Monday, August 21, 2017

‘‘தமிழ்நாட்டுக்கான ப்ளூ பிரின்ட்டை ரஜினி தயாரித்துக்கொண்டிருக்கிறார்!’’

‘‘தமிழ்நாட்டுக்கான ப்ளூ பிரின்ட்டை ரஜினி தயாரித்துக்கொண்டிருக்கிறார்!’’

‘‘ஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார். அவர் வந்தால் இவற்றையெல்லாம் செய்வார் என்று விளக்கம் கொடுக்கிற மாநாடு இது’’ என்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

‘ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் அவசியம்’ என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி திருச்சியில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த தமிழருவியிடம் பேசினோம்.

‘‘காந்தியையும் காமராஜரையும் பின்பற்றும் நீங்கள், திடீரென ரஜினி என்ற நடிகரை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்?’’ 

‘‘நேற்று வரை நான் ஏதாவது நடிகர் பின்னால் இருந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. இப்போது ரஜினிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்பதால், மாறி மாறிப் பேசுகிறேன் என்கிறார்கள். நான் மாறவே இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழித்துக்கட்டுவது என்பது எனக்கான வாழ்க்கைத் தவம். அதுதான் என் வேள்வி. காமராஜர் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தார். அதனால், அவர் சொன்னதையெல்லாம் அன்றைய மத்திய அரசு செய்து கொடுத்தது. ஜெயலலிதாவுக்கு என தனிப்பட்ட ஆளுமை இருந்ததால், அவரைப் பார்த்து மத்திய அரசு பணிந்தது. ‘நீட்’ தொடங்கி எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவை மீறி நடைமுறைப்படுத்துவதற்குத் தயங்கினார்கள். எனவே, இன்றைக்குத் தமிழகத்துக்குத் தேவை மிகப் பெரிய வசீகரத் தலைமை. மக்களைப் பெரும் திரளாக, தன் முதுகுக்கு பின்னால் நிறுத்தி வைக்கக்கூடிய மாபெரும் தலைமை தேவை. அந்தத் தலைமை மட்டுமே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ரஜினி மட்டுமே நம்பிக்கையாக இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்துகிறேன்.’’ 

‘‘கதிராமங்கலம் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், விவசாயிகள் போராட்டம் என எதற்குமே வாய் திறக்காத, ஒரு அறிக்கை கூட கொடுக்காத ரஜினிதான் இனி மக்களுக்காகப் பேசப்போகிறாரா?’’ 

‘‘அறிக்கை கொடுத்துவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா? அவர் களத்துக்கு வர நினைக்கிறார். சொல்வதை விட செயலில் காட்டத்தான் விரும்புகிறார் ரஜினி.’’ 

‘‘கமல்ஹாசன் கூட வெளிப்படையாகத் தமிழக அரசை விமர்சனம் செய்கிறார். ஆனால், ரஜினி அண்மைக் காலமாக எங்கேயும் அரசியல் பேசியதில்லையே?’’ 

‘‘கமல்ஹாசன் களத்தில் நின்று போராடினாரா? கதிராமங்கலத்தில் நின்றுகொண்டு குரல் கொடுத்தாரா? நெடுவாசலில் நின்றுகொண்டு கொடி பிடித்தாரா? அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ட்விட்டரில் இரண்டு வரி எழுதினார். அவ்வளவுதான். நான் மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்கிறேன். இந்த தமிழருவி மணியன் நாள் முழுவதும் நாயாகக் கத்தினாலும், எந்தத் தமிழனும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆனால், கமல் இரண்டு வரி ட்விட்டரில் போட்டுவிட்டால் அத்தனை ஊடகங்களும் ஓடி ஓடி அவர் பின்னால் நிற்கும். காரணம், அந்த மனிதருக்குப் பின்னால் இருக்கும் சினிமா என்ற ஒளிவட்டம். ரஜினியும் இரண்டு வரி ட்விட்டரில் போட்டால் நிறைவடைந்து விடுவீர்களா? உங்களுக்குத் தேவை வெறும் நடிப்புதானா? களத்துக்கு யார் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.’’ 

‘‘சரி, ரஜினி என்ன செய்கிறார்?’’ 

‘‘இந்தப் பிரச்னைகளை ரஜினி ஆழமாகப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கிடைக்க கூடிய நேரத்தில், வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்களைச் சந்திக்கிறார். அவர் ஒரு ப்ளூ பிரின்ட்டைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு பிரச்னை என்றால், ‘இந்தப் பிரச்னைக்கு நிபுணர் யார்’ என அறிந்து அவரை அழைத்துப் பேசுகிறார். இதற்கு என்ன தீர்வு தர முடியும் எனச் சிந்திக்கிறார். இப்போது அவர் வெறும் நடிகராகத்தான் இருக்கிறார். அவர் தொழிலை அவர் பார்க்கிறார். அரசியலுக்கு வரும்போது எல்லாவிதமான பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான திட்டங்களோடுதான் அவர் வருவார்.’’ 

‘‘ஒருவேளை எதிர்காலத்தில் கமலும் அரசியலுக்கு வந்தால் அவரையும் ஏற்றுக்கொள்வீர்களா?’’ 

‘‘ஒவ்வொரு புகழ்பெற்ற நடிகரும் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கிவிட்டால், கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்கும் வித்தியாசமே தெரியாதே. கமலை  ஒருபோதும் நான் வரவேற்க மாட்டேன். இவர்களுக்கு உண்மையாகவே சமூக நேயம் இருக்கும் என்றால், மாற்று அரசியலை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ஊழலற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், ரஜினியோடு கைகோத்து நிற்கட்டும்.’’  

‘‘சில ஆண்டுகளுக்கு முன் வைகோவை முதல்வராக்க வேண்டும் என முன்னிறுத்தினீர்கள்?’’ 

‘‘ஆமாம். இன்றும் சொல்கிறேன். வைகோ முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்தான். நான் ரஜினியை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக, நேற்று கூட இரண்டு மணி நேரம் வைகோவிடம் பேசினேன். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல மாட்டேன். ரஜினியின் வசீகரத் தலைமையால், இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்துவிட முடியும் என்று நம்பித்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். ரஜினிகாந்த் காலத்தின் தேவையாக வந்து நிற்கிறபோது, அவரைப் புறம் தள்ளிவிட்டு, இன்னொரு அரசியல் தலைவரை முன்னெடுப்பது சரியாக இருக்காது. ரஜினிதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியைக் கொடுக்கப் போகிறார். பொறுத்திருந்து பாருங்கள்.’’ 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment