Wednesday, August 30, 2017

“வேண்டாம் டாஸ்மாக்!”

எம்.ஜி.ஆரின் உதவியாளர் நடத்திய 16 ஆண்டு சட்டப் போராட்டம்
பொதுவழியை மறித்துக் கட்டப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை, 16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்துக்குப் பின் அரசே இடித்துத் தள்ளியிருக்கிறது. டாஸ்மாக் கடையும் பாரும் இருந்த இடம், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 30 மீட்டர் தூரத்தில். 

எம்.ஜி.ஆர் பெயரால் அமைந்த அரசை எதிர்த்துப் போராடி, சட்டத்தின் மூலமாகவே இதற்குத் தீர்வு கண்டிருப்பவர், எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த ஜார்ஜ்ராஜ். இதுகுறித்து ஜார்ஜ்ராஜிடம் பேசினோம். 

“எம்.ஜி.ஆர் நகரில் அண்ணா மெயின் ரோட்டை ஒட்டியுள்ள கோவிந்தசாமி தெருவில், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை ஒன்று 2001-ல் நிறுவப்பட்டது. அடுத்ததாக பார் வைக்க இடம் தேடினார்கள். அண்ணா மெயின் ரோட்டிலிருந்து குறிஞ்சி தெருவுக்குச் செல்கிற ஐந்தடி வழிப்பாதையை மறித்து, குறுக்கே சுவர் எழுப்பி, அதையே பார் ஆக்கிவிட்டார்கள். ஒருபக்கம் அரசுப் பள்ளி, இன்னொருபக்கம் குடியிருப்புகள்... வீடுகளுக்கு யாரும் போக முடியாதபடி பொதுப்பாதையை மடக்கி அங்கே ‘பார்’ நடத்தினால் என்ன நியாயம்? என் போராட்டம் இங்கிருந்துதான் தொடங்கியது.
குடிசை மாற்று வாரியம் குடியிருக்க ஒதுக்கிய வீட்டில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது. எனவே, ‘டாஸ்மாக் அமைந்துள்ள இடம் யாருக்குச் சொந்தமானது’ என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டேன். பதில் தராமல் இழுத்தடித்தனர். மேல்முறையீடு செய்துகொண்டே இருந்தேன். பின்னர்தான் அது, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கான இடம் எனத் தெரிந்தது. 

அடுத்தடுத்த என் நடவடிக்கையால் அச்சமடைந்தார், அந்த இடத்தின் உரிமையாளர் கே.ஆர்.சுப்பிரமணியன். இவர்தான் டாஸ்மாக் கடைக்கு அந்த இடத்தை வாடகைக்கு விட்டு, அங்கு பார் நடத்தி வந்தவர். ஆள்வைத்து என்னை மிரட்ட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ‘பெரியவரே... உங்களை ஏதாவது பண்ணிட்டு, மப்புல தெரியாம செய்துட்டோம்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க... பார்த்து நடந்துக்குங்க’ என்று போலீஸில் எனக்கு அறிவுரை சொன்னார்கள். 

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், டாஸ்மாக் எம்.டி ஆகிய ஐவரும் இதற்குப் பதிலளிக்கும்படி வழக்கில் சேர்த்தேன். அதுவரை பதில் சொல்ல முன்வராதவர்கள், ஆளுக்கொரு அரசு வழக்கறிஞர் என ஐந்து அரசு வழக்கறிஞர்களுடன் கோர்ட்டுக்கு வந்தனர். 
‘டாஸ்மாக் கடை இருக்கும் இடம் எனக்குச் சொந்தமானது’ என்று பொய்யான ஓர் ஆவணத்தை டாஸ்மாக்கை நடத்திவந்த கே.ஆர்.சுப்பிரமணியன் கோர்ட்டில் தாக்கல் செய்தார். ‘குறிஞ்சி தெரு ஐந்தடிப் பாதை அல்ல, மூன்றடிப் பாதைதான்’ என்று அத்தனை அரசு வழக்கறிஞர்களும் கோர்ட்டில் வாதிட்டனர். அடுத்து, ‘அந்தப் பாதையை ஆக்கிரமித்து வைத்திருப்பதே ஜார்ஜ்ராஜ்தான்’ என்றும் வாதங்களை வைத்தனர்.

அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக்கொண்ட முதலாவது அமர்வு, ‘அத்தனை அதிகாரிகளும் நேரில் போய் குறிஞ்சித் தெருப் பாதையைக் கள ஆய்வு செய்யுங்கள். மனுதாரர் ஜார்ஜ்ராஜ் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு அந்தப் பாதையை பொதுவழியாக மாற்றுங்கள். அங்கிருந்து டாஸ்மாக் கடையையும் அகற்றுங்கள்’ என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.  

தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு சொன்னதை நிறைவேற்றுவதிலும் அதிகாரிகள் சுணக்கம் காட்டினர். மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தேன். அதன்பின் பிப்ரவரி மாதம் டாஸ்மாக் கடையை அகற்றினார்கள். அடுத்ததாக பாரை இந்த ஆகஸ்ட் 23-ம் தேதிதான் இடித்தார்கள். இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன்” என்று பெருமூச்சுவிட்டார் ஜார்ஜ்ராஜ்.
அ.தி.மு.க அணிகள் நடத்திவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நல்ல விஷயம்தான். இப்போதுள்ள சூழ்நிலையில் எதையும் பேச விரும்பவில்லை. இந்த டாஸ்மாக் கடையை இத்தனை ஆண்டுகளாக இங்கு நீட்டிக்கவிட்டதே, இங்கு பொறுப்பில் இருக்கும் ஆளுங்கட்சி ஆட்கள்தான். அதுவே வேதனையான விஷயம்தானே. தலைவர் எம்.ஜி.ஆரிடம் 1971 முதல் உதவியாளராக அவருடைய வீட்டிலேயே கிடந்தேன். தலைவருக்குப் பின்னால், ஜானகியம்மாவுக்கு உதவியாக இருந்தேன். பிறகு, ஜெயலலிதாம்மாவிடமும் உதவியாளராகச் சிறிது காலம் இருந்தேன். நான் ஒரு கட்சிக்காரனாக இல்லாமல், எம்.ஜி.ஆர் வழித்தோன்றல்களின் விசுவாசியாக மட்டும் கடைசிவரையில் இருந்துவிட்டேன். இப்போது சுத்தமாக ஒதுங்கி நிற்கிறேன்” என்கிறார் ஜார்ஜ்ராஜ்.

புனித ஜார்ஜ் கோட்டைக்குக் காதுகள் இருக்குமாயின், ஜார்ஜ்ராஜ் போன்றோரின் குரல்கள் கேட்க வாய்ப்பிருக்கிறது.

- ந.பா.சேதுராமன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment