Monday, August 21, 2017

அத்தனை கரங்களிலும் குழந்தைகளின் குருதி!

அத்தனை கரங்களிலும் குழந்தைகளின் குருதி!

ராஜீவ் மிஸ்ரா... தடித்த தோல் கொண்ட அதிகார வர்க்க மனிதர் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் குற்ற உணர்வு அவரை உறுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த ராஜீவ் மிஸ்‌ராவை மாநில அரசு சஸ்பெண்ட் செய்தது. ஆனால், அதற்குமுன்பே ‘ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்துக்கு’ தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. இதை மூடி மறைக்கப் பார்க்கும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், இவர்களைக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர் என்று அத்தனை பேரின் கரங்களிலும் இந்தக் குழந்தைகளைக் கொன்ற கொடுங்குருதி படிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

‘குழந்தைகள் இறந்ததற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணம் இல்லை’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது உ.பி-யை ஆளும் பி.ஜே.பி அரசு. கோரக்பூர் கலெக்டர் ராஜீவ் ரவுதேலா இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர் பராமரிப்புப் பதிவேட்டில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளுக்கான பதிவுகளில் பல அடித்தல் திருத்தல்கள் இருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். எதை மறைக்க இதைச் செய்தார்கள்?

ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு 68 லட்ச ரூபாய் பாக்கி வைத்ததால், அவர்கள் சப்ளை செய்ய மறுத்தனர். இதன் விளைவே மரணங்கள். ‘இவ்வளவு பாக்கி இருப்பது எங்கள் கவனத்துக்கு வரவில்லை’ எனச் சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் சொல்கிறார். ஆனால், ‘எங்களுக்குப் பாக்கியைப் பெற்றுத் தாருங்கள்’ என அந்த நிறுவனமும் நேரடியாக அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இதுபற்றி ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி முதல்வரும் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அமைச்சருக்கும் அதன் பிரதியை அனுப்பினார். ஆனால், நடவடிக்கை இல்லை.

‘‘உ.பி-யில் நாங்கள் ஆட்சிக்கு வந்து நான்கரை மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் என்ன செய்ய முடியும்?’’ என்று கேட்கிறார் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அவரது சொந்த மண், கோரக்பூர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இங்கிருக்கும் பரந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும். அதில் க்யூலெக்ஸ் கொசுக்கள் பெருகிப் பரவும். இந்த சீஸனில் Acute Encephalitis Syndrome என்ற மூளை வீக்க நோயும், Japanese Encephalitis என்ற மூளைக்காய்ச்சல் நோயும் குழந்தைகளுக்கு வரும். ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் இப்படி நோய் முற்றிக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிவது இங்கு தொடர்கதையாகவே இருக்கிறது. கடந்த ஐந்து தேர்தல்களில் தொடர்ச்சியாக இங்கு ஜெயித்து எம்.பி-யாக இருந்திருக்கிறார் யோகி. நாடாளுமன்றத்திலேயே இதுபற்றிப் பேசியுள்ளார். அவருக்கு இது தெரியாதா? தற்காப்பு ஏற்பாடுகளில் இறங்கியிருந்தால் தடுத்திருக்க முடியாதா?

உ.பி பட்ஜெட்டில் கடந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.2,344 கோடி. பி.ஜே.பி பதவியேற்ற பிறகு இந்த ஆண்டு அதை ரூ.1,148 கோடியாகக் குறைத்துவிட்டார்கள். கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கான ஒதுக்கீடு ரூ.15.9 கோடியிலிருந்து ரூ.7.8 கோடியாகக் குறைந்துவிட்டது.

அத்தனை கரங்களிலும் குழந்தைகளின் குருதி!

புனேவில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, கோரக்பூரில் ஒரு கிளை திறந்துள்ளது. குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடுவதே இவர்களின் இலக்கு. ஆனால், மாநில சுகாதாரத்துறை இதைக் கண்டுகொள்ளாததால், இன்னமும் விழிப்பு உணர்வு வரவில்லை. 10 குழந்தைகளில் நான்கு குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டாலே பெரிய விஷயம்.

இப்போது இந்த மரணங்களுக்குக் குற்றம் சொல்லும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் போன்றவைதான் இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தை ஆண்டன. கிழக்கு உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி, பீகாரின் பெரும்பகுதிக்கும் உயர் சிகிச்சை மருத்துவமனையாக கோரக்பூர் மருத்துவமனைதான் இருக்கிறது. சுமார் 6 கோடி மக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. பக்கத்து நேபாளத்தில் இருந்தும் வருகிறார்கள். ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகளைப் படுக்க வைத்து சிகிச்சை தரும் அளவுக்கு நெரிசல். இதையெல்லாம் சரி செய்யாதவர்கள், அடுத்தவர்களைக் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

கடந்த வாரம் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது, தேசியக் கவனம் பெற்றது. ஆனால், அதே மருத்துவமனையில் இந்த 14-ம் தேதி மாலை முதல் 16-ம் தேதி மாலை வரை இரண்டே நாள்களில் 34 குழந்தைகள் இறந்தனர். யாருக்குமே இது செய்தி இல்லை. வெறும் புள்ளிவிபரங்கள்தான். ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குழந்தைகள் மரணத்தைத் தடுக்க முடியவில்லை எனில், அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்பே சிதைந்து போயிருக்கிறது என்றுதானே அர்த்தம். அதைச் சரி செய்யாதவர்கள், ஒருவரை ஒருவர் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? 

‘குழந்தைகளே சாகவில்லை’ என்றுகூட இவர்கள் சொல்லக்கூடும். ஆனால், கண்ணெதிரே சடலங்கள் கிடக்கின்றனவே!

- அகஸ்டஸ்

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment