ஆக்ஸிஜன் கொடுக்க ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியத்தால் 60-க்கும் மேற்பட்ட பிஞ்சுகள் உத்தரப்பிரதேசத்தில் உயிரை விட்டிருக்கின்றன. நாட்டையே அதிரச் செய்துள்ள விவகாரம், ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. உ.பி-யின் லட்சணம் இப்படியென்றால், தமிழகத்தின் சுகாதாரத் துறை சுகவீனம் இல்லாமல் ஆக்ஸிஜன் செலுத்த வேண்டிய நிலையில் பரிதாபமாக ஐ.சி.யூ-வில் கிடக்கிறது.
‘‘கோரக்பூர் துயரத்துக்குக் கொஞ்சமும் குறையாத நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளின் லட்சணம் உள்ளது’’ என்று தமிழக அரசு மருத்துவர் ஒருவர் நம்மிடம் சொன்னார். “தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளுக்குச் சுகாதாரத் துறையில் இருந்து நேரடியாக ஒதுக்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் (ஹெல்த் இன்சூரன்ஸ்) ஒதுக்கும் நிதியை வைத்துத்தான் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. கடந்த ஒரு வருட காலமாகவே இதுதான் நிலைமை. கடந்த காலங்களில் ‘எத்தனை நோயாளிகள் வருகிறார்கள்... அவர்களுக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது’ போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மருந்துகள் வழங்குவது, ஊழியர்கள் நியமனம் போன்றவை நடைபெற்றன. இப்போது அப்படி இல்லை.
ஆனால், இந்தக் காப்பீட்டு முறையால் பலவகையிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. காப்பீட்டுத் தொகையை நோயாளி பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆயிரத்தெட்டு ஆவணங்கள் கொடுத்து, தொகை ஒதுக்கப்படும்வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார். அப்படியே கொடுத்தாலும் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ஒதுக்கப்படும் தொகையும் குறைக்கப்படும்; அல்லது நிராகரிக்கப்படும். குறைவான தொகையை வைத்து முழுமையான சிகிச்சையை எப்படி அரசு மருத்துவர்கள் வழங்க முடியும்? நோயாளிகளை எப்படியேனும் வெளியேற்ற வேண்டும் என்றே நினைப்பார்கள். இந்த மாதிரியான சூழல்தான் அரசு மருத்துவமனைகளில் நிலவுகிறது. மருத்துவர்களும் ஊழியர்களும் தரம்குறைந்த சிகிச்சையை அளித்து, அரசு ஒதுக்கியுள்ள பணத்தைக் கையாடல் செய்யவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அரசின் இந்த நடைமுறை.
காப்பீட்டு நிறுவனங்களுடன் ஏன் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் வந்தது? மேல் மட்டத்தில் உள்ளவர்கள் ஆதாயத்துக்காகச் செய்கிறார்கள். அரசாங்க மருத்துவமனைகளில் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டதால், இவ்வாறான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நேரடியான இறப்புகள் நமக்குத் தெரியவில்லை என்றாலும், மறைமுகமான இறப்புகள் என்பது உண்மை. உத்தரப்பிரதேசத்தில் நடந்த அந்தச் சம்பவத்தைப் போன்று இங்கும் நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உயிரிழப்பு நடந்த பின்புதான் விபத்துக்கான விசாரணை இருக்கும். அதைப் பற்றி நான்கு நாள்கள் நாமும் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்துவோம். ஊழல் செய்தவர்கள் வாய்தா வாங்கிக்கொண்டிருப்பார்கள்’’ என்றார்.
‘சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க’த்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசியபோது, “தமிழக சுகாதாரத் துறைக்கு நேரடியான நிதி ஒதுக்குவது குறைந்து விட்டது. வருடத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைச் சுகாதாரத் துறைக்கு அரசாங்கம் ஒதுக்குகிறது. ஆனால், அவை எல்லாம் தனியார் மருத்துவமனைக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்குமே செலவாகிக் கொண்டிருக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டே இயங்கவேண்டிய சூழலை அரசாங்கம் உருவாக்கிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்கிற சூழல் உருவாகும். உ.பி போல அல்லாமல் சைலன்ட்டாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக 10 நாட்களுக்கு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, குறித்த நேரத்துக்கு நோயாளிக்கு மருந்து கொடுக்க முடியவில்லை என்றால் எவ்வாறு அந்த நோயாளி குணமடைய முடியும்?
தமிழக அரசின் திட்டம் இது என்றால், மத்திய அரசின் திட்டம் இதைவிட மோசம். அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளை நிறுவுவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. அதற்கு அரசின் பணத்தைக் கொடுக்கவும் தயாராகி விட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 60-க்கும் மேற்பட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளைத் தனியார் மருத்துவமனைகளாக மாற்றும் முயற்சிதான் இது. பி.ஜே.பி ஆட்சி செய்கிற மாநிலங்களில் தனியார் மருத்துவமனையின் செயல்பாடுகளை உள்ளே கொண்டு வந்துவிட்டார்கள். அதன் தாக்கம்தான், தற்போது உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு நிகழக் காரணம். அரசின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட்டு நோயாளிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இப்படியே போனால் மருத்துவமனைகள் சவக்கிடங்குகளாக மாறும். உத்தரப்பிரதேச குழந்தைகள் இறப்பு, அனைத்து மாநிலங்களுக்குமே ஒரு பாடம். இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கொண்டுவந்துள்ள காப்பீட்டு முறையை எதிர்த்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் பலமுறை போராடியிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதியில்லாத சிகிச்சைக்கு மட்டுமே காப்பீடு கொடுத்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம்’’ என்றார் கவலையாக.
அலட்சியத்தாலும், ஊழலாலும் நிகழ்வது மரணம் அல்ல... கொடூரக் கொலை!
No comments:
Post a comment