Wednesday, August 30, 2017

தனியாருக்கு ஏலம் விடப்படும் சென்ட்ரல் ஸ்டேஷன்! - ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்..!

சென்னையின் பெருமைக்குரிய அடையாளமாக மட்டுமல்ல... ஏழை, எளியோர் உள்பட சுமார் நான்கு லட்சம் பயணிகள் தினந்தோறும் பயன்பெறுகிற இடமாகவும் இருப்பது சென்ட்ரல் ரயில் நிலையம். பிழைப்பு தேடி தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கனவுகளோடு வந்து இறங்கும் இந்த ரயில் நிலையம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகிறது.

144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட இந்தியாவின் 600-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களுடன் சென்னையை இணைக்கும் பாலமாக விளங்கிவருகிறது. இதை, ‘மறுவளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கார்ப்பரேட் கையில் ஒப்படைக்க இருக்கிறார்கள்.
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையங்களை, ‘ஏ’, ‘ஏ1’ எனத் தரம் பிரித்து, அவற்றை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், மும்பை சென்ட்ரல், பெங்களூரு, கோழிக்கோடு, தானே, உதய்பூர், ராஞ்சி, விஜயவாடா, கான்பூர், இந்தூர், விசாகப்பட்டினம் உள்பட 23 ரயில் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மறுவளர்ச்சித் திட்டம் குறித்த விவரங்கள், தெற்கு ரயில்வேயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், ரயில் நிலையம் அமைந்துள்ள நிலமும் 45 ஆண்டு காலத்துக்குத் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படவுள்ளது. 350 கோடி ரூபாய் செலவில் மறுவளர்ச்சிப் பணிகளைத் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ரயில்வே ஊழியர்கள். இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ) மத்திய சங்க உதவித் தலைவர் ஆர்.இளங் கோவனிடம் பேசினோம். “சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், அதன் அருகில் உள்ள மூர் மார்க்கெட் வளாகத்தையும் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். சென்ட்ரலைத் தனியாரிடம் கொடுத்துவிட்டால், ரயில் நிலையத்தில் விற்கப்படும் உணவு உள்பட எல்லா பொருள்களின் விலையும் அதிகரிக்கும். தங்குமிட வாடகை உட்பட சேவைக் கட்டணங்கள் அனைத்தும் பல மடங்கு கூடும். தற்போது டீ 5 ரூபாய், காபி 7 ரூபாய் எனக் கட்டண நிர்ணயத்தில் உச்சவரம்பு உள்ளது. ‘இந்த உச்ச வரம்பை நீக்க வேண்டும்’ என்று தனியார் நிறுவனத்தினர் சொல்கிறார்கள். பிளாட்பாரம் டிக்கெட் விலை இப்போது 10 ரூபாய். ‘பிளாட்பார டிக்கெட் கட்டணத்தையும் எங்களுக்குத் தர வேண்டும்’ என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் தனியாரிடம் போய்விட்டால், விமான நிலையத்தில் இருப்பதுபோல டீ 75 ரூபாய், காபி 80 ரூபாய் என்று உயர்ந்துவிடும். இலவச ஓய்வறைகள் என்பதே இருக்காது. ‘உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையமாக உயர்த்தப் போகிறோம்’ எனச் சொல்கிறார்கள். அதன் மறைமுக அர்த்தம், ‘விலைகளும் கட்டணங்களும் உலகத்தரத்துக்கு உயர்ந்துவிடும்’ என்பதுதான். இப்போது சென்ட்ரல் ஸ்டேஷனைப் பயன்படுத்திவரும் லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மட்டும் இங்கு இடம் இருக்காது. அதனால்தான், இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம்” என்று கவலையோடு சொன்ன இளங்கோவன், “எங்களின் இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் இணைய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “டிக்கெட் வழங்குதல், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, ரயில் இயக்கம் ஆகியவை ரயில்வே வசம்தான் தொடர்ந்து இருக்கும். வாகனங்கள் நிறுத்துமிடம், உணவகங்கள், நிலையப் பராமரிப்பு உள்பட மற்ற அனைத்தையும்  தனியார்தான் மேற்கொள்வார்கள். மறுவளர்ச்சித் திட்டத்தில் நகரும் படிக்கட்டுகள், தானியங்கி டிக்கெட் கவுன்ட்டர்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், ஷாப்பிங் மால், ஐந்து நட்சத்திர உணவகங்கள் எல்லாம் ஏற்படுத்தப்படும். அதேநேரத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான உணவகங்களும் இங்கு இருக்கும்.
இது, ரூ.350 கோடி திட்டம். இதற்கான ஏலம், அக்டோபர் 3-ம் தேதிக்குத் தள்ளிப்போடப் பட்டுள்ளது. ஏலம் மற்றும் பிற விஷயங்கள் அனைத்தையும் முடிவுசெய்ய எட்டு முதல் பத்து மாதங்கள் பிடிக்கும். அதன் பிறகு, ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் மறுவளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துவிடும்” என்றார்.

1873-ம் ஆண்டில் உருவான சென்ட்ரல் ரயில் நிலையம், முதலில் தனியாரிடம்தான் இருந்தது. அதை, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அரசுடைமை ஆக்கினார்கள். ஒருகாலத்தில் ‘சுதேசி’ கொள்கைகளைப் பேசிய பி.ஜே.பி-யினர் ஆட்சியில், சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தனியாரிடம் விடப்போகிறார்கள். அதற்காக, ‘100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி’ என்ற அறிவிப்பை வெளியிட்டு, சிவப்புக்கம்பளம் விரித்துக் காத்துக்கிடக்கிறார்கள்!

- ஆ.பழனியப்பன்
படங்கள்: ப.பிரியங்கா
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment