Wednesday, August 30, 2017

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 6

முகில்
1,171 மொரோக்கோ இரவுகள்! 

வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரை திடீரெனத் தடுமாற, பிடி நழுவிக் கீழே விழுந்தார் அல் ரஷீத். மொரோக்கோ வின் சுல்தான். பதினேழாம் நூற்றாண்டில் மொரோக்கோ, ஒரு ராஜ்ஜியமாக விரிவடையத் தொடங்கியது இவரது காலத்தில்தான். அந்தக் குதிரையை உயிருடன் விட்டார்களா என்று செய்தி இல்லை. அல் ரஷீத் இறந்து போனார். அடுத்து அரியணை ஏறியவர் அல் ரஷீத்தின் ஒன்றுவிட்ட சகோதரர், மௌலே இஸ்மாயில் இபின் ஷாரிஃப். கி.பி 1672-ம் ஆண்டு... தனது 26-வது வயதில் Alaouite பரம்பரையிலிருந்து சுல்தானாகப் பதவியேற்ற இஸ்மாயிலை, கி.பி 1727-ல் மரணம் வந்து அழைத்துச் செல்லும் வரை யாராலும் அசைக்க முடியவில்லை.

இங்கே சில கொசுறுக் குறிப்புகள்... Alaouite பரம்பரையைத் தோற்று வித்தது இஸ்மாயிலின் தந்தை, ஷாரிஃப் இபின் அலி. இதே பரம்பரை யினரே இன்றைக்கும் மொரோக்கோவை ஆள்கிறார்கள். தற்போதைய மன்னர் ஆறாம் முகம்மது.
பெருந்தலை ஒன்று மண்டையைப் போட்ட பின், அடுத்த தலைவர் தலையெடுக்க பல தலைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதுதானே அரசியல் தலைவிதி. அதைத்தான் இஸ்மாயிலும் செய்தார். பிளவுபட்டுக்கிடந்த பழங்குடி தலைவர்களையும், சிற்றரசர்களையும் படைகொண்டு அதட்டி ஒன்றிணைத்தார். அப்படி இஸ்மாயிலுக்கு அடிபணிபவர்கள், தங்கள் மகளை அல்லது மகள்களை சுல்தானின் அந்தப்புரத்துக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.
மாராக்கெஷ் என்ற நகரத்தின் மக்கள் மட்டும் இஸ்மாயிலை சுல்தானாக ஏற்கவில்லை. அவர்கள் அகமது என்ற இளவரசரை ஆதரித்தனர். இஸ்மாயில் மாராக்கெஷ் மீது படையெடுப்பது... அகமது தப்பிப்பது... மீண்டும் அகமது வந்து மாராக்கெஷ்ஷைக் கைப்பற்றுவது... இப்படியாகக் கண்ணாமூச்சி நடந்தது. கி.பி 1687-ல் அகமது கொல்லப்பட்டார்.

‘நான் முகம்மதுவின் வழித்தோன்றல். என் முன் நின்று என் முகத்தைப் பார்த்துப் பேசும் அருகதையோ, அதிகாரமோ இங்கே யாருக்கும் கிடையாது’ என்று பிரகடனப்படுத்தியிருந்தார் சுல்தான் இஸ்மாயில். மீறி, சுல்தானை நிமிர்ந்து பார்த்துப் பேசியவர்களுக்கெல்லாம் குழி வெட்டப்பட்டது. தன் ஆட்சியின் ஆரம்ப நாள்களிலேயே 400 எதிரிகளின் தலையை அறுத்து ஃபெஸ் நகரக் கோட்டைச் சுவரில் தொங்கவிட்டார். பயத்தை ஆழமாக விதைத்து, அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் சர்வாதிகார உத்தி. 

அன்றைக்கு சுல்தானின் உடை வெள்ளையாகவோ, பச்சையாகவோ இருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும் என்று நம்பலாம். மஞ்சள் உடை என்றால் அவ்வளவுதான்... தனக்காகக் குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தும் அடிமையைக்கூடக் காரணமின்றி வெட்டுவார். இப்படி தம் 56 வருட ஆட்சிக் காலத்தில், இஸ்மாயில் கொன்று குவித்தவர்களது உத்தேச எண்ணிக்கை 30 ஆயிரம்  இருக்கலாம். 

இன்னொரு பழக்கமும் அவருக்கு இருந்தது. அவர் நினைக்கும்போதெல்லாம் குர்-ஆன் வாசிப்பார்... குதிரையில் செல்லும்போதுகூட! அதற்கெனவே ஓர் அடிமை, அவர் குதிரையில் அதிவேகமாகச் செல்லும்போதும் வாசிப்பதற்கேற்ப குர்-ஆனைப் பிடித்துக்கொண்டு அதே வேகத்தில் வர வேண்டும் என்கிறது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அது எப்படிச் சாத்தியம் என்பது உங்கள் கற்பனைக்கு. 

சரி... சுல்தானின் அந்தப்புரத்துக்குள் நுழைவதற்கு முன்பு, அவரது வீர தீர சூர பராக்கிரமங்கள் சிலவற்றையும் பார்த்துவிடலாம். 

சுல்தான் ஆவதற்கு முன்பு, மொரோக்கோவின் வடக்குப் பகுதியிலுள்ள மெக்னெஸ் நகரத்தின் வைஸ்ராயாக இருந்தார் இஸ்மாயில். அந்நகரத்தின் மீதுள்ள பாசத்தினால், சுல்தான் ஆனபிறகு தனது தலைநகரத்தை ஃபெஸ்ஸிலிருந்து மெக்னெஸுக்கு மாற்றினார். புதிய அலங்கார வளைவுகள், பிரமாண்ட மாளிகைகள், மசூதிகள், தோட்டங்கள் என்று மெக்னெஸ் புதுப்பொலிவு பெற்றது. போர்ச்சுக்கீசிய அடிமை ஒருவன், அலங்கார வளைவு ஒன்றை வடிவமைத்திருந்தான். ‘‘இதைவிட அழகாக உன்னால் கட்ட இயலுமா?’’ என்று இஸ்மாயில் கேட்க, ‘‘முடியும்’’ என்றான் விவரமின்றி. ‘‘பிறகு ஏன் கட்டவில்லை?’’ என்று சுல்தானின் நாக்கு கேட்கவில்லை. வாள் கேட்டது.

மொரோக்கோவில் ஐரோப்பிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன. அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி ஐரோப்பியர்களை ஓட விட்டார் இஸ்மாயில். கி.பி 1681-ல் ஸ்பெயினின் ஆக்கிரமிப்பிலிருந்த மொரோக்கோவின் முக்கியத் துறைமுக நகரமான அல்-மமூராவை, இஸ்மாயிலின் படைகள் கைப்பற்றின. ஸ்பானியர்களின் சொத்துகள், ஆயுதங்கள் சூறையாடப்பட்டன. பிடிபட்ட ஸ்பானியர்கள் (வீரர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள்) அனைவருமே அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இதேபோல ஸ்பெயின் ஆக்கிரமித்திருந்த லாராசே துறைமுகத்தையும், பிரிட்டன் பிடுங்கி வைத்திருந்த டேன்ஜியர் துறைமுகத்தையும் மீட்டெடுத்தது இஸ்மாயிலின் பிற சாதனைகள்.

1679, 1682, 1695 ஆண்டுகளில் சுல்தான், துருக்கியர்களுடன் மோதினார். ஒவ்வொரு முறையும் துருக்கியப் படைகளுக்குப் பின்னடைவே. ‘இஸ்மாயில் இருக்கும் வரை இங்கே எந்த ஆணியும் பிடுங்க முடியாது’ என்று துருக்கியர்கள் தோல்வி முகத்துடன் திரும்பினர். இந்த யுத்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம், இஸ்மாயில் உருவாக்கியிருந்த சிறப்புக் கறுப்பர்கள் படை (சுமார் ஒன்றை லட்சம் வீரர்கள் கொண்டது) மற்றும் Jaysh al-Rifi என்ற பெர்பெர் இன முரட்டுப்படை. இந்தப் படைகளால், அன்று மொரோக்கோ வலிமையான ஆப்பிரிக்க ராஜ்ஜியமாக ஆட்டம்காட்டியது.
எதிரியின் எதிரி நண்பன் அல்லவா? எதிரி ஸ்பெயினின் எதிரியான பிரான்ஸுடன் சுல்தான் நட்பு வளர்த்தார். பிரான்ஸ் அரசர் பதினான்காம் லூயியின் ஆணைப்படி, அந்நாட்டு தளபதிகள் மொரோக்கோவுக்கு வந்து ராணுவப் பயிற்சி கொடுத்தனர். அங்கிருந்து வல்லுநர்கள் இங்கே வந்து மெக்னெஸ் நகரை நிர்மாணிக்க நிறையவே உதவினர். 

கி.பி 1682-ல் சுல்தான் இஸ்மாயில், தனது தூதராக முகம்மது தமீமை பிரான்ஸுக்கு அனுப்பினார். அங்கே பிரான்ஸ் அரசரின் விருந்தோம்பலில் திளைத்த தமீம், மறக்காமல் சுல்தானின் ஆசையையும் நேரம் பார்த்து வெளிப்படுத்தினார். ‘உங்க மகள் இளவரசி மேரி அன்னாவை, சுல்தான் கட்டிக்க விரும்புறாரு.’ இளவரசி புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். தலையை இடமும் வலமுமாகப் பலமாக அசைத்து ‘விருப்பமில்லை’ என்றாள். சுல்தானுக்கு பிரான்ஸ் கிளியிடம் பிரெஞ்சு கிஸ் வாங்க யோகமில்லை. 

அதற்காக வருத்தப்பட்டு ‘உச்’ கொட்ட வேண்டாம். அவருக்கு நான்கு மனைவிகள். இதுதவிர, அவரது அந்தப்புரத்திலிருந்த ஆசைநாயகிகளின் எண்ணிக்கை 500+. மொரோக்கோவின் அந்தப்புரம் சகல வசதிகள் கொண்ட சிறை. வேறு எவனாவது அந்தப்புரப் பெண் ஒருத்தியைக் கண்ணாரக் கண்டுவிட்டால் அவன் காலி. அதே நிலைதான் அந்தப்புரப் பெண்ணுக்கும். அவளது பற்கள் பிடுங்கப்படும்; அல்லது கொங்கைகள் துண்டிக்கப்படும்; அல்லது சுல்தானே கழுத்தை நெறித்துக் கதையை முடிப்பார். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அந்தப்புரத்தில் வேலையில்லை. ஆனால், சுல்தானிடமிருந்து உயிர் தப்பி முப்பது வயதுக்கு மேல் விடுதலை பெறுவதே பெரும் பாக்கியம்தான்.

மனிதக் குல வரலாற்றிலேயே அதிக வாரிசுகளை உருவாக்கியவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். அவருக்கு 1,000 முதல் 2,000 வாரிசுகள் உண்டு. இதெல்லாம் அனுமானம். ஆனால், சுல்தான் இஸ்மாயிலின் விஷயத்தில் அது வரலாற்றுபூர்வமான உண்மை. ‘இஸ்மாயிலுக்கும் அவருடைய மனைவிகள் + ஆசைநாயகிகளுக்கும் பிறந்த வாரிசுகளின் எண்ணிக்கை 888’ என்கிறது ஒரு வரலாற்றுக் குறிப்பு. ‘ஆயிரத்துக்கும் மேல்’ என்கிறார்கள் சில வரலாற்றாளர்கள். முக்கியமான ஆதாரம், இஸ்மாயிலின் ஆட்சிக்காலத்தில் பிரான்ஸின் தூதுவராக மொரோக்கோவுக்கு அடிக்கடி சென்று வந்த Dominique Busnot எழுதி வைத்துள்ள குறிப்புகள். ‘கி.பி 1704 வாரிசு கணக்கெடுப்பின்படி, 57 வயது சுல்தானுக்கு 1,171 பிள்ளைகள்’ என்று பதிவு செய்துள்ளார் டொமினிக். அதன்படி, ‘உலகிலேயே அதிகம் பிள்ளைகள் பெற்ற தகப்பன் சுல்தான் இஸ்மாயில்’ என்று கின்னஸ் சாதனையும் சென்ற நூற்றாண்டில் பதியப்பட்டிருக்கிறது. சுல்தான் தனக்குப் பிறந்த பெண் பிள்ளைகளை உயிரோடு விடவில்லை என்கிறது இன்னொரு குறிப்பு.
ஒரே ஆளால் தன் வாழ்நாளில் 1,171 குழந்தைகளுக்குத் ‘தகப்பர்’ ஆக முடியுமா? நமக்கு வந்த அதே சந்தேகத்துடன், வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வில் இறங்கினர். அல்காரிதம், அல்ஜீப்ரா, இன்னபிற கணிதமுறைகளில் எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து ‘வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது’ என்றே அறிக்கை அளித்துள்ளனர்.  

கூடவே சில கேள்விகளையும் முன்வைக்கிறார்கள். அந்தப்புரத்தில் உள்ள பெண்கள், மாதச்சுழற்சியில் கருத்தரிக்க வாய்ப்புள்ள நாள்களில் சுல்தானுடன் இணைந்திருக்க வேண்டும். எல்லா சமயத்திலும் அது நிகழ்ந்திருக்காது. அதைக் கருத்தில்கொண்டு, ‘நிகழ்தகவு’ப்படி பார்த்தால், இத்தனைக் குழந்தைகளை உருவாக்க, சுல்தான் தொடர்ந்து 32 வருடங்கள் நாள் தவறாமல் உழைப்பைக் ‘கொட்டியிருக்க’ வேண்டும். அது சாத்தியமா? மேற்கொண்டு உற்பத்தியாகும் கேள்விகளைச் சேலம் சிவராஜ் வைத்தியருக்கு ஃபார்வேர்ட் செய்துவிட்டு, முடிவுரைக்குச் செல்வோம். வாழ்வாங்கு வாழ்ந்த இஸ்மாயில் தனது எண்பதாவது வயதில் வபாத் ஆனார். அதற்கு முன்பே தனக்கான நினைவிடத்தை இழைத்து இழைத்துக் கட்டிவைத்துக்கொண்டார். அந்தக் கட்டுமானப் பணியில் ஒழுங்காக வேலை பார்க்கவில்லையென நூற்றுக்கணக்கான அடிமைகளின் உயிரைப் பிடுங்கினார் என்பது தனிக்கதை.

கடைசி விஷயம்... சுல்தான் தன் வாழ்வில் மனிதர்களைவிட பூனைகளை அதிகம் விரும்பினார். ஏகப்பட்ட பூனைகள் வளர்த்தார். நேரம் ஒதுக்கி அவற்றுக்குத் தானே இறைச்சியும் ஊட்டினார். மன்னிக்கவும். சுல்தானைப் பற்றி நல்லதாகச் சொல்லுமிடத்திலும் ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடுகிறது. ஒருநாள் பூனை ஒன்று சுல்தான், ஊட்டிய இறைச்சியை வாங்காமல் அடம்பிடிக்க, அவருக்குக் கடும் கோபம். வீரர்களை அழைத்துப் பூனையைக் கைது செய்தார். ‘எனக்கு அடிபணியாவிட்டால் என்ன தண்டனை என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்’ என்று சீறினார். அதன்படி நகரத்தின் நடுவே மக்கள் மத்தியில், அந்தப் பூனைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

(வருவார்கள்...)
Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment