எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது தமிழக அரசு. எம்.ஜி.ஆருக்கு விழா நடக்கிறதோ, இல்லையோ... வில்லங்கம் அதிகரித்து வருவது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
கடந்த 9-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அரசினர் பயணியர் மாளிகையில் தங்கினார். வரும் 16-ம் தேதி, கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சம்பத்துக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் போர்க்கொடி உயர்த்தியிருப்பது கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், எடப்பாடி உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன், பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் போன்றவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, “உங்க மாவட்டத்துல விழா நடக்கற நேரத்துல இப்படிப் பண்றது சரியா? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். அம்மா இருந்தா இப்படிப் பண்ணுவீங்களா? கோட்டைக்கு வாங்க பேசிக்கலாம்” என்றாராம். இவர்களை சம்பத்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டிருப்பவர் கடலூர் எம்.பி-யும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான அருண்மொழித் தேவன். அவரைக் கேட்காமல் எந்த முடிவையும் தங்களால் எடுக்க முடியாது என்பதால், தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றார்களாம் நால்வரும்.
இந்தப் பஞ்சாயத்து போதாது என்று, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், விழாவில் பேசிய பேச்சு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. “நான் பல தவறுகளை இழைத்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்து எனக்கு மீண்டும் பதவிகளை வழங்கி, என்னை வாழவைத்தவர் ஜெயலலிதா. எதிரிகள் நம்மைப் பற்றி சொன்னால் பரவாயில்லை. ஆனால், துரோகிகள் விமர்சிக்கிறார்கள். என்னைவிட, இங்கிருக்கும் முதல் அமைச்சரைவிட பல்வேறு பதவிகளை வகித்து, அதிகமாக சொத்து சுகங்களைச் சேர்த்தவர்களெல்லாம் நம் ஆட்சியைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் சண்முகம். அவர் இப்படிப் பேசும்போது எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மேடையில் நெளிந்தனர்.
‘‘அரசு விழாவில் இவ்வளவு வெளிப்படையாகவா ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரு?” என்று கமென்ட் அடித்தனர் அங்கிருந்த எம்.எல்.ஏ-க்கள்.
No comments:
Post a comment