Wednesday, August 30, 2017

‘‘கடவுளின் தூதன் இல்லை... நான் கடவுள்!’’

‘‘ஆசிரமத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள்... பாபாஜி தன் அறைக்கு அழைத்தார். இதுவரை தூரத்தில் நின்று பார்த்த கடவுளை, மிக அருகில் நெருங்கிப் பார்க்கப்போகிறோம் என்ற பரவசத்தோடு போனேன். அறையில் தன் படுக்கையில் பாபாஜி இருந்தார். அவர் கையில் ரிமோட். டி.வி-யில் ப்ளூ ஃபிலிம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தபடி கிறக்கத்தில் இருந்த அவர் அருகே ஒரு துப்பாக்கி பளபளத்தது. எனக்கு பக்தி போய், பயமும் பதற்றமும் வந்தது. இவர் இவ்வளவு கேவலமான மனிதரா?
‘‘கடவுளின் தூதன் இல்லை... நான் கடவுள்!’’

என்னைப் பக்கத்தில் உட்காரச் சொன்ன அவர், ‘நீ இ்ங்கு சேர்ந்தபோதே, எல்லாவற்றையும் ஆசிரமத்துக்கு அர்ப்பணித்துவிட்டாய். எனவே, உன் உடல் என்னுடையது. நான் அதை அடையப் போகிறேன்’ என்றார். நான் எதிர்த்தபோது, ‘உன்னை இங்கேயே சுட்டுக்கொன்று புதைத்தாலும் கேட்க நாதியில்லை. கடவுளை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் குடும்பமே இங்கு இருக்கிறது. அவர்களைக் கொன்றுவிடுவேன். என்னை எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் காணாமல் போய்விட்டார்கள். மாநில முதல்வர்களும் அமைச்சர்களும் என் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள்’ என்றார். மிரட்டி என்மீது பலமுறை பாலியல் வன்முறை நிகழ்த்தியது போலவே, பல பெண்களையும் சிதைத்திருக்கிறார் அவர்...’’ - தேரா சச்சா சவுதா அமைப்பில் இருந்த ஒரு பெண், கடந்த 2002-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய இந்தக் கடிதம்தான், இப்போது ஹுசூர் மகராஜ் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ‘தேரா சச்சா சவுதா’ என்றால் ‘உண்மையின் உறைவிடமான ஆசிரமம்’ என அர்த்தம். இங்கிருந்து வெளியாகியுள்ள உண்மை, நம்மை உறைய வைத்திருக்கிறது. அரியானாவின் சிர்சா நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில் சுமார் 6 கோடி பக்தர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மத்திய அரசு வழங்கிய Z ப்ளஸ் கமாண்டோ பாதுகாப்புடன், 308 கார்களில் ஊர்வலமாக பஞ்சகுலா நீதிமன்றத்துக்கு வந்த ராம் ரஹீமைப் பார்த்து, ‘நீங்கள் குற்றவாளி’ எனச் சொன்னார், சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஜஸ்தீப் சிங். இதைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் 38 பேர் இறந்திருக்கிறார்கள்.

ராம் ரஹீமைக் கடவுளாகவே வழிபடுகிறார்கள். துறவி, கொடை வள்ளல், பாடகர், விளையாட்டு வீரர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், கவிஞர், ஒளிப்பதிவாளர் என சகலகலா வல்லவனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ராம் ரஹீமுக்கு இப்போது வயது 50. ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கடவுளின் தூதராகவும், கடவுளாகவும் மாறிய கதை சுவாரசியமானது. சீக்கியர்கள் மத்தியில் ‘தேரா’ வழிபாடு பிரபலம். ஜாட் மற்றும் காட்ரி சீக்கியர்களே பெரும்பாலான குருத்வாராக்களை ஆக்கிரமித்திருக்க, தலித் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சீக்கியர்களுக்கு இங்கு மரியாதை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் ‘தேரா’க்களில் தஞ்சமடைகிறார்கள். தேரா என்றால் ‘ஆசிரமம்’. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இப்படி நூற்றுக்கணக்கான தேராக்கள் உள்ளன. ஒவ்வொரு தேராவிலும் சாமியார்கள் மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். இவற்றில் இணைவது ஒருவித அடையாளத்தையும் மரியாதையையும் தருவதால், ‘தேரா வழிபாடு’ அங்கு பெருகியுள்ளது.

தேரா சச்சா சவுதா இப்படி ஒரு எளிய அமைப்பாகவே இருந்தது. ராம் ரஹீமின் அப்பா, இதன் பக்தர். அதனால் மகனையும் அழைத்துச் செல்வார். சிறு வயதிலேயே ராம் ரஹீமையும் இங்கு சீடராக்கினார். இளமையில் பிளேபாயாக இருந்த ராம் ரஹீமுக்கு முரட்டு சிநேகிதர்கள் நிறைய. அதில் சில காலிஸ்தான் தீவிரவாதிகளும் அடக்கம். தேரா சச்சாவின் தலைவராக இருந்த ஷா சத்னம் ஓய்வுபெறத் தீர்மானித்தபோது, ராம் ரஹீமுக்கு 23 வயது. அடுத்து அந்தப் பதவிக்கு வரக்கூடியவர்கள் என ஆசிரமத்தில் பட்டியலிடப்பட்ட மூன்று பேரில், ராம் ரஹீம் பெயர் இல்லை. அவரின் முரட்டு சிநேகிதர்கள் துப்பாக்கியோடு களத்தில் இறங்க, மூவரும் மிரண்டு ஒதுங்கினார்கள். இப்படித்தான் தலைமைப் பதவிக்கு வந்தார் ராம் ரஹீம்.

அதன்பின் இந்த அமைப்பு அசுர வேகத்தில் வளர்ந்தது. மருத்துவமனைகள், பள்ளிகள் என அடுத்தடுத்து அவர் நிறுவனங்களைத் தொடங்க, தேரா சச்சா பிரமாண்டமாக வளர்ந்தது. இந்த அமைப்பின் தலைமையகம் என்பது சுமார் 700 ஏக்கர் பரப்பில் இருக்கும் ஒரு குட்டி நகரம். உள்ளேயே சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், விளையாட்டு ஸ்டேடியம் என சகலமும் இருக்கின்றன. ஆயுதம் ஏந்திய காவலர்கள் இதைப் பாதுகாக்கிறார்கள். கிட்டத்தட்ட ராம் ரஹீமின் பிரைவேட் போலீஸ் இவர்கள்! அமைப்பு வளரும்போது, தன் இமேஜையும் வளர்த்துக்கொண்டார். ‘எந்த டாக்டராலும் குணப்படுத்த முடியாத நோயையும் தன் சக்தியால் குணப்படுத்துவார்’ என்று சொல்லி இவரைக் கடவுளாகக் காட்டினார்கள் அடிவருடிகள்.
‘‘கடவுளின் தூதன் இல்லை... நான் கடவுள்!’’

ஆசிரமத்தின் மையமான இடத்தில் ராம் ரஹீமின் குகை இருக்கிறது. இதைப் பாதுகாப்பது முழுக்க முழுக்க இளம் பெண்களே! இதற்கு மூன்று வழிகள் உண்டு. இதில் ஒரு வழி, ஆசிரமப் பெண்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் போய் முடியும். அந்த வழியாகவே பெண்கள் இவரின் அறைக்கு அழைத்து வரப்படுவார்கள். ‘நான் கடவுள். உன் பாவங்களை நீக்கிப் புனிதப்படுத்துவதற்காகவே உன்னோடு உறவு கொள்கிறேன்’ என அந்த அபலைப் பெண்களிடம் சொல்வார். அந்தப்பெண்களின் குடும்பமே சாமியாரின் வெறித்தனமான சீடர்களாக இருப்பதால், அவர்களின் கூக்குரல் எடுபடாது. ‘‘கடவுளைப்போய் குறை சொல்கிறாயா?’’ என பெற்றோரே திட்டினால், ஒரு பெண் என்ன செய்ய முடியும்?

பொறுக்க முடியாமல் ஒரு பெண், தன் பெயரைப் போடாமல் பிரதமருக்குக் கடிதம் எழுதி, அதன் நகல்களை எல்லோருக்கும் அனுப்பினார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அந்த அநாமதேயக் கடிதத்தை ஏற்று சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தேரா சச்சா அமைப்பில் ஏற்கெனவே இருந்த சுமார் 130 பெண்களைத் தேடிப் பிடித்து, ‘பலரும் பாதிக்கப்பட்டது உண்மை’ என்பதை உணர்ந்தது சி.பி.ஐ. ஆனால், பல பெண்களுக்குத் திருமணமாகியிருந்தது. ‘உண்மையைச் சொன்னால் வாழ்க்கை போகும்’ என பயந்தார்கள். சிலரோ, ‘அது கொலைகாரக் கும்பல். அவர்களை எதிர்த்தால் கொன்றுவிடுவார்கள்’ என்றனர். அப்படிச் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி, இரண்டு பெண்கள் உறுதியாகக் கொடுத்த வாக்குமூலமே, ராம் ரஹீமைக் கம்பி களுக்குப் பின்னால் நிறுத்தியிருக்கிறது.  

ஹர்ஜீத் கவுர் என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார் ராம் ரஹீம். இரண்டு பெண்கள், ஒரு பையன் என மூன்று வாரிசுகள். அவரின் மருமகள், பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகள். கடந்த 2007 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளித்த ராம் ரஹீம், 2014 அரியானா சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவளித்தார்.

ஆசிரமத்தில் எல்லா பெண்களுமே அவரை ‘அப்பா’ என்றுதான் அழைப்பார்கள். தன் சொந்த மகள்களுக்குப் பாசமுள்ள அப்பாவாக இருந்த அவர், பல பெண்களுக்கு சாத்தானாக இருந்திருக்கிறார்.

- அகஸ்டஸ்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment