Friday, August 18, 2017

சோனியா விசாரித்த ‘நமது எம்.ஜி.ஆர்’ கவிதை!

சோனியா விசாரித்த ‘நமது எம்.ஜி.ஆர்’ கவிதை!

‘காவி அடி... கழகத்தை அழி..!’ - இது ஆகஸ்ட் 12-ம் தேதி    அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்ட கவிதை. அரசியல் சதுரங்க வேட்டையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரையே காவு வாங்க வைத்தது.

‘உத்தரகாண்ட்டில் ருத்ர தாண்டவமாடி... அருணாசல பிரதேசத்தில் அத்துமீறி அடாவடிகள் நடத்தி... கோவாவில் காங்கிரஸின் குடிகெடுத்து... பீகாரில் லாலு-நித்தீஷைப் பிரித்து பின்வழியே அதிகாரப் பீடத்தைப் பிடித்து... அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரச் செங்கோலை முடக்கி... புதுச்சேரி நாராயணசாமிக்குப் புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி... மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தைப் பறித்து... ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கி அக்கிரமங்கள் நடத்தி... தன்னாட்சி அமைப்புகளைத் தலைகுனிய வைத்து... அரசியல் அரிப்புக்கு அவற்றை சொறிகின்ற ஆயுதமாக்கி... ஜனநாயகப் படுகொலைகளை சகஜங்களாக்கி...’ என்று காட்டமாக மத்திய அரசை விமர்சிக்கும் அந்தக் கவிதை, ‘மோடியா? இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்தும், ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்தானே!’ என்று முடிகிறது.

‘நமது எம்.ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ‘சித்ரகுப்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதிய கவிதை இது. அன்று காலை நாளிதழ் வெளியான உடனே டெல்லி வரை பரபரக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை. அன்று காலையே ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் பணியாற்றும் ஒருவரை ப.சிதம்பரம் தொடர்புகொண்டு, ‘‘இன்று ஏதோ கவிதை வெளியாகி இருக்கிறதாமே! அதன் மொழியாக்கத்தை சோனியா காந்தி அவசரமாகக் கேட்டார்’’ என்று சொல்லி, ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரதியைக் கேட்டதாக சொல்லப்படுகிறது. ‘அதற்குள்ளாக டெல்லி வரை இது பரவிவிட்டதா?’ என எல்லோரும்  பரபரக்க  ஆரம்பித்தனர். சோனியா விசாரித்த தகவல் தெரிந்து, அரசியல் வட்டாரம் அலெர்ட் ஆகிவிட்டது. டெல்லி பி.ஜே.பி வட்டாரமும் கொந்தளித்தது. இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு, ‘‘நீங்கள் கவிதை எழுதுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. இந்தக் கவிதையை யார் சொல்லி வெளியிட்டீர்கள்?’’ என்று விசாரித்திருக்கிறார்.

‘‘எனக்கு யாரும் சொல்லவில்லை. எதையெல்லாம் எப்படி எழுதலாம் என ஜெயலலிதா எனக்குப் பலமுறை வழிகாட்டுதல்கள் கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட கவிதையே அது’’ என விளக்கம் கொடுத்திருக்கிறார் மருது அழகுராஜ். விஷயம் இதோடு முடிந்துவிடும் என அவர் நினைத்தார். ஆனால், அப்படி ஆகவில்லை.

‘நமது எம்.ஜி.ஆர்’ முழுக்க முழுக்க சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது. இதன் நிர்வாகியாக இருப்பவர், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இந்த நாளேட்டில் தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள், இடையில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. சில நாள்களில் மீண்டும் எடப்பாடி தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. ‘தினகரன் நியமனம் செல்லாது’ என  எடப்பாடி அணியினர் தீர்மானம் போட்டபிறகு, எடப்பாடி அணியின் அரசியல் செய்திகள் வருவதில்லை. ஆனால், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்க்கும் கவிதைகளும் கட்டுரைகளும் தவறாமல் இடம்பெற்றுவந்தன.

சோனியா விசாரித்த ‘நமது எம்.ஜி.ஆர்’ கவிதை!

பி.ஜே.பி., பல்வேறு மாநிலங்களில் பின்புறவழியாக ஆட்சியைப் பிடிப்பதாகவும், வருமானவரித் துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அந்தக் கவிதையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ‘‘ஏற்கெனவே பல வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்தப் பிரச்னையான சூழலில், இந்தக் கவிதையே உங்களை உள்ளே தள்ளிவிடும்’’ என்று டி.டி.வி.தினகரனிடம் அவரைச் சுற்றியிருப்பவர்கள் அச்சத்தைக் கிளப்பியிருக்கிறார்கள். இந்தக் கவிதையை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அனுப்பியதாகவும், அது ஆட்சியாளர்கள் கண்ணில்பட்டதும், அவர்கள் கொதித்துப் போனதாகவும் தினகரனுக்கும் சொல்லப்பட்டது. பதறித் துடித்த தினகரன், மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘‘இப்போது ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் பொறுப்பை உறவினர் விவேக் ஜெயராமன் கவனித்துவருகிறார். அந்த நாளேட்டின் கறுப்பு ஆடுகளாக இருந்தவர்களை அவர் நீக்கிவிட்டார். பி.ஜே.பி-க்கு எதிராக எழுதியவர்களையும் இந்நேரம் அவர் நீக்கியிருப்பார்” என்று அறிவித்தார்.

அவர் ‘கறுப்பு ஆடு’ என்றெல்லாம் சொல்லியிருப்பது மருது அழகுராஜையே என்கிறார்கள். அவரை சசிகலா குடும்பத்தினர் அவமானப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ‘சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்’ எனச் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ‘‘தொண்டர்களின் மனக்குமுறலைத்தான் கவிதை வடிவில் எழுதியிருந்தேன். அது, தினகரனுக்கு மனவருத்தத்தையோ நெருடலையோ தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் மதுரையில் அவ்வாறு தினகரன் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் பேசும் மனநிலையில் நான் இல்லை” என்றார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment