Wednesday, August 30, 2017

உழவுக் கலையைக் கற்றுக்கொடுக்கும் கண்காட்சி!

ரலாறு காணாத வறட்சியின் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. அறுவடைக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் கருகிப்போயிருக்கின்றன பயிர்கள். குலைகுலையாய் காய்த்துத் தொங்கிய தென்னைகள், மட்டை உதிர்த்து, நட்டு வைத்த நெடுங்குச்சிகளாக நிற்கின்றன. மாடுகளின் மலிவு உணவான வைக்கோலின் விலை, விண்ணைத் தொட்டு நிற்கிறது. ‘விலை ஏறினாலும் பரவாயில்லை, கால்நடைகளைக் காப்பாற்றலாம்’ என நினைத்தாலும், அவ்வளவு சுலபத்தில் வைக்கோல் கிடைப்பதில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் நெல்லின் விலையைவிட அதிக விலைக்கு விற்பனையாகிறது ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் வைக்கோல்.
மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடக்கும் நிலையில், வைக்கோலுக்கும் வழியில்லாமல் எலும்பும் தோலுமாக நிற்கின்றன கால்நடைகள். தீவனம் இல்லாமல் அவை படும் துன்பத்தைக் காணச் சகிக்காமல் சந்தைக்குக் கொண்டுபோனால், அவற்றை அடிமாடாக ஆக்குகின்றனர் வியாபாரிகள். தலைமுறை தலைமுறையாக வற்றாத நீர் கொண்ட வளமான கிணறுகள்கூட வறண்டு கிடக்கின்றன. இதையெல்லாம் காணச் சகிக்காமல், பல விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட விவசாயமே சூன்யமாகிப்போன ஒரு நிலை உருவாகியுள்ளது. 

இவ்வளவுக் கடுமையான பாதிப்பு களுக்கு மத்தியிலும், பல விவசாயிகள் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தாக்கியுள்ள வறட்சிக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், அவர்கள் சில தொழில்நுட்பங்கள் மூலமாகச் சிக்கல்களைச் சமாளித்து விவசாயத்தைத் தொடர்கிறார்கள். வறட்சியைச் சமாளிக்கும் அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை, பல வல்லுநர்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது, ‘பசுமை விகடன்’. 

இதழ் வழியாகத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதோடு நிற்காமல்... கண்காட்சிகள், கருத்தரங்குகள் மூலமாகவும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்திவருகிறது பசுமை விகடன். இந்த வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்ட விவசாயிகளில் பலர், தங்கள் தூர்ந்துபோன பழைய ஆழ்துளைக் கிணறுகளை மீட்டனர். தங்கள் கால்நடைகளுக்கு ஏற்பட்ட பிணிகளை மூலிகை வைத்தியம் மூலம் சரி செய்திருக்கிறார்கள். காலியாக இருந்த மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். தங்கள் விளைபொருள்களை அப்படியே விற்பனை செய்யாமல், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் முறைகளைத் தெரிந்துகொண்டு, கூடுதல் வருமானம் பெறுகிறார்கள். இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டதால், இடுபொருள் செலவைக் குறைத்திருக்கிறார்கள். 

‘பசுமை விகடன்’ நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு மழைநீர்ச் சேமிப்பு குறித்து நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ் சொன்ன கருத்துகளைக் கடைப்பிடித்து... தன்னுடைய ஆழ்துளைக் கிணற்றை மீட்டெடுத்திருக்கிறார், பொள்ளாச்சி அருகேயுள்ள எஸ்.குமாரபாளையத்தைச் சேர்ந்த சதீஷ். 

இவரைப் போலவே, நத்தத்தைச் சேர்ந்த பிரதீஸ், குஜிலியம்பாறையைச் சேர்ந்த ரகுபதி, தாராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் எனப் பலரும் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தித் தங்கள் ஆழ்துளைக் கிணறுகளைச் செறிவூட்டியிருக்கிறார்கள். இதைப்போன்று இன்னும் பல தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில், நான்காவது வேளாண் கண்காட்சியைத் திருச்சியில் ஏற்பாடு செய்துள்ளது ‘பசுமை விகடன்’.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை திருச்சி மாநகர், மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. பாரம்பர்ய விதைகள், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, சித்த மருத்துவம், மூலிகைகள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், கருவிகள், சொட்டுநீர் உபகரணங்கள், இயற்கை இடுபொருள்கள், விதைகள், நாற்றுப்பண்ணைகள், வங்கிகள், இயற்கை உணவுப்பொருள்கள் என அனைத்துத்துறைகளைச் சார்ந்த தகவல்களும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் இந்த வேளாண் கண்காட்சி நடைபெற உள்ளது. 

நடிப்புத்துறையில் மட்டுமல்ல, இயற்கை விவசாயத்திலும் சிறப்பான சாதனை செய்துவரும் நடிகர் கிஷோர், தமிழ்நாடு மண்டல நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, கர்நாடக மாநிலம் மைசூரில் இயங்கி வரும் மத்திய அரசின் சி.எஃப்.டி.ஆர்.ஐ இயக்குநர் முனைவர் ராம ராஜசேகரன் மற்றும் சத்தீஸ்கர் மாநிலம், தாம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்டு தங்களின் அனுபவங் களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். நான்கு நாள்களிலும், முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளின் பயனுள்ள கருத்தரங்கு உரை வீச்சுகளும் நடைபெறவுள்ளன. 

விவசாயத்தை லாபகரமாக மாற்ற வழிகாட்டும் இந்நிகழ்வுக்குத் திரள்திரளாக வாருங்கள்!

- ஆர்.குமரேசன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment