Saturday, May 06, 2017

உதயநிதி அரசியல் என்ட்ரி! - மு.க. குடும்பத்தில் மூன்றாவது வெர்ஷன்

உதயநிதி அரசியல் என்ட்ரி! - மு.க. குடும்பத்தில் மூன்றாவது வெர்ஷன்

‘‘ ‘தொண்டர்களை அலெர்ட்டா இருக்கச் சொல்லுங்க. நாம பண்ணப்போறது சாதாரண விஷயமில்லை. சரித்திரத்துல இடம்பெறப் போற சாதனை’ - இது உதயநிதி நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ பட டிரெய்லர் வசனம் மட்டுமல்ல, எங்களுக்கு உதயாண்ணன் சொல்லும் அரசியல் சேதியும்தான்’’ என்கின்றனர் உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள். இதற்கு முன்னோட்டமாக மதுரையில் சுமார் 500 வழக்கறிஞர்களைத் திரட்டி வழக்கறிஞர் அணியைத் தொடங்கியவர்கள், அடுத்தடுத்து மருத்துவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி எனத் தொடங்கும் ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசினோம்.

‘‘பங்காளிச் சண்டையைச் சமாதானம் செய்யப் போன ஒருத்தரைக் கொன்னுட்டாங்க. ‘எங்களால பெரிய வக்கீல் வெச்சு வாதாட முடியல’ன்னு அவரோட பையன், உதயாண்ணனுக்கு ட்வீட் போட்டிருந்தாரு. அதன் உண்மைத்தன்மை அறிஞ்சுக்கிட்டு, அவருக்கு உதவி செஞ்சாரு. அப்போ, ‘உண்மையா பாதிக்கப்படறவங்களுக்கு இலவசச் சட்ட உதவிகள் செய்யலாமே’னு யோசிக்க, அப்படி உருவானதுதான் வழக்கறிஞர் அணி. ஆனாலும் இதைக் கடந்து நீண்ட நெடிய திட்டமும் இருக்கு’’ என்றவர்கள், அதன் ரகசியத்தை உடைக்கத் தொடங்கினர்.

‘‘உதயாண்ணன் கடந்த தேர்தல்ல, கொளத்தூர் தொகுதியில அப்பாவுக்காகப் பிரசாரம் செஞ்சாரு. தேர்தல் முடிஞ்சபிறகு, ‘சில மாசம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. பின்னாடி நமக்குப் பெரிய வேலையெல்லாம் இருக்கு’ன்னு எங்ககிட்ட சொன்னாரு. அதன்பிறகு சமீபகாலமா, சேகர்பாபு, கு.க.செல்வம் போன்ற தி.மு.க நிர்வாகிகள் ஏற்பாடு செஞ்ச இளைஞர் எழுச்சி நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு வந்தாரு. இனி வருஷத்துக்கு மூணு படங்கள்ல கட்டாயம் நடிக்கப் போறாரு. காமெடியோட கருத்து, ஆக்‌ஷன்னு இந்த மாதிரி படங்கள், மக்கள் மனசுல அழுத்தமா பதியும். 

இன்னொரு பக்கம் மாவட்ட நிர்வாகிகளைச் சென்னைக்கு அழைச்சு, டிஸ்கஷன் நடத்திக்கிட்டு இருக்காரு. கல்லூரிக் காலத்தில் அவங்கப்பாகிட்ட ‘அரசியல்னா என்னப்பா?’ன்னு கேட்டிருக்கிறாரு. அதுக்கு அவர், ‘போராடணும்’னு சொன்னாரு. தொடர்ந்து, ‘இத நான் சொல்லல. உன்னைப் போலவே எங்கப்பாகிட்ட நான் கேட்டப்போ அவர் எனக்குச் சொன்னது’ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லியிருக்காரு. அதைத்தான் தனக்கான மந்திரமா உதயநிதி நினைக்கறாரு.

பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக இயக்கச் செயல்களை எங்க மன்றத்தினரை நடத்தச் சொல்லியிருக்காரு. மதுரையில சில மாதம் முன்பு, ஹெல்மெட் விழிப்பு உணர்வுக்காகப் பெரிய பேரணியும் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. ‘வட்டாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்க. மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் முன்னின்று குரல் கொடுங்க. போராட்டங்களிலும் மக்களோடு இணைஞ்சுக் கோங்க. பிரச்னை வந்தால் நம்ம வழக்கறிஞர் அணி பார்த்துக்கொள்ளும்’னு வலியுறுத்தியிருக்காரு.

உதயநிதி அரசியல் என்ட்ரி! - மு.க. குடும்பத்தில் மூன்றாவது வெர்ஷன்

உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தோட மாநிலத் தலைமை சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கு. அதன்படி இப்ப இருக்கற மன்றங்களை இரு மடங்கா உயர்த்துற வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. ‘கிராமங்களுக்குச் சென்று நிறைய கிளை தொடங்குங்க. அந்த ஊர் பெரிய மனிதர் மட்டுமில்லாம, விவசாயிகளை வெச்சு மன்றத்தைத் திறங்க. அது, விவசாயிகளுக்கு மதிப்பளிக்கிறதா இருக்கும். எங்க திரும்பினாலும் உதயாண்ணன் படம் தெரியணும். சமூகப் பணிகள்ல ஈடுபடும் போஸ்டர்கள், பேனர்கள் ஊருக்கு ஊர் நிறைய ஒட்டுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. சமூக சேவையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் கொடுத்து, அந்த ரிப்போர்ட் கேட்குறாங்க. ‘விரைவில் தேர்தல் வரக்கூடும். அதுக்குள்ள தமிழ்நாட்டில் நீண்டு, நெடிய கிளை பரப்பிடணும்’னு சொல்லியிருக்காங்க. கட்சியில சில முக்கியப் பதவிகள் உதயாண்ணனுக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை’’ என்றனர் மூச்சுவிடாமல்.  

நாம் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வில்ஸ்டோவிடம் பேசினோம். “ ‘மக்களுக்கு உதவும்வகையில் சமூக சேவையில் ஈடுபடுங்கள்’னு உதயநிதி சொல்லியிருக்காரு. அதன்படி நடக்கிறோம்’’ என்றார் சுருக்கமாக.

‘‘என் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்’’ என்று ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது ஸ்டாலின் சொன்னார். அது, நமக்கு ஞாபகம் இருக்கிறது. ஸ்டாலினுக்கு?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment