Friday, August 18, 2017

குழந்தையை பறித்த கொடூரம்... கழுத்தறுப்பு மருத்துவமனைகளான ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம்!

குழந்தையை பறித்த கொடூரம்... கழுத்தறுப்பு மருத்துவமனைகளான ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம்!

ப்போதெல்லாம் மழலை வரம் வேண்டி யாரும் அரச மரத்தையோ, ஆலயங்களையோ சுற்றுவதில்லை. உடனடியாக கருத்தரிப்பு மருத்துவமனைக்குப் போய்விடுகிறார்கள். மருத்துவ அறிவியலில் நாம் அடைந்திருக்கும் மகத்தான முன்னேற்றம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஆனால், பல லட்சங்களைச் செலவழித்தபிறகும் கசப்பான அனுபவங்களே சிலருக்குக் கிடைக்கின்றன. துரதிர்ஷ்டசாலிகளான ஒரு சிலர், மரணத்தின் வாசல் வரை சென்று மாறாத வடுக்களை மனதில் சுமக்கிறார்கள். ரம்யா-சூரியநாராயணன் தம்பதிக்கு அப்படி ஒரு கொடூர அனுபவம்தான் கிடைத்தது. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் கழித்து, கருவில் குழந்தை ஜனித்த அற்புதத் தகவலைக் கேட்டு, இந்த உலகமே வசப்பட்டது போன்ற மகிழ்ச்சியை அடைந்து, அதன்பின் எல்லாவற்றையும் தொலைத்த விரக்தியில் இருக்கிறார்கள் இவர்கள்.

என்ன நடந்தது? சென்னை பம்மலில் வசிக்கும் இவர்களைச் சந்தித்தோம். சூரியநாராயணன் கலங்கிய கண்களோடு ஆரம்பித்தார். ‘‘அடையார் கஸ்தூரி பாய் நகரில் இருக்கிற டாக்டர் சந்திரலேகாவோட ஐஸ்வர்யா கருத்தரிப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்தோம். அதில், கரு உண்டானது. ரெகுலர் செக்கப்பில் என் மனைவி ரம்யா இருந்தாங்க. ஏழாவது மாச கர்ப்பத்துல, ஜூன் 3-ம் தேதி ரம்யா வயிற்றை ஸ்கேன் செஞ்சு பார்த்த டாக்டர் சந்திரலேகா, ‘கர்ப்பப்பை வாய் ஓப்பன் ஆகியிருக்கு. உடனடியா அட்மிட் பண்ணுங்க. இல்லைனா, ரம்யா உயிருக்கே ஆபத்து’னு சொன்னாங்க. பதறிப் போய் அட்மிட் செஞ்சோம். ஒரு மாசத்துக்கு மேல அங்கேயே இருந்தோம்.

ஜூலை 13-ம் தேதி மதியம் இரண்டரை மணி இருக்கும். ரம்யாவுக்கு வலி அதிகமானது. செக் பண்ணிப் பார்த்த டாக்டர் அனிதா நாகராஜ், ‘குழந்தையோட தலை கீழ இறங்கிட்டு வெளிய வர ட்ரை பண்ற ஸ்டேஜ். பிரச்னையில்லை’னு சொல்லி, ஊசி போட்டுட்டுப் போனாங்க. ஆனாலும் வலி குறையல. சாயந்திரத்துக்கு மேல ரத்தப்போக்கு அதிகமாகிடுச்சு. நைட் பத்து மணிக்கு மேல வந்த டாக்டர் அனிதா நாகராஜ், ‘இது பிரசவ வலியா இருக்கும்’னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு ரம்யாவைப் பிரசவ அறைக்குக் கூட்டிப் போனாங்க. அங்க நடந்த கொடுமை, எதிரிக்குக் கூட வரக்கூடாது...” - மேற்கொண்டு பேசமுடியாமல் அவர் அழ, ‘‘அதை நான் சொல்றேங்க’’ என்று தொடங்கினார் ரம்யா.

“பிரசவ அறையில் மயக்கவியல் நிபுணர் விஜயபதி, பெண்கள் மருத்துவர் கீதா, பெயர் தெரியாத ஒரு குழந்தை நல மருத்துவர் என மூன்று பேர் இருந்தாங்க. எனக்கு முதுகுல மயக்க ஊசிப் போட்டாங்க. இருந்தாலும் நினைவு இருந்ததால அங்க நடக்கிறதைக் கேட்கவும் உணரவும் முடிந்தது. ‘இவங்க பிளட் குரூப் என்ன’னு அவங்க கேட்டாங்க. ‘பிளட் குரூப் கூட தெரியாமலா சர்ஜரி வரை வந்துருப்பாங்க’ன்னு திகிலடைஞ்ச எனக்கு இன்னொரு அதிர்ச்சி. டாக்டர் அனிதா நாகராஜ், ‘இவங்க யூரினரி பிளாடரை தெரியாம கட் பண்ணிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியல. உடனே யூராலஜிஸ்ட் சிவசங்கரைக் கூப்பிடுங்க’னு சொன்னாங்க. அதிர்ச்சியில எனக்கு மயக்கமே வரலை. இந்த வலியும் துயரமும் அழுத்தினாலும், குழந்தை மேல ஏக்கமா இருந்துச்சு. அதுபற்றி மெல்லக் கேட்டேன். ‘பெண் குழந்தை பிறந்திருக்கு’ன்னு சொன்னாங்க. சந்தோஷப்பட்டேன். குழந்தையைப் பார்க்கணும்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்ன விஷயம்தான்...” என்றவர், பேச முடியாமல் அழ ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசிய சூரியநாராயணன், “அதிகாலை நேரத்துல, ‘ரத்த இயக்கம் தடைபட்டுடுச்சி, எக்மோர் லயன்ஸ் க்ளப் போயி ரத்தம் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பினாங்க. வாங்கிட்டு வந்தேன். ‘யூரினரி பிளாடர் கட்டாச்சு. அதைச் சரி பண்ண டியூப் வேணும்’னு சொன்னாங்க. பக்கத்துல மலர் மருத்துவமனைக்குப் போய் வாங்கிட்டு வந்தேன். காலையில ஆறரை மணிக்கு யூரினரி பிளாடரை தைச்சாங்க. முதல்ல மனைவியைப் பார்த்த நான், அடுத்து குழந்தையைக் கேட்டேன். ‘குழந்தை பொறந்ததுமே அழவேயில்லை. அதான் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தூக்கிப் போயிருக்கோம்’னு சொன்னாங்க. ‘பக்கத்துல மலர் மருத்துவமனை இருக்க, 14 கி.மீ தள்ளி ஏன் போகணும்’னு நான் கேட்டதுக்கு, சரியான பதிலில்லை. இறுதியாக, காலை 11.30 மணியிருக்கும். ‘உங்க குழந்தை இறந்துடுச்சு’னு சொன்னாங்க. எங்க இதயமே நொறுங்கிடுச்சு.

உடனே, டாக்டர் சந்திரலேகாகிட்ட நியாயம் கேட்டோம். ‘அதுக்கு என்ன பண்ணலாம்? சிகிச்சை தந்த டாக்டர்களைக் கத்தி எடுத்துக் குத்தச் சொல்றீங்களா? இல்ல, அவங்கள மாடியிலருந்து கீழ தள்ளிக் கொன்னுடலாமா? ஆனது ஆகிடுச்சு. இதப் பெருசு பண்ணாதீங்க’னு ரொம்பக் கூலா சொன்னாங்க. டிஸ்சார்ஜ் பண்ணவும் விடல. தொடர்ந்து மிரட்டிட்டே இருந்தாங்க. இதுக்கு மேல இருந்தா என் மனைவி உயிருக்கே ஆபத்து வந்திரும்னு ஜூலை 26-ம் தேதி போலீஸ்ல புகார் கொடுத்துட்டு, என் மனைவியை வேளச்சேரியில் வேற மருத்துவமனையில சேர்த்தேன். எங்க குழந்தை இறந்ததுக்கு ஐஸ்வர்யா மருத்துவமனைதான் காரணம். பணம் மட்டுமே அவங்களுக்குக் குறி. மனித உணர்வுகளை மதிக்கிறதேயில்லை. எங்க நிலைமை வேற யாருக்கும் வர கூடாதுங்க” என்றார்.

அடையார் போலீஸில் விசாரித்தோம். ‘‘மருத்துவக் குற்றங்களைப் பொறுத்தவரை, புகாரை விசாரித்து, ஒரு ரிப்போர்ட்டாக இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் சமர்ப்பிப்போம். அவர்கள் நடவடிக்கையைப் பொறுத்தே நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். சூரியநாராயணனின் புகாரை விசாரித்து வருகிறோம்’’ என்றனர். 

குழந்தையை பறித்த கொடூரம்... கழுத்தறுப்பு மருத்துவமனைகளான ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம்!

ஐஸ்வர்யா மருத்துவமனையின் விளக்கமறிய டாக்டர் சந்திரலேகாவைத் தொடர்பு கொண்டோம். “மேடம், பழனி மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றார் போனை எடுத்தவர். வெள்ளிக்கிழமைதோறும் ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு சந்திரலேகா வருவார் என்பதால், அன்றைய தினம் தொடர்புகொண்டோம். சந்திரலேகா பேசினார். “இந்தச் செய்தியைப் போட்டு என்ன பண்ணப் போறீங்க? ஏதாவது பணம் வாங்கித் தருவீங்களா?” என்றார். “புகாரில் உண்மையிருப்பது அறிந்தால், நாங்கள் வெளியிடும் செய்தியே அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்” என்றோம். அதன்பிறகு தொடர்ந்த சந்திரலேகா, “நாங்க சரியாதான் ட்ரீட்மென்ட் கொடுத்தோம். வேண்டுமென்றால் நீங்கள் வேறு டாக்டர்களிடம் கேஸ் ஃபைலைக் கொடுத்து செக் பண்ணிப் பாருங்க’’ என்றார். “அதைத் தெரிந்துகொள்ளத்தான் தொடர்புகொண்டோம். என்ன வகையான சிகிச்சை தந்தீர்கள்?’’ என்றோம். “அடுத்த வாரம் நேரில் வாங்க” என்றார். “இப்போ, உங்க மருத்துவமனை பக்கத்திலேயே இருக்கிறேன்’’ என்றபோது, “நான் ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கேன். சரி, என் வேலைகளைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். நீங்கள் வாருங்கள்” என்று துண்டித்தார். ஆனாலும், அவரோடு பேச முடியவில்லை. தொடர்ந்து போனில் அழைத்தபோது, “இங்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை உங்களோடு பேசச் சொல்கிறேன்” என்றார். இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.

நம்மை மீண்டும் தொடர்புகொண்ட சூரியநாராயணன், “என் மனைவிக்கு உடல்ரீதியாக பிரச்னை இருப்பதாக டிஸ்சார்ஜ் சம்மரி கொடுத்திருக்காங்க. எங்க குழந்தையையும் சாகடித்து, என் மனைவியும் படுத்த படுக்கையாக்கிய அவங்க, ‘எங்க போனாலும் விடமாட்டோம். வழக்கை வாபஸ் வாங்கலைன்னா, உங்க குடும்பத்தையே அசிங்கப் படுத்துவோம்’னு போன்ல மிரட்டுறாங்க. நியாயம் கேட்கறது தப்புங்களா?” என்றார் வலியோடு.

மருத்துவர்களைக் கடவுள்களாகக் கருதும் சமூகம் இது. கடவுள்கள் மிரட்டுவதில்லை; அநியாயமாகச் சாகடிப்பதும் இல்லை.  

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment