Wednesday, August 30, 2017

திண்டாடும் அமைச்சர்கள்... கொண்டாடும் தொண்டர்கள்!

திண்டாடும் அமைச்சர்கள்... கொண்டாடும் தொண்டர்கள்!

வாட்ஸ்அப் குரூப்களில் ஆட்களை நீக்குவது போல கட்சிப் பதவிகளிலிருந்து தினம் தினம் பலரையும் நீக்கி வருகிறார் தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பொறுப்புகூட நீடிக்கவில்லை. பல அமைச்சர்களும் இந்த அதிரடியில் திண்டாடி வருகிறார்கள். ‘‘கட்சியிலேயே இல்லாத தினகரனால் எங்களை நீக்க முடியாது’’ என்கிறார்கள், நீக்கப்பட்டவர்கள். பல மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகளை தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்; சில இடங்களில் தினகரனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். மாவட்டங்களிலிருந்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்... 

குழப்பத்தில் நெல்லை!

நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவைக் கொறடாவுமான விஜிலா சத்யானந்த் எம்.பி தினகரன் பக்கம் இருக்கிறார். ஏற்கெனவே கட்சியின் அமைப்புச் செயலாளராக ஆர்.பி.ஆதித்தன் நியமிக்கப்பட்ட நிலையில், மாற்று முகாமுக்குச் சென்ற சுதா.பரமசிவனின் அமைப்புச் செயலாளர் பொறுப்பைப் பறித்துவிட்டு, கல்லூர் வேலாயுதத்தை அந்தப் பொறுப்பில் நியமித்தார், தினகரன். இதனால் ஆத்திரம் அடைந்த சுதா.பரமசிவன் ஆதரவாளர்கள் தினகரன் உருவப் படத்தை எரித்தனர். நெல்லை புறநகர் மாவட்டம் எடப்பாடி அணிக்கு பலமான ஆதரவு நிலையில் இருக்கிறது. தொண்டர்கள் மட்டும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.


சேலத்தை இழந்த எடப்பாடி!

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பிடுங்கி, வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ-வான எஸ்.கே.செல்வத்திடம் கொடுத்துள்ளார் தினகரன். சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெங்கடாசலம் எம்.எல்.ஏ-வை நீக்கிவிட்டு முன்னாள் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.சி.வெங்கடாசலத்தை நியமித்துள்ளார் தினகரன். இதில் உற்சாகம் அடைந்த எஸ்.கே.செல்வமும், எஸ்.சி.வெங்கடாசலமும், ‘‘எடப்பாடி பழனிசாமி மிகப் பெரிய துரோகி. இவரைக் கட்சியில் சேர்த்து விட்ட செங்கோட்டையனையும், முத்துசாமியையும் துரோகத்தால் வீழ்த்தியே இந்த நிலைக்கு வந்துள்ளார். உண்மையான அ.தி.மு.க தினகரன் வசமே இருக்கிறது’’ என்றார்கள்
நீக்கப்பட்ட வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ‘‘தினகரனிடமிருந்து கட்சியை மீட்டுவிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’’ என்று ஒரு பிடி பிடித்தார். எடப்பாடி பழனிசாமி, வெங்கடாசலம் ஆதரவாளர்கள் சொற்ப எண்ணிக்கையில் கூடி தினகரன் உருவ பொம்மையை எரித்தார்கள். 

ராமநாதபுரம் ரவுசு!

தினகரன் விசுவாசியாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி, இப்போது எடப்பாடி பக்கம் தாவிவிட்டார். ஆனால், அவரது பொறுப்பில் கைவைக்காத தினகரன், மாநில மகளிர் அணித் துணைச் செயலாளராக இருந்த முனியசாமியின் மனைவி கீர்த்திகாவின் பதவியைப் பறித்துவிட்டார். அத்துடன், ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு பேருக்குப் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தினகரனின் ஆதரவாளர்களான பரமக்குடி எம்.எல்.ஏ முத்தையா மாநில மருத்துவ அணிச் செயலாளர் ஆகியுள்ளார். முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், கிடங்கு வாரிய முன்னாள் சேர்மன் ஜி.முனியசாமி, நடிகர் செந்தில் ஆகிய மூவரும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் பின்னால் செல்ல கட்சித் தொண்டர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.     

அரியலூரில் அதிரடி தொண்டர்கள்!

அரியலூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மாவட்டச் செயலாளர், அரசின் தலைமை கொறடா எனப் பல பதவிகளை வகிப்பவர். இவர் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. இவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, ஜெயங்கொண்டம் முத்தையனை அந்தப் பொறுப்பில் நியமித்திருக்கிறார் தினகரன். இதை எதிர்த்து ராஜேந்திரனின் அக்கா மகன் பிரேம்குமார் தலைமையில் சிலர் மட்டும் திரண்டு தினகரன் கொடும்பாவியை எரித்தார்கள். ஆனால், ராஜேந்திரனின் நீக்கத்தைக் கட்சித் தொண்டர்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.

சிவகங்கைப் பட்டாசு!

சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதனை நீக்கிவிட்டு, உமாதேவனை நியமித்தார் தினகரன். இதுபற்றிப் பேசிய செந்தில்நாதன், ‘‘கடந்த சில நாள்களாக என்னை தினகரனைப் பார்க்க வரச்சொன்னார்கள். நான் போகவில்லை. இதனால் பதவி பறிக்கப்படும் என்று மிரட்டினார்கள். அதுபோலவே என்னை மாற்றியிருக்கிறார்கள்’’ என்றார். உமாதேவனை மாவட்டச் செயலாளராக அறிவித்ததும் தேவகோட்டை, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
திண்டாடும் அமைச்சர்கள்... கொண்டாடும் தொண்டர்கள்!

காஞ்சிபுரம் கட்டுப்பாடு!

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை நீக்கிவிட்டு கரிகாலன் என்பவரை நியமித்திருக்கிறார் தினகரன். பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்ததால், சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு மாவட்டம் முழுக்க அத்துப்படி. கரிகாலன், தாம்பரம் நகரச் செயலாளராக இருந்தவர். இவருக்குப் பெரிய அளவில் கட்சியினரிடையே ஒத்துழைப்பு இல்லை. கட்சி அலுவலகமும், நிர்வாகிகளும் ராஜேந்திரன் பக்கம்தான்.  காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் நீக்கப்பட்டு, மொளச்சூர் பெருமாள் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பரபரப்பு அரசியலுக்கும், விளம்பரத்துக்கும் பஞ்சமில்லாதவர் கணேசன். இவர் எம்.எல்.ஏ-வாக இல்லாவிட்டாலும், அரசு அலுவலகங்கள் இன்னும் இவரது கட்டுப்பாட்டிலேயேதான் இருக்கின்றன.

பெரம்பலூரில் பதவிக்கு வந்த நிழல்!

தினகரனால் மறக்கமுடியாத பெயர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன். எம்.எல்.ஏ-க்களுக்கு முன்னோடியாக சட்டப்பேரவையில் ‘சின்னம்மா’ என்ற பெயரை அவைக் குறிப்பில் பதிவு ஏற்றியவர் இவர்தான். ‘‘சசிகலா குடும்பத்தில் யாராவது முதல்வர் பதவிக்கு வந்தால், ஜெயலலிதா சமாதிக்குப் போய் பதவியை ராஜினாமா செய்வேன்’’ என இப்போது சொன்னவரும் இவர்தான். அதனால் இவரது பொறுப்பைப் பிடுங்கினார் தினகரன். இவருக்குப் பதிலாக ஜெ.பேரவையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மாவட்டச் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ‘கார்த்திகேயன் ஆர்.டி.ராமச்சந்திரனின் நிழல் போன்றவர்’ என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது.

குஷியில் கோவை!

கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த அமைச்சர் வேலுமணியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.பி.யான கே.சுகுமாரை நியமித்துள்ளார் தினகரன். இதனால் அதிருப்தி அடைந்த வேலுமணியின் ஆதரவாளர்கள், தினகரனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். கோவையைப் பொறுத்தவரை வேலுமணியை நீக்கியதைவிட சுகுமாரை நியமனம் செய்ததுதான் சர்ச்சையாகியிருக்கிறது. காரணம், சுகுமார் எம்.பி-யாக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ‘தினகரனை இதைச் சொல்லியே காய்ச்சி எடுக்கலாம்’ என்ற குஷியில் இருக்கிறார்கள் வேலுமணி ஆதரவாளர்கள்.

நடுநிலை காக்கும் தூத்துக்குடி!

சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்து கட்சியில் வளர்ந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்த இவருக்கு, பொறுப்புகள் கிடைக்காததில் வருத்தம். அதனால்தான் ஸ்ரீவைகுண்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி உருவ பொம்மையை எரித்ததைக்கூட மாவட்டச் செயலாளரான இவர் கண்டுகொள்ளவில்லையாம். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘நான் எதையும் தனி அணியாகக் கருதவில்லை. எல்லோரும் சீக்கிரம் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ என்றார். ஆனால், இங்கு தினகரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

விழுப்புரத்தை மிரட்டிய செலவுகள்! 

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரான குமரகுரு எம்.எல்.ஏ-வை நீக்கிவிட்டு, கே.ஜி.பி.ஞானமூர்த்திக்கு அந்தப் பதவி தரப்பட்டுள்ளது. 2001-ல் திருநாவலூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் இவர். அதன் பிறகு குமரகுருவால் ஓரம் கட்டப்பட்டார் ஞானமூர்த்தி. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களில் அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவின் பேரில் சசிகலா, தினகரன் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டன. ஆனால், அவர்கள் இருவரின் படங்களோடு பேனர் வைத்தவர் ஞானமூர்த்திதான். மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும் இவர் செய்த ‘செலவுகள்’, தொண்டர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க இவர் செய்த முயற்சிகள், பெரும் தகராறில் முடிந்திருக்கிறது.

திண்டாடும் அமைச்சர்கள்... கொண்டாடும் தொண்டர்கள்!
நோ ரியாக்‌ஷன் மதுரை!
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவை நீக்கிவிட்டு முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனை நியமித்திருக்கிறார் தினகரன். இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. மகேந்திரன், உசிலம்பட்டியில் மட்டுமே தெரிந்தவர் என்பதால், அங்கு மட்டும் வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்தோ, ஆதரித்தோ எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. எடப்பாடியை மாற்ற வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்கள் அனுப்பானடிப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருநகர், பெரியார் பேருந்து நிலையம், மேலூர் ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
திருவாரூரில் தாக்கப்பட்ட திவாகரன் பஸ் அமைச்சர் ஆர்.காமராஜ், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். ‘‘திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 20 வருடம் ஆகிவிட்டது. தொடர்ந்து பதினேழரை வருடமாக நான்தான் மாவட்டச் செயலாளர். சிறு தவறு செய்தால்கூட பதவிகளைப் பறிக்கும் அம்மா, பதினேழரை வருடமா இந்தப் பதவியில் வைத்திருந்தார். என்னை நீக்கிய தினகரன் அறிவிப்பு செல்லாது’’ என்றார் அவர். காமராஜ் பதவி பறிக்கப்பட்டதும் திவாகரனின் பஸ் ஒன்றைத் தாக்கிப் பதற வைத்துவிட்டார்கள்.
தஞ்சையை இழந்த வைத்திலிங்கம்
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கத்தை நீக்கிவிட்டு, சேகர் என்பவரை நியமித்துள்ளார் தினகரன். இதைத் தொடர்ந்து தினகரனின் கொடும்பாவி தஞ்சை ரயில் நிலையம் முன்பு எரிக்கப்பட்டது. அப்போது அங்கு வைத்திலிங்கம் ஆதரவாளர்களுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வைத்திலிங்கம் கட்சி நிர்வாகிகளை அனுசரித்துப் போகாதவர் என்பதால், சேகர் பக்கமே பலரும் சாய்ந்துள்ளனர்.
தர்மபுரி தடாலடி
தர்மபுரி மாவட்டச் செயலாளரான அமைச்சர் கே.பி.அன்பழகனின் பதவியைப் பறித்துவிட்டு, டி.கே.ராஜேந்திரனை நியமித்திருக்கிறார் தினகரன். தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பஸ்ஸில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர்தான் டி.கே.ராஜேந்திரன்.
- ஜூ.வி டீம்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment