதந்திரம்!)

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண் காணாமல் போய்விட்டாலோ, கடத்தப்பட்டுவிட்டாலோ, அவனுடைய குடும்பத்தை உற்றார், உறவினர்கள் தக்க உதவிகள் செய்து காப்பாற்ற வேண்டும். (என்னவொரு மனிதநேயம்!)

ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பு தவறு என்று பின்பு கண்டறியப்பட்டால், அவருக்கு 12 மடங்கு அபராதத் தொகை விதிக்கப்படும். பதவி நீக்கத் தண்டனையும் உண்டு. (ஆம், அநீதிபதிக்கும் ஆப்பு உண்டு.)

‘அடடே... அத்தனை சட்டங்களும் அருமையாக இருக்கின்றனவே’ என்று லைக், லவ், வாவ் பொத்தான்களை அவசரப்பட்டு அழுத்த வேண்டாம். கோபம் மற்றும் சோக பொத்தான்களுக்கும் ஏகப்பட்ட வேலை கிடக்கிறது.

தகாத வழியில் பிறந்த ஒருவன், தன்னை வளர்க்கும் தாய் அல்லது தந்தையைப் பார்த்து, ‘‘நீ என் அம்மாவே இல்லை’’ அல்லது ‘‘நீ என் அப்பாவே இல்லை’’ என்று சொன்னால், அவனது நாக்கு இழுத்து வைத்து நறுக்கப்படும். ஒருவன் கோபத்தில் அவனது தந்தையைத் தாக்கினால், அவனது கைகள் வெட்டப்படும். ஓர் அடிமை தன் எஜமானைப் பார்த்து ‘‘நீ என் முதலாளி இல்லை’’ என்று முனங்கினாலும் அவன் காதுகள் அறுக்கப்படும்.

கிறுக்கு ராஜாக்களின் கதை - 1

தன் மனைவியின் நடத்தையில் ஒருவனுக்குச் சந்தேகம் எழுந்தால், அவள் கட்டிலும் கலவியுமாகப் பிடிபடா விட்டாலும், அவளை யூப்ரடிஸ் நதி வெள்ளத்தில் தூக்கி எறிந்து விடலாம். அவள் உத்தமி என்றால் கடவுளே கரை சேர்த்துவிடுவார். இல்லையென்றால் மூழ்கி இறந்து விடுவாள். அதேசமயம், ஆண்கள் படி தாண்டினால் அது குற்றமில்லை. மனைவியல்லாமல் வேறொரு பெண்ணை ஒருவன் கர்ப்பமாக்கினால், அவனுக்கு வெறும் அபராதம்தான். பிரசவத்துக்குப் பின் அந்தப் பெண் இறந்துபோனால், அவள் பிரசவித்தது பெண் குழந்தையென்றால், அதன் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஒருவன் மீது ஒரு குற்றம் சாட்டப்படுகிறது. தன்னை நிரபராதி என நிரூபிக்க இயலாத அவனை, ஆற்றின் ஆழமான பகுதியில் தள்ளிவிடுவார்கள். அவன் மூழ்கிச் செத்துவிட்டால், அக்மார்க் குற்றவாளி. அவனுடைய வீடு, குற்றஞ்சாட்டியவனுக்குச் சொந்தமாகிவிடும். நீந்தி மேலேறி வந்துவிட்டால் அவன் நிரபராதி. குற்றஞ்சாட்டியவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அவன் வீடு, தப்பித்தவனுக்குச் சொந்தமாகிவிடும். (நிரபராதியாக இருந்து நீச்சல் தெரியாவிட்டால் என்ற கேள்விக்கெல்லாம் ஹம்முராபி இடமளிக்கவில்லை.)

ஒரு மேஸ்திரி கட்டிக்கொடுத்த வீட்டின் சுவர் இடிந்துவிட்டால், அதை அவரே தன் செலவில் சரிசெய்து தர வேண்டும். சுவர் இடிந்து வீட்டுக்காரன் செத்துப் போனால், மேஸ்திரிக்கு மரணதண்டனை. சுவர் இடிந்து வீட்டுக்காரனின் மகன் செத்துப் போனால், மேஸ்திரியின் மகனும் கொல்லப்படுவான்.

ஒருவன் அடுத்தவனது கண்ணைத் தோண்டி விட்டால், அவன் கண்ணைப் பதிலுக்குத் தோண்டி விடலாம். பல்லை உடைத்துவிட்டால், உடைத்தவனின் பல்லை உடைக்கலாம். எலும்பென்றால் பதிலுக்கு எலும்பை முறிக்கலாம். இதுபோன்ற ரத்தம் தெறிக்கும் ரிவெஞ்ச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது அண்ணன் ஹம்முராபியே! ஆனால், இதிலும் வர்க்க பேதங்கள் உண்டு. உயர்குடியைச் சேர்ந்தவன் சாதாரணனின் கண்ணை நோண்டினாலோ அல்லது வேறு ரகக் குற்றங்கள் செய்தாலோ, வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. மரண தண்டனையெல்லாம் கிடையாது.

கர்ப்பமாக இருக்கும் அடிமைப்பெண்ணை உயர்குடிக்காரன் கொன்றுவிட்டால் அதற்கும் அபராதம் மட்டுமே. அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் உயர்குடி அல்லது நடுத்தர வர்க்கப் பெண்ணைக் கொன்றால், பதிலுக்குக் குற்றவாளியின் அப்பாவி மகளும் கொல்லப்படுவாள்.

கள்ளக் காதல் ஜோடி ஒன்று, தம் அசல் இணையைக் கொல்லத் திட்டமிட்டால், அவர்களிருவருமே கழுமரத்தில் ஏற்றப்படுவர். ஒரு தாய் முறையற்ற உறவில் ஈடுபட்டால், அவள் ஜோடியுடன் சேர்த்து உயிருடன் எரிக்கப்படுவாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை - 1

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி காலி; இல்லையேல் குற்றம் சுமத்தியவனுக்கு உயிர் இருக்காது. இப்படி ஏகப்பட்ட மரண தண்டனைகளும், உயிரை வதைக்கும் கிறுக்குத்தனமான தண்டனைகளும் நிறைந்ததே ஹம்முராபியின் காலம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நாகரிகம் பெரிதாக வளராத பண்டைக் காலத்தில், மூர்க்கமான குடிமக்களுக்கு மூக்கணாங்கயிறு போட இப்பேர்ப்பட்ட அதிரடிச் சட்டங்கள் தேவைப்பட்டிருக்கலாம். ஆகவே ஹம்முராபியைக்கூட அரை மனத்துடன் மன்னித்துவிடலாம். ஆனால், நாகரிகமும் அறிவியலும் வளர்ந்த பிற்காலத்திலும்கூட அரை மெண்டலாக ஆட்சி செய்த பலர் வரலாற்றில் வலம் வந்திருக்கிறார்கள். (டிஜிட்டல் யுகத்திலும் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.)

மதிகெட்டவர்கள். மறை கழன்றவர்கள். குரூரர்கள். காமக்கொடூரர்கள். அதிகாரப் போதை அரக்கர்கள். மமதையேறிய மூடர்கள். வக்கிர வஞ்சகர்கள். ரத்தவெறி ராட்சஷர்கள். பித்தேறிய பிணந்தின்னிகள். எம்மொழியாலும் விவரிக்க இயலா தனிவழிச் சனியன்கள்... ஆண் பெண் பேதமின்றி இப்படிப்பட்ட கிறுக்குப் பிறவிகளே ஒவ்வோர் அத்தியாயத்திலும் உங்களைத் தேடி வர இருக்கிறார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்.

(வருவார்கள்...)

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment