Wednesday, August 30, 2017

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஹோமியோபதி டாக்டர்!

ஊழலில் திளைக்கும் கவுன்சில்
‘ஆயுர்வேதம்’, ‘ஹோமியோபதி’ என மாற்று மருத்துவத்தின்மீது நம்பிக்கை பெருகும் காலம் இது. எனவே, போலி டாக்டர்கள் இங்கேயும் கல்லாகட்டத் தொடங்கிவிட்டனர். இறந்துவிட்ட ஹோமியோபதி மருத்துவர்களின் பதிவு எண்களைத் தங்களின் பெயர்களுக்கு மாற்றிக்கொண்டு, ‘ஹோமியோபதி மருத்துவர்’ என வலம்வந்துகொண்டிருந்த தஞ்சாவூர் பாலகிருஷ்ணன், கோவை ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் ஸ்ரீதரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்துள்ளது, சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறை.

“இவர்கள் வெறும் அம்புகள்தான். இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்கிறது” என பகீர் கிளப்புகிறார் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தம். அவரிடம் பேசினோம்...

“தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் என்பது ‘System of medicine and Practioner of Homeopathy Act -1971’ என்ற சட்டத்தின்கீழ் இயங்குகிறது. ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இதில் `பி’ மற்றும் `சி’ பிரிவுகளில் மட்டும் பதிவுபெற்ற மருத்துவர்கள் 15,176 பேர் உள்ளனர். 4.5.1976 தேதிக்குப் பிறகு இந்தப் பதிவு தொடரவில்லை. ‘பதிவுபெற்ற மருத்துவர்கள் உயிருடன் உள்ளார்களா, மருத்துவம் பார்க்கிறார்களா?’ என்று கவுன்சில் சரிபார்க்காததன் விளைவே, இதுபோன்று போலி மருத்துவர்கள் உருவாகக் காரணம்” என்றவர், அதன் பின்னணியை விளக்கத் தொடங்கினார்.
“போலிச் சான்றிதழ்களை விற்பனை செய்வதற்கென்றே, தனியாக பல தரகு கும்பல்கள் உள்ளன. இவர்கள் தமிழ்நாடு முழுக்க கிராமம் கிராமமாகச் சென்று, ஆள் பிடிக்கின்றனர். உதாரணமாக, திருப்பூர் ஸ்ரீதரன் என்பவர் வீழ்ந்த சம்பவத்தைக் கூறுகிறேன். இவர் பி.ஃபார்ம் முடித்தவர். இவருடைய அப்பா, ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவந்தவர். ‘எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே மருந்துக்கடை வெச்சு நடத்துவ? நீயும் ஹோமியோபதி டாக்டரா இருந்தா, பெருசா சம்பாதிக்கலாமே’ என்று ஆசைவார்த்தைகள் கூறி, ஒரு பெரும்தொகையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு செங்கல்பட்டைச் சேர்ந்த இறந்துபோன கே.சி.ஸ்ரீதரன் என்ற மருத்துவரின் பதிவு எண்ணை, எஸ்.ஸ்ரீதரன் என்ற இவருக்கு மாற்றிக் கொடுத்துள்ளனர் தரகர்கள்.

இந்தப் போலிச் சான்றிதழின் விலை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய் என நீள்கிறது. ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலில் பதிவுபெற்ற மருத்துவர்களின் பட்டியலைக் கொண்டு, நான் ஊர் ஊராகப் பயணித்து இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தேன்.

2010-2012 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் 40 பேர் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்றுள்ளதைப் பதிவாளர் ராஜசேகரன் கவனத்துக்குப் புகாராகக் கொண்டுச்சென்றேன். இந்தத் தரகு வேலைக்குத் தலைமை யாக இருந்து செயல்பட்டவர்கள் முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் மதுரை ஹானிமன் ஆகியோர்தான். இவர்களுக்காக ஊர் ஊராகப் பயணித்து ஆள்பிடித்தவர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் சிலர்” என்றார் காட்டமாக.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ராஜசேகரனைத் தொடர்பு கொண்டோம். “சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் முறைப்படி புகார் கொடுத்ததன் பேரில், போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்” என ராஜசேகரன் தெரிவித்ததாக, அவரின் உதவியாளர் நம்மிடம் கூறினார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “நான் கால்நடை மருத்துவர். நான் மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்க முடியுமா? ஆக, முறையான மருத்துவம் மக்களைச் சென்றடையும்வகையில், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
ஹானிமன், சவுந்தரராஜன் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தரப்பில் பேசிய சிலர், “ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவர், மத்திய ஹோமியோபதி கவுன்சிலுக்குத் தேர்வு செய்யப்படுவார். இதில் தமிழ்நாடு சார்பாகப் போட்டியிடும் எட்டுப் பேரில் ஞானசம்பந்தமும் ஒருவர். அதில் வெற்றி பெறவே தன்னை அவர் நேர்மையானவர் போல காட்டிக் கொள்கிறார்” என்றனர்.

“ஆண்டுதோறும் மருத்துவக் கவுன்சில் தரும் அறிக்கை சாதகமாக இருந்தால் மட்டுமே ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் தமது அனுமதியைத் தொடர முடியும். எந்த நேரமும் கவுன்சிலைச் சார்ந்தவர்கள், ஒரு ஹோமியோபதி மருத்துவமனையை ஆய்வுசெய்து, தவறு இருப்பதாகக் கண்டுபிடித்தால், அதன் உரிமத்தை ரத்து செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. இப்படி வலிமையான கவுன்சிலின் பதவியைப் பெற, தேர்தலில் வெற்றிபெற வேண்டும். நேரடி வாக்குப்பதிவாக இல்லாமல் தபால் வாக்குப்பதிவாக இருப்பதால் இறந்தவர்களின் பெயர்களில் போலியான ஒருவரை நியமித்து, தங்களுக்குச் சாதகமான வாக்காக மாற்றிக்கொள்கின்றனர். இதனால்தான் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் பெருகியுள்ளனர்” என்கின்றனர், நிஜமான ஹோமியோபதி மருத்துவர்கள்.

பக்க விளைவில்லாத ஹோமியோபதி மருத்துவத்துக்குப் பக்க விளைவுகளை உருவாக்கி வருகிறார்கள் சில போலிகள். இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்போது?

- சே.த.இளங்கோவன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment