Friday, August 18, 2017

தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம்கூட வரமுடியாது!

தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம்கூட வரமுடியாது!

மலைக்கோட்டையைச் சுற்றி விதிமீறல் கட்டடங்கள்

விதிகளை வகுப்பதே அதை மீறுவதற்குத்தான் என்று ஆகிவிட்டது. திருச்சியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட 223 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர் மாநகராட்சி அதிகாரிகள். ‘இந்த 223 கடைகளைக் கட்டுவதற்கு அனுமதி தந்ததும் அதே மாநகராட்சி அதிகாரிகள்தானே’ எனக் கொந்தளிக்கிறார்கள் மக்கள்.

விதிகளை மீறிக் கட்டப்பட்ட ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்குச் சீல் வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத்  தொடர்ந்தே இந்த சீல் வைபவம். வழக்கைத் தொடர்ந்த, திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்த ஆயிஷா பேகத்தைச் சந்தித்தோம்.

மலைக்கோட்டை அருகேயுள்ள என்.எஸ்.பி மற்றும் டபுள்.யூ.பி சாலைகளில் ஆற்காடு நவாப்புக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அவற்றை அடிமனை வாடகைக்கு விட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 1996-ம் ஆண்டு, ஆற்காடு நவாப்பின் ஏஜென்ட்கள், இடத்தைக் காலி செய்ய நெருக்கடி கொடுத்தார்கள். இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கில் ஆற்காடு நவாப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், தீர்ப்பை நிறைவேற்ற உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கினோம்.

இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினரும் நவாப்பின் ஏஜென்டும் இரண்டு மாடிக் கட்டடம் கட்டுவதற்கு, குத்தகை ஒப்பந்தம் போட்டனர். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு ரத்னா ஸ்டோர்ஸ், எங்கள் கடைக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல சுவரையொட்டி பள்ளம் தோண்டி, கட்டடம் கட்டத் துவங்கினார்கள். நாங்கள் புகார் செய்தோம். இடத்தை ஆய்வுசெய்த திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், 15 அடி காலியிடம் ஒதுக்குவது உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளாத ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாகம், கட்டடம் கட்டி முடித்தது. இதுபற்றி நான் வழக்கு போட்டதால், ‘மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும், அதிகாரிகள், இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார்கள்.

தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம்கூட வரமுடியாது!

இதையடுத்துதான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தோம். அதில்தான், ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது அதிகாரிகள் திடீர் ஞானம் வந்ததைப் போல், ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடத்தோடு சேர்த்து 223 கடைகளுக்குச் சீல் வைத்துள்ளனர். ஆனால், விதிமுறைகள் மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியது, மின்சாரம் வழங்கியது, கட்ட அனுமதித்தது எல்லாம் இவர்கள்தானே?’’ எனக் கேட்டார் அவர்.

ராக்போர்ட் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் சுந்தர்ராஜன், “மலைக்கோட்டை மற்றும் மெயின்கார்ட் கேட் உள்ளிட்டவை மத்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள். இந்தப் பகுதிகளில், முதல் 100 மீட்டர் வரை எந்தவிதப் பணியும் மேற்கொள்ளக் கூடாது. அடுத்து 300 மீட்டர் வரை இரண்டு மாடிக் கட்டடங்களுக்கு மேல், எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது. ஆனால், இங்குதான் அதிக அளவில் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கிருக்கும் பிரபல ஜவுளிக்கடைகளின் அடுக்குமாடிக் கட்டடங்கள் விதிமுறைகளை மீறித்தான் கட்டப்பட்டுள்ளன.

தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம்கூட வரமுடியாது!

நடைபாதைகளைக்கூட ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளனர். மலைக்கோட்டை பகுதியே மக்கள் நெரிசல் மிக்க பகுதியாக மாறிவிட்டது. இங்கு தீ விபத்து ஏற்பட்டால், ஒரு தீயணைப்பு வாகனம் வந்து செல்லக்கூட வழி இல்லை. இந்த வி‌ஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர், கோடீஸ்வரர்களாகி உள்ளார்கள். விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது” என்றார்.

ஆற்காடு   நவாப்    அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி முகமது பஷீரிடம் கேட்டோம். “எங்களுடைய வாடகை தாரரான ஆயிஷா பேகத்தின், இடத்தைக் காலிசெய்யச் சொன்னோம். அடுத்தடுத்து வழக்குகள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்தார். ஆனால், வழக்கின் தீர்ப்புகள் எங்களுக்குச் சாதகமாகவே வந்தன. அதனால் வேறுவகையில், விதிமுறைகள் மீறி ரத்னா ஸ்டோர் கட்டப்பட்டதாக வழக்கு தொடர்ந்து, சீல் வைக்க உத்தரவு பெற்றுள்ளார். ரத்னா ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல், அனுமதி வாங்கிய கட்டடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார்.

தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம்கூட வரமுடியாது!

திருச்சி நகர வளர்ச்சிப் பொறியாளர் நாகேஷிடம் பேசினோம். ‘‘கட்டடம் கட்ட அனுமதி வாங்கிவிட்டு, பின்பு விதிமுறைகளை மீறிக் கட்டுவார்கள். அதிகாரிகள் சென்று நோட்டீஸ் ஒட்டுவார்கள். அபராதம் விதிப்பார்கள். அரசு அனுமதிக்கும் பட்சத்தில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். அதன்படி இப்போது கோர்ட் உத்தரவுக்குப் பிறகு 223 கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறோம்’’ என்றார்.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது தேவையில்லையே?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment