Monday, August 21, 2017

‘ஆடி’ முடியட்டும்... ஆட்சியைக் கலைக்க நேரம் வரும்! - நாஞ்சில் சம்பத் தடாலடி

‘ஆடி’ முடியட்டும்... ஆட்சியைக் கலைக்க நேரம் வரும்! - நாஞ்சில் சம்பத் தடாலடி

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி 420’’ என்கிறார் டி.டி.வி.தினகரன். ‘‘தினகரன்தான் 420’’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஃபோர்ஜரி பேர்வழி, அட்டைக்கத்தி சுற்றுபவர் என எதிர்க்கட்சிகளே சொல்லத் தயங்கும் வார்த்தைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக ஒருவர் மீது ஒருவர் அள்ளிக் கொட்டி அடித்துக்கொள்கிறார்கள் 

அ.தி.மு.க அணியினர். அ.தி.மு.க-வில் தற்போது நடந்துவரும் குழப்பநிலை குறித்து, அ.தி.மு.க அம்மா அணியின் ‘கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்’ நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்.

‘‘தினகரன்,  ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடக்குவோம்’ என்கிறாரே... முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?’’

‘‘என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும்.       டி.டி.வி.தினகரனின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒரு கட்டத்துக்கு எல்லோருமே வந்தாக வேண்டும். மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டம் அதைத்தான் உணர்த்தியுள்ளது. திட்டமிட்டு, ரூபாய் கொடுத்து, வண்டியில் அழைத்துவரப்பட்டக் கூட்டமல்ல இது. தானாகத் திரண்டுவந்த கூட்டம். ‘இவர்தான் தலைமை தாங்க வேண்டும்’ என்று கட்சியின் தொண்டர்கள் அனைவரும் முடிவெடுத்து விட்டனர்.

ஒரு கட்சியின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பவர்கள் தொண்டர்கள்தான். அந்த வகையில், கட்சித் தொண்டர்கள் டி.டி.வி.தினகரனைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமியை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையைத்தான் அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கட்டாயத்துக்குத்தான் அவர்களும் ஆளாவார்கள்.’’

‘‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு உங்கள் அணி எம்.எல்.ஏ-க்கள் கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா?’’

‘‘அதற்கான நேரம் இன்னும் வரவில்லை... ‘ஆடி’ முடியட்டும்!’’

‘‘ ‘முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மடியில் கனம் இருக்கிறது, பதவியில் இருக்கும்வரை சுருட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்’ என்று தனது சொந்தக் கட்சியினர் மீதே தினகரன் குற்றம் சுமத்துவதை மக்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?’’

‘‘யார் தவறு செய்தாலும், அந்தத் தவறை எங்கிருந்து செய்தாலும்... அது தவறுதான். அதனால், ‘தினகரன் நன்றாக ஆப்பு வைக்கிறார்’ என்றே மக்கள் புரிந்துகொள்வார்கள்.’’

‘‘ ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்ற முழக்கத்தோடு செயல்பட்டுவரும் பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க ஆதரவளிப்பது எந்த வகையில் சரியென்று நினைக்கிறீர்கள்?’’

‘‘ ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்று சொல்பவர்கள்... ஏன் கழகங்களின் கால்களில் விழுந்து ஆதரவு கேட்கிறார்கள்?’’

‘‘ஜனாதிபதி தேர்தலின்போது, பி.ஜே.பி தரப்பிலிருந்து தினகரனிடம் யாருமே ஆதரவு கோராத நிலையில், அவர் தானாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்தது ஏன்?’’

‘‘எடப்பாடி பழனிசாமி கழகத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அவரிடம் பி.ஜே.பி கேட்டுக் கொண்டதின் பேரில்தான் எங்கள் ஆதரவைத் தெரிவித்தோம்.’’

‘‘எடப்பாடி பழனிசாமி உங்களின் எதிர் அணியைச் சேர்ந்தவராயிற்றே?’’

‘‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... எல்லோரும் ஒரே அணிதான். மேலூர் பொதுக்கூட்ட அழைப்பிதழில்கூட அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தோமே? ஆனாலும்கூட அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அது ஏன் என்று அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.’’

‘‘அப்படியானால், ‘அ.தி.மு.க-வினர் மூன்று அணிகளாகப் பிரிந்து செயல்படுவதே ஒருவித நாடகம்தான். தேர்தலின்போது மூன்று அணிகளும் ஒன்றுசேர்ந்து பி.ஜே.பி-யைத்தான் ஆதரிக்கும்’ என்று வெளியாகும் விமர்சனங்கள் உண்மைதான் என்கிறீர்களா?’’

‘‘பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க ஆதரவா? அப்படியென்றால், அ.தி.மு.க  தற்கொலைதான் செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பி.ஜே.பி-யோடு கைகோத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில், அ.தி.மு.க கடும் தோல்வியைச் சந்தித்தது. இனிமேலும்  பி.ஜே.பி-யோடு அ.தி.மு.க கூட்டணி சேர்ந்தால், 40 தொகுதிகளிலும் தோற்கும்!’’

‘‘வைகோ இப்போது, ‘எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன’ எனப் பாராட்டியுள்ளாரே?’’

‘‘வைகோவுக்கு மீண்டும் நேரம் மோசமாகப் போகிறது.’’

‘‘கல்வித்துறை பிரச்னைகள் தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்தும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லையே?’’

‘‘அன்புமணி என்னை அழைத்திருந்தால் சென்றிருப்பேன். ஆனால், அவர் செங்கோட்டையனை அழைத்துவிட்டார். செங்கோட்டையன் விவாதத்துக்குப் போகாமல் இருந்தது தவறுதான்.’’

‘‘மாநில அரசைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து அமைச்சர்கள் பேசி வருகின்றனர். ஆனால், தினகரன் அணி தரப்பு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லையே ஏன்?’’

‘‘விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். அதேசமயம், ஆளுங்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் எந்தத் தரவுகளும் இல்லை.’’

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment