Wednesday, August 30, 2017

‘‘கல்லா கட்ட உதவாததால் கல்வித்துறை செயலாளர் அதிகாரம் பறிப்பா?’’

விஸ்வரூபமெடுக்கும் உதயசந்திரன் விவகாரம்!
மிழகப் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் உதயசந்திரனை அதிகாரமற்ற செயலாளராகக் கீழிறக்கி, பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான பணிக்கு மட்டும் செயலாளராக மாற்றியிருக்கிறது தமிழக அரசு. ‘முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில்தான் பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும்’ என்ற ஆணையின்மூலம், பாடத்திட்ட பணியையாவது உதயசந்திரனை முழுமையாகச் செய்ய விடுவார்களா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

பரபரப்பான இந்த விவகாரம் குறித்து, ‘பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை’யின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். ‘‘உதயசந்திரனுக்கு முன்பாக, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக இருந்த சபீதாமீது பல கண்டனங்கள் எழுந்தன. அவரை ஏழு ஆண்டுகளாக மாற்றவில்லை. ஆனால், எந்தக் கண்டனமும் இல்லாத உதயசந்திரனின் அதிகாரத்தைக் குறைத்துள்ளனர். அவர் பொறுப்பேற்றவுடன், கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த கல்வித்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை மாற்றும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெறுகின்றன. தமிழக அரசின் இப்போதைய நடவடிக்கையால் பாடத்திட்ட மேம்பாட்டுப் பணிகள் சீர்குலையும். ஏனென்றால், பாடத்திட்டத்தை வகுப்பதோடு மட்டுமல்ல... அதை நடைமுறைப் படுத்தவும் உரிய அதிகாரம் அந்தத் துறையின் செயலாளருக்கு இருக்க வேண்டும். இப்போது செய்யப்பட்டுள்ள அதிகாரக் குறைப்பால் இந்த அரசின் நோக்கம் என்ன என்பது வெளிப்பட்டுள்ளது’’ என்றார்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், ‘‘பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக உதயசந்திரன் பதவியேற்ற பின், பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து, ‘தற்போதைய செயல்படாத அரசிலும் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று பெயர் வாங்கிக்கொடுத்தார். ஊழலுக்கு உடன்படாத காரணத்துக்காக, அதிகாரமில்லாத செயலாளராக அவரை மாற்றியதன்மூலம், இந்த அரசு தன் உண்மையான ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது. குட்கா ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு ஆணையர், டி.ஜி.பி போன்ற உயர்ந்த பதவிகள் பரிசாகக் கிடைக்கின்றன. கிரானைட், தாது மணல் கொள்ளையைத் தோலுரித்துக் காட்டிய சகாயத்துக்கு முக்கியத்துவம் இல்லாத பதவி கொடுக்கப்படுகிறது. உதயசந்திரனின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆட்சியாளர்கள், ‘எங்களுடன் சேர்ந்து ஊழலுக்குத் துணை நின்றால் பதவி உயர்வும், பணமும், பாதுகாப்பும் பரிசாகக் கிடைக்கும்’ என அரசு ஊழியர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கொடுக்கின்றனர்’’ என்றார்.
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன், ‘‘அரசின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிக்காமல், மாணவர்கள், ஆசிரியர்கள், சமுதாயம் என்று அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கல்விப்புரட்சியை உதயசந்திரன் உருவாக்கி வருகிறார். காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் 30 தொடக்கப் பள்ளிகளைப் புதிதாகத் தொடங்க உத்தரவு போடப்பட்டுள்ளது. உதயசந்திரன் பொறுப்புக்கு வந்த பிறகுதான் இலவசக் கட்டாயக்கல்விச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆன்லைன் முறையில் நிரப்பியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ் பள்ளிகளிலும் கட்டாயக்கல்விச் சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய பள்ளிகளுக்கு அனுமதி, ஆசிரியர்களுக்கு வெளிப்படையான இடமாறுதல் கவுன்சலிங் என்று அனைத்தையும் ஆன்லைன் முறைக்குக் கொண்டுவந்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறையை நவீனமாக்கும் இந்தச் சூழலைப் பாழாக்கிவிடக் கூடாது. இப்படிப்பட்டவரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழக மக்கள் அனைவருக்கும் இருக்கிறது’’ என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், ‘‘தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் நெ.து.சுந்தரவடிவேலுவுக்குப் பிறகு விரிந்து பரந்த ஞானத்தோடும், தொலைநோக்குடனும், ‘தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் எல்லா குழந்தைகளும் தன் குழந்தைகள்’ என்கிற மனம்நிறைந்த நேசத்துடனும் உதயசந்திரன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் புதிய உத்தரவால், கல்வித்துறையின் ஊழல் நிபுணர்களாக இருக்கும் பல அதிகாரிகள் மகிழ்ச்சி யடையலாம். ‘இன்னும் நான்கு ஆண்டுகள் உதயசந்திரன் செயலாளராகத் தொடர்வதற்காகவாவது இந்த ஊழல் எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடாமல் நீடிக்கட்டும்’ என்று சாமி கும்பிட்ட எத்தனையோ ஆயிரம் ஆசிரியர்களும், பெற்றோர்களும், என்போன்ற அவரது சக பயணிகளும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளோம். தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து கல்விக்காகப் பெருந்தொண்டு ஆற்றியதற்கு நீங்கள் தரும் பரிசா இது? ‘காசுக்கு அலையும் இந்த ஆட்சி கடுகி ஒழிக’ என்று தமிழகத்துத் தெருக்களில் நின்று நாங்கள் மண்ணை வாரித்தூற்றுகிறோம்’’ என்று கொந்தளித்து முடித்தார்.

பாடத்திட்டப் பணியையாவது உதயசந்திரனை உருப்படியாகச் செய்யவிடுவீர்களா மிஸ்டர் எடப்பாடி?

- எஸ்.முத்துகிருஷ்ணன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment