Friday, August 18, 2017

அடங்காத ஆம்னிபஸ் கொள்ளை! - சீஸனில் மிரட்டல்... மற்ற நாள்களில் சைலன்ட்...

அடங்காத ஆம்னிபஸ் கொள்ளை! - சீஸனில் மிரட்டல்... மற்ற நாள்களில் சைலன்ட்...

ண்டிகைக் காலம் மற்றும் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாள்கள் வருகிற காலம் என்றாலே, ஆம்னி பஸ்காரர்களுக்குக் கொண்டாட்டம்தான். விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களிடம் அதிகபட்சமாக எந்தளவுக்குப் பணத்தைக் கறக்க முடியுமா, அதைக் கறந்துவிடுவது வாடிக்கையாகி விட்டது. கிருஷ்ண ஜெயந்தியும் சுதந்திர தினமும் வந்த இந்த விடுமுறைக் காலத்திலும் இதுவே தொடர்கதை.

ரயில்களில் நெரிசல் ஏற்படுவதாலும், அரசுப் பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இருப்பதாலும், அப்படி இருந்தாலும் உரிய நேரத்தில் ஊர் போய்ச் சேருவதில்லை என்பதாலும், தனியார் ஆம்னி பேருந்துகளைப் பலர் நாடுகிறார்கள். இந்தச் சூழலை, தனியார் பேருந்து நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களின் கட்டணக் கொள்ளையில் மாட்டிக்கொண்டு சாமான்ய மக்கள் படும்பாடு சொல்லிமாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில், போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் “அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று மிரட்டுவதுபோல பாவ்லா காட்டுவதுடன் சரி.

இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். “போக்குவரத்துத் துறையில் ஸ்டேஜ் மற்றும் கான்ட்ராக்ட் கேரேஜ் என இரண்டு வகை பெர்மிட்கள் உள்ளன. இவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியார் ரூட் பஸ்களும் அடங்கும். இந்த பெர்மிட்களின் கீழ், ஆம்னி பஸ்கள் வராது. பயணிகளை ஏற்றிச் செல்ல ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட் கிடையாது. அதனால், கான்ட்ராக்ட் முறையில் பெர்மிட் வாங்கிக்கொண்டு, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதுபோல அவர்கள் கணக்குக்காட்டி வருகின்றனர். ஆம்னி பேருந்துகளை இயக்க, மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை. புதுச்சேரி, கர்நாடகம் போன்ற மற்ற மாநிலங்களில் பெர்மிட் வாங்கிக்கொண்டு இங்கு ஓட்டுகிறார்கள். பண்டிகை மற்றும் குறிப்பிட்ட விடுமுறைக் காலத்தில், அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம்.

அரசுப் புறநகர்ப் பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு 42 பைசாவும், விரைவுப் பேருந்துகளில் 56 பைசாவும், சொகுசுப் (டீலக்ஸ்) பேருந்துகளில் 60 பைசாவும் கட்டணமாக வசூலிக்க வேண்டும். அதிநவீன சொகுசு (சூப்பர் டீலக்ஸ்) பேருந்துகளில் கட்டணம் 75 பைசாவிலிருந்து 95 பைசா வரை வாங்கவேண்டும் என்பது அரசின் விதி. இந்தக் கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. இந்தக் கொள்ளையைத் தடுக்கவேண்டுமானால் அனைவரும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும். அதற்கு, முதலில் அவற்றின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.

அடங்காத ஆம்னிபஸ் கொள்ளை! - சீஸனில் மிரட்டல்... மற்ற நாள்களில் சைலன்ட்...

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரன், “டூரிஸ்ட் பெர்மிட்டில்தான் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேருந்துகளை ஓட்டுகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கட்டண நிர்ணயம் கிடையாது. அப்படி இருக்கும்போது, ‘அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்படிச் சொல்கிறார்? ஆம்னி பஸ்களில் டிக்கெட் வழங்க முடியாது என்கிற நிலையில், ஆன்லைனிலும் அச்சடித்தும் டிக்கெட் தர எப்படி அனுமதிக்கிறார்கள்? ஆம்னி பேருந்துகளில் லக்கேஜ் ஏற்றிச் செல்லக்கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில், அதிகளவில் லக்கேஜ் ஏற்றிச் செல்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் அரசியல்வாதிகளின் பினாமிகள் பெயரில் இயங்குகின்றன. இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்குத் தொடரும்” என்றார்.

அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கப் பொதுச் செயலாளர் அன்பழகன், “அரசுப் பேருந்துகளில் ஒரு சீட்டுக்கு மூன்று மாதத்துக்கு 420 ரூபாய் சாலை வரி கட்டுகிறார்கள். அதுவே, ஆம்னி பேருந்துகளில் ஒரு சீட்டுக்கு 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். 36 சீட்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 1,08,000 ரூபாய் கட்டவேண்டும். ஸ்லீப்பர் கோச் என்றால் ஒரு சீட்டுக்கு 7,200 ரூபாய் வீதம் வரிகட்ட வேண்டும். பஸ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலத்திலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி கட்ட வேண்டும். டிரைவர் - க்ளீனர் சம்பளம், பேருந்துப் பராமரிப்புச் செலவு, இன்சூரன்ஸ், பேருந்து நிறுத்தக் கட்டணம் என ஆம்னி பேருந்துக்கு நாளொன்றுக்கு 11,735 ரூபாய் செலவாகிறது. ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் பின்பற்றிவரும் கட்டண விதிமுறையின்படி, ஏ.சி இல்லாத பேருந்துகளில், ஒரு கிலோ மீட்டருக்குக் குறைந்தபட்சம் 1.25 ரூபாயிலிருந்து அதிகபட்சம் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளின் வசதிக்கேற்ப இது மாறுபடும். பண்டிகைக் காலம் என்றால் 30-50 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வாங்குகிறோம். சீஸன் இல்லாத நாள்களில் பத்து பேர் இருந்தாலும், அரசுப் பேருந்துகளுக்கு இணையான அல்லது அதைவிடக் குறைவான கட்டணத்தில்தான் பேருந்துகளை இயக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எங்கள் இழப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார்.  

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment