Wednesday, August 30, 2017

“எனக்கு 19... உனக்கு 21”

“எனக்கு 19... உனக்கு 21”

எடப்பாடியின் எலிமினேஷன் எம்.எல்.ஏ-க்கள்!
‘சட்டசபையைக் கூட்டி பலத்தை நிரூபித்தாக வேண்டும்’ என்கிற கட்டத்தை நோக்கி நகர்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. 

‘‘50 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்’’ என  டி.டி.வி.தினகரன் தரப்பு சொல்லிக்கொண்டிருக்க, ‘‘113 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் இருக்கிறார்கள்’’ என்கின்றனர் எடப்பாடி தரப்பினர். சபாநாயகர் தவிர்த்து மொத்தமுள்ள அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 134-தான். பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. அது இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். ‘‘இந்தச் சூழலில், தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க கோரிக்கைகளை ஏற்று கவர்னரோ, நீதிமன்றமோ ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், எடப்பாடி நம்பியிருக்கும் ஒரே ஆதாரம்... சபாநாயகர் தனபால்தான்’’ என்கிறார்கள் தமிழகச் சட்டமன்ற அதிகாரிகள்.

இதைப் புரிந்துகொண்டுதான், ‘தனபாலை முதல்வராக ஆக்க வேண்டும்’ என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில், துணை முதல்வராக தனபாலை ஆக்க முன்வந்தார் எடப்பாடி. இதுபற்றி சபாநாயகருடன் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு தனபால் துணை முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதாம். 
இப்போது சபாநாயகரின் முன்பு நிற்பவை இரண்டு பிரச்னைகள். ஒன்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரின் பதவிகளைப் பறிக்க நடவடிக்கை எடுப்பது. அடுத்து, குட்கா விவகாரத்தில் சட்டமன்றத்தில் குட்கா போதை வஸ்துகளைக் காட்டி விவாதம் செய்த தி.மு.க-வின் 21 எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்வது. எடப்பாடியின் எலிமினேஷன் எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்டில் மொத்தமாக இந்த 40 பேர் வருகிறார்கள். இதைத்தான் சிம்பாலிக்காக ‘‘எனக்கு 19... உனக்கு 21’’ என்கிறார்கள். இந்த 40 பேரும் இல்லாத சட்டசபையின் மொத்த பலம் (சபாநாயகர் தவிர்த்து) 192 ஆக இருக்கும். எனவே, 97 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும். அந்த பலம் எடப்பாடிக்கு இருக்கிறது என்பதால் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். சட்ட நடைமுறைகளைத் தாண்டி இதைச் சாத்தியமாக்க முடியுமா?

பிரச்னை: 1


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், கடந்த 21-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்துகொண்டனர். தினகரனை ஓரம்கட்டி நடந்த இணைப்புக்கு அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். அதில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம். அதேநேரம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நாங்கள் விலகவில்லை’ என்று கூறியிருந்தனர். ஏழு வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்று, சாமர்த்தியமான வார்த்தைகளோடு இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த 19 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைப் பறிக்க முதல்வர் பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டிவருகிறது. ‘இந்த 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க வேண்டும்’ என்று ஆளுங்கட்சியின் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, ‘கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என இந்த 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.

இதுதொடர்பாக மூத்த அமைச்சர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, ‘‘இவர்களின் பதவியைப் பறித்தால், சட்டமன்றத்துக்கு இவர்கள் வர முடியாது. 19 பேரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா விவகாரத்தைக் காரணம் காட்டியுள்ளனர். அந்த விவகாரத்தில் சட்டமன்ற விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தில் அவர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. எடியூரப்பா விவகாரத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதை அலசி ஆராய்ந்து, அதுபோன்று எதுவும் நடக்காதவாறு இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். முழுக்க முழுக்க சட்டமன்ற விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். சபாநாயகர் தீர்ப்பே இறுதியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் நீதிமன்றத்தை நாடினாலும், அதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

பிரச்னை: 2

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவை தாராளமாகக் கிடைக்கின்றன என்பதை உணர்த்த தி.மு.க-வினர் சட்டசபைக்குள் ஜூலை 18-ம் தேதி குட்கா பாக்கெட்களோடு வந்தனர். இதுபற்றி உரிமைக்குழுவின் விசாரணைக்கு அப்போதே சபாநாயகர் தனபால் அனுப்பியிருந்தார். அதை இப்போது கையில் எடுத்துள்ளது எடப்பாடி அரசு. ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

உரிமைக்குழுவின் தலைவரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழு, குட்கா தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களை ஆய்வு செய்தது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்பிறகு அவர்கள் மீது ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யலாம் என சபாநாயகருக்கு உரிமைக்குழு பரிந்துரை செய்யலாம். 

உரிமைக்குழுவின் உறுப்பினர்கள் 17 பேர். இதில் அ.தி.மு.க-வினர்  10 பேர். இவர்களில் மூன்று பேர் தினகரன் அணியில் இருப்பதால், உரிமைக்குழுக் கூட்டத்துக்கு வரவில்லை. தி.மு.க தரப்பில் ஸ்டாலின் உள்பட ஆறு பேர் உறுப்பினர்கள். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். ஸ்டாலின்மீது குட்கா காட்டிய புகார் இருப்பதால் அவரை விதிப்படி கூட்டத்துக்கு அழைக்கவில்லை. ஆதாரங்களை ஆராய்ந்தபோது, உரிமைக்குழுவின் இன்னொரு தி.மு.க உறுப்பினரான ரவிச்சந்திரனும் உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனாலும், அதற்கு முன்பே அவர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுவிட்டார். இப்படி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலம் இந்தக் குழுவில் ஐந்தாகக் குறைந்துள்ளது. 

பொள்ளாச்சி ஜெயராமனைச் சந்தித்து, “இந்தப் பிரச்னையை 40 நாள்களுக்குப் பிறகு கிளப்புவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே” எனக் கேட்டோம். 

“என்றைக்கு சபாநாயகர் இந்த விவகாரத்தை அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பியதாக அறிவித்தாரோ, அன்றைக்கே எங்கள் குழுவினரின் செயல்பாடு ஆரம்பித்துவிட்டது. அதன் ஒரு கட்டம்தான், இந்தக் கூட்டம்.  சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ரகளை செய்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் முறைப்படி பரிசீலனை செய்தோம். அப்படி இருக்கையில் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்க்கட்சியினர், சட்டசபையில் சுட்டிக்காட்ட உரிமை உண்டு. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. அதை எங்கேயோ காய்ச்சுகிறார்கள் என்பதற்காக, சட்டசபையிலேயே கொண்டுவந்து காட்டலாமா? குட்கா போன்ற வஸ்துகளைத் தமிழகத்தில் எங்கேயாவது வாங்கியிருந்தால், அதன் ஆதாரத்தைத்தான் சட்டசபையில் காட்டியிருக்க வேண்டும். அந்தப் பொருளையே காட்டக் கூடாது. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.” என்றார் அவர்.

சட்டத்தின் மாயக்கட்டங்களுக்குள் புகுந்து எடப்பாடி தரப்பினர் ஆடும் ஆட்டம், இந்த ஆட்சியைக் காப்பாற்றுமா?
- ஆர்.பி
படங்கள்: வி.சதீஷ்குமார், கே.ஜெரோம்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

‘‘இது கட்சித் தாவல் இல்லை!’’

ளுங்கட்சியின் அணிகள் மோதலில் எடியூரப்பா வழக்கு பற்றிய பேச்சு அடிக்கடி அடிபடுகிறது. அந்த விவகாரம் இதுதான்... 2010 அக்டோபரில் கர்நாடக பி.ஜே.பி முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுங்கட்சியே கலகம் செய்தது. 11 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து, ‘நாங்கள் எடியூரப்பாமீது நம்பிக்கை இழந்துவிட்டோம். பி.ஜே.பி-யில் வேறு யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரிக்கிறோம்’ என்று கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார் ஆளுநர். இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று இந்த 11 பேரின் எம்.எல்.ஏ பதவியைக் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் பறித்தார் சபாநாயகர். நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு ஒருநாள் முன்னதாக இது அவசரமாக நடத்தப்பட்டது. அவர்கள் நீதிமன்றம் போனார்கள். ‘ஒரு முதல்வர்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதாலேயே அவர்கள் கட்சியை விட்டு விலகியதாகக் கருதப்பட மாட்டார்கள்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘இந்த அடிப்படையில் எங்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்பதே தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் வாதம்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment