Tuesday, August 15, 2017

தலைநகரில்... அ.தி.மு.க. தமிழ்த்துரையும் தி.மு.க. கனல்மொழியும்!

தலைநகரில்... அ.தி.மு.க. தமிழ்த்துரையும் தி.மு.க. கனல்மொழியும்!

நாடாளுமன்றத்தில் தமிழ்க்குரலும் தமிழன் குரலும் ஒலித்ததைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்தக் காரியத்தைச் செய்திருப்பதற்கு பாராட்டத்தான் வேண்டும்!

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து, மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதுதான் 1947-ல் இந்திய விடுதலையாக முடிந்தது. அந்தப் போராட்டம் நடந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அதை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதங்கள் நடந்தன. இதில் பிரதமர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். நாட்டைப் பற்றியும், நாட்டின் வளர்ச்சி பற்றியும், நாம் போக வேண்டிய பாதை பற்றியும் அனைவரும் பேசினார்கள். இந்த விவாதங்களில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் பேச்சுகள் முக்கியமானவை.

ஒன்று, மக்களவையில் தம்பிதுரையின் பேச்சு. இன்னொன்று, மாநிலங்களவையில் கனிமொழியின் பேச்சு.

தமிழ்த்துரை ஆன தம்பிதுரை!

அ.தி.மு.க எம்.பி-யும், மக்களவைத் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரையின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. தனது உரையைத் தமிழில் தொடங்கினார் தம்பிதுரை. அவர் பேச ஆரம்பித்ததுமே, வட இந்திய எம்.பி-க்கள் முகம் சுளித்தார்கள். கூச்சல் போட ஆரம்பித்தார்கள். ‘தமிழில் பேசுவது எங்களுக்குப் புரியவில்லை... ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுங்கள்’ என்றும் ஒலி எழுப்பினார்கள்.

தம்பிதுரை தமிழில் தொடர்ந்தார். மீண்டும் எம்.பி-க்கள் குரல் எழுப்பினார்கள்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டார். ‘‘முன்கூட்டியே தெரிவித்து இருந்தால், நீங்கள் தமிழில் பேசுவதை மொழிபெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்திருப்பேன்” என்றார். ‘‘நான் தமிழில் பேசுவதற்கு அனுமதி வாங்க வேண்டி உள்ளது. ஆனால் தமிழில் கேட்பதற்கு வாய்ப்பு இல்லையே” என்று தனது ஆதங்கத்தை தம்பிதுரை வைத்தபோது மற்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள்.

‘‘நாங்கள் மற்றவர்களது உரையை ஆங்கிலத்திலோ இந்தியிலோதான் கேட்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழில் கேட்கும் வசதி இல்லை. யாராவது வங்காள மொழியில் பேசினால் நாங்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தானே அதன் மொழிபெயர்ப்பைக் கேட்டாக வேண்டும்” என்ற தம்பிதுரை, அதன்பிறகு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

‘‘நமது முன்னோர்கள் சுதந்திரத்துக்காகப் போராடியதே, நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காகத்தான். இந்தத் தேசத்தில் இருக்கும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டும். ஒரு மொழிக்கு முன்னுரிமை தராதீர்கள். அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை தாருங்கள்” என்று தமிழ்த்துரையாக மாறினார் தம்பிதுரை.

கனல்மொழியான கனிமொழி!

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. கனிமொழியும் தமிழ்க் கவிதையில் இருந்துதான் தொடங்கினார். ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் பாட்டை மேற்கோள் காட்டினார்.
‘‘இந்திய விடுதலைக்காகப் போராடிய பூலித்தேவன், வேலு நாச்சியார், சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பாரதியார், தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன் எனப் பலரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சியே இந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்தது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பலரும் சாதிமதச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீங்கள் சொல்லும் தேசிய மொழியைப் பேசத் தெரியாதவர்கள். ஆனாலும், அவர்கள் எந்த விதத்திலும் ‘இந்தியர்கள்’ என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பார்க்கப்பட்டதில்லை. ஆனால், இன்று இந்தி பேசத் தெரியாமல் இருந்தால், தாங்கள் விரும்பிய உணவை உண்டால், கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் ‘அவர் இந்தியனே இல்லை’ என்ற நிலை உருவாகியுள்ளது.

சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால் சுதந்திரம் அனைவருக்குமானதாக இருக்கிறதா?

‘எத்தனைபேர் இழுத்தென்ன...
இன்னும் 
சேரிக்குள் வரவில்லை தேர்’

என்ற நிலைதான் இன்னும் இருக்கிறது. தீண்டாமை ஒழியவில்லை. தலித் சமூகத்தவரைக் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதிப்பதில்லை. கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் மிக முக்கியமாகப் பேச வேண்டியது விவசாயிகள் பிரச்னை. தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நடக்கிறது. இதைச் சொல்வதற்கு அவமானமாக இருக்கிறது. பெண்கள் நிலைமை மோசமாக உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதைச் சொல்வதற்கு நமக்கே அவமானமாக இல்லையா? பெண்களை நாம் உண்மையில் பாதுகாக்கிறோமா? பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவர எவ்வளவு போராட்டங்கள் நடந்தன. இதை எல்லாம் கடந்து வரவேண்டும் என்றால், முதலில் பயத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். எல்லோரும் எப்போது பயத்தில் இருந்து வெளிவருகிறார்களோ, அப்போதுதான் சுதந்திரத்தை நினைத்துப் பெருமைப்பட முடியும்” என்று முடித்தார் கனிமொழி.

தமிழ்க்குரலை தம்பிதுரையும் தமிழர்களின் சமூக நீதிக் குரலை கனிமொழியும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துவிட்டார்கள்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment