Monday, August 21, 2017

உதவச் சொன்ன வைகோ... உருகிப்போன பினராயி...

உதவச் சொன்ன வைகோ... உருகிப்போன பினராயி...

கேரளாவில், சாலை விபத்தில் சிக்கிய நெல்லையைச் சேர்ந்த முருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால், ஏழு மணி நேரம் போராடிவிட்டு உயிரிழந்தார். இதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவிசெய்து தனது மனிதாபிமானத்தை நிரூபித்திருக்கிறார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரைகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். கேரள மாநிலம் கோட்டயத்தில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்துவந்தார். கடந்த 6-ம் தேதி முருகன், தனது நண்பர் முத்து என்பவருடன் பைக்கில் சென்றார். கொல்லம் அருகே சாத்தனூர் என்ற இடத்தில், எட்டிகாரா பாலத்தில் எதிரே வந்த பைக் மீது முருகனின் பைக் மோதியது. முத்து சிறிய காயத்துடன் தப்பினார். பலத்த காயம் அடைந்த முருகனை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு பல தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றும், எதுவும் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. ஏழு மணி நேரமாக ஆம்புலன்ஸிலேயே சுற்றிய நிலையில், முருகன் உயிரிழந்தார். அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரக்கூட பொருளாதார வசதி இல்லாத நிலை. கேரள மாநில ஜனநாயக வாலிபர் சங்கம் அளித்த உதவியால் சொந்த ஊருக்கு உடலை எடுத்து வந்தனர்.

உதவச் சொன்ன வைகோ... உருகிப்போன பினராயி...

முருகனுக்குச் சிகிச்சை அளிக்கப்படாத விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. முருகனின் குடும்ப வறுமையைக் கவனத்தில் கொண்ட கேரள மார்க்சிஸ்ட் கட்சி, அவருடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தது. மருத்துவமனைகள் நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அத்துடன், சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

இந்த நிலையில், கேரள மார்க்சிஸ்ட்டுகள் உதவியால் முருகனின் மனைவி பாப்பா என்ற முருகம்மாள், அவரது ஏழு வயது மகன் கோகுல், ஆறு வயது மகன் ராகுல் ஆகியோர் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தனர். அந்தக் குடும்பத்தின் நிலையை  அறிந்து அவர் அதிர்ந்துவிட்டார். குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்த தந்தையை இழந்து நிராதரவாக நிற்கும் அந்தச் சிறுவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு உருகினார். கேரள அரசு சார்பில் அந்தக் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி, பாப்பாவிடம் பேசிய பினராயி விஜயன், ‘‘இவர்களை நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை எங்கள் கட்சி செய்யும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக்கொள்ளுங்கள். என்ன உதவி தேவைப்பட்டாலும் வந்து கேளுங்கள்’’ என்று தழுதழுத்தார்.

உதவச் சொன்ன வைகோ... உருகிப்போன பினராயி...

இந்தச் செய்தி அறிந்ததும் மிகவும் வருத்தப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, உடனடியாக கேரள ஆளுநர் சதாசிவத்தைத் தொடர்புகொண்டு பேசினார். அத்துடன், வறுமையில் வாடும் முருகனின் குடும்ப நிலை குறித்தும் எடுத்துச் சொன்னார். 

இந்தச் சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ‘‘விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது அவசியம். முருகனை ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரை இழந்து இருக்கிறார். இப்படிப்பட்ட மனிதாபிமானம் இல்லாத சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் நான் உடனடியாக கேரள ஆளுநரிடம் பேசினேன். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். அவர் அந்த மாநில முதல்வரிடம் இதைத் தெரிவித்து இருக்கிறார். அதனை ஏற்று, முருகனின் குடும்பத்துக்கு உதவி செய்ததை மனதாரப் பாராட்டுகிறேன். இது தொடர்பாக ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரைத் தொடர்புகொண்டு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன். மருத்துவர்கள் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்ட பினராயி விஜயன், உதவி செய்ததன் மூலம் அந்த மாநிலத்துக்கு ஏற்பட இருந்த பழியைத் துடைத்து இருக்கிறார்’’ என்றார்.

கேரள அரசின் உதவியைத் தொடர்ந்து தமிழக அரசும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஊர் திரும்பிய பாப்பா என்ற முருகம்மாளைச் சந்தித்தோம். “எங்களுக்கு இங்கேயே பால் மாடுகள் நிறைய இருந்துச்சு. இங்கிருந்து பாலை திருவனந்தபுரம் அனுப்பி வைப்போம். இங்கே சரியாக மழை இல்லாததால் மாடுகளைப் பராமரிக்க முடியல. எல்லா மாட்டையும் வித்தோம். குடும்பத்தைக் காப்பாற்ற 10 வருஷத்துக்கு முன்பு கோட்டயம் பகுதிக்கு வேலைக்குப் போனார். அங்கே பால் கறந்து கொடுக்கும் வேலையைச் செஞ்சார். விபத்தில் சிக்குறத்துக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்புகூட என்னிடமும் பிள்ளைகளிடமும் போனில் பேசினார். சில நாளில் ஊருக்கு வர்றதாச் சொல்லிட்டு வெச்சாரு. ஆனா, அவரோட உடல்தான் வந்துச்சு. இந்தப் பச்சப் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறேனோ?’’ எனக் கதறி அழுதார்.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment