Friday, May 19, 2017

இருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு!

இருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு!

‘ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க அரசு இத்தனை காமெடியானது’ என்று நிரூபிக்க செல்லூர் ராஜு அணைக்குள் தெர்மாகோல் விட்டதை வேண்டுமானால் மீம்ஸ்களில் சிரித்துக் கடந்துவிடலாம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மணல் கொள்ளைத் தடுப்பு அறிவிப்பை, அப்படி எளிதில் கடந்துவிட முடியுமா? ‘மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக மணல் குவாரிகள் மூடப்படும்’ என்றதோடு மட்டுமல்லாமல், ‘அதுவரை அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும்’ என்றும் அறிவித்துள்ளார் முதல்வர். ஆனால், ‘ஆறுகளில் மணல் இருந்தால்தானே அள்ளுவதற்கு?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.   

வருடம் தவறாமல் நீரோடும் ஆற்றில் ஒரு கன அடி மணல் உருவாக, சுமார் 100 ஆண்டுகள் பிடிக்கும். அந்தப் பொக்கிஷத்தை எவ்வளவு வேகத்தில்  நாம் அழித்திருக்கிறோம் தெரியுமா? ஆர்.டி.ஐ ஆர்வலரான கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு முழுக்க அள்ளப்பட்ட மணல் எவ்வளவு என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டு வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆற்றையும், பொதுப்பணித்துறை சில வடிநிலக் கோட்டங்களாகப் பிரித்துள்ளது. அதன்படி, இந்த எட்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பல ஆறுகளில் அள்ளப்பட்ட மணல் அளவு இங்கே:  

கொசஸ்தலையாறு - 7,08,682 யூனிட்

கொசஸ்தலையாறு (2) -  8,19,396

ஆரணியாறு - 9,34,152 யூனிட்

ஆரணியாறு (2) - 9,07,848 யூனிட்

மேல்பாலாறு - 24,82,558 யூனிட்

கீழ்பாலாறு - 52,15,758 யூனிட்

கீழ்பாலாறு (2)- 45,93,792 யூனிட்

மேல் பெண்ணையாறு - 7,60,136 யூனிட்

கொள்ளிடம் - 3,18,112 யூனிட்

கொள்ளிடம் (2) - 6,14,229

பெரியாறு வைகை - 1,13,190 யூனிட்

மஞ்சளாறு - 1,15,524 யூனிட்

கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறு - 16,15,266 யூனிட்

காவிரி ஆற்றுப்படுகை - 7,30,240 யூனிட்

அமராவதி- 5,38,225 யூனிட்

அமராவதி (2) - 2,47,047 யூனிட்

மணிமுத்தாறு - 3,69,158 யூனிட்

சிற்றாறு - 1,15,523 யூனிட்

வைப்பாறு - 7,60,136 யூனிட்

வைப்பாறு (2) - 10,56,698 யூனிட்

வெள்ளாறு - 8,83,574 யூனிட்

தாமிரபரணி - 6,73,856 யூனிட்

மணிமுத்தாறு - 2,80,262 யூனிட்

இந்தப் புள்ளிவிவரங்களோடு பேச ஆரம்பித்தார் லோகநாதன். ‘‘எட்டு ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல் என்று அரசு சொல்லும் கணக்கு இது. அதாவது, ஒரு குவாரியில் எவ்வளவு ஆழம், அகலம், நீளம் என்று பொதுப்பணித்துறை விதிமுறை வகுத்துள்ளதோ, அதன்படி அள்ளப்பட்டதாகக் காட்டும் மணல் கணக்கு. ஆனால், உண்மையில் எங்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் அள்ளுவதில்லை என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அப்படியென்றால், எவ்வளவு கோடி யூனிட் மணல் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். 2011 வரைக்கும் இவ்வளவு என்றால், அதற்குப் பிறகு எவ்வளவு மணல் கொள்ளை போனது என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.  

மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மணல் குவாரியை அரசே ஏற்று நடத்தும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால், அவருக்குக் கீழே இருந்தவர்கள் அதை நடக்க விடவில்லை. லிஃப்டிங் அண்டு லோடிங், செகண்ட் சேல்ஸ் என்று புரோக்கர்கள் உள்ளே நுழைந்தார்கள். மணல் கொள்ளையர்கள் இயற்கையைச் சூறையாடி பணத்தைக் குவித்து, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பங்கு வைத்தார்கள். இப்போது ‘மூன்று வருடங்களில் குவாரிகளை மூடுவோம்’ என்றும், ‘மூடும்வரை அரசே ஏற்று நடத்தும்’ என்றும் அறிவித்துள்ளார் முதல்வர். 

எப்படி நடத்துவார்கள்? மூன்று வருடங்கள் மணல் அள்ளுவதற்காக ஜே.சி.பி இயந்திரங்களையும், லாரிகளையும் அரசு விலைக்கு வாங்கப் போகிறதா? மொத்த குவாரிகளுக்கும் எத்தனை ஜே.சி.பி-க்களை அரசு வாங்கும்? வாடகைக்கு எடுத்தாலோ, கான்ட்ராக்ட் விட்டாலோ, மறுபடியும் பழைய சங்கதிகள்தான் அரங்கேறும். நம் ஆறுகளின் மணலில் முக்கால்வாசிக்கும் மேல் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும்தான் போகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் வராமல் தடுப்பதற்காக அங்கு கட்டப்படும் அணைகளும், செக் டேம்களும் நம் ஆற்று மணலில்தான் உருவாகின்றன. ‘சொந்தக் காசில் சூனியம்’ என்று சொல்வார்களே, அது இதுதான். நம் தேவையைத் தாண்டி ஒருபிடி மணல்கூட நம் மாநில எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது. 

மணல் இங்கு அத்தியாவசியம். மணல் இல்லாமல் எந்தக் கட்டுமானமும்  நடக்காது. ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அவருக்குத் தேவையான மணலின் அளவை, தகுந்த விண்ணப்பங்களைப் பெற்று நேர்மையான முறையில் ஆய்வு செய்து நேரடியாக அவரிடமே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சொந்த வீடு கட்டுபவர்களுக்கு ஒரு ரேட், வணிக வளாகங்கள் கட்டுபவர்களுக்கு ஒரு ரேட் என்று வரையறுத்து மணல் விற்பனையை நெறிப்படுத்த வேண்டும். இதுதான் செய்ய வேண்டிய விஷயம். ஆனால், புண்ணான காலுக்கு மருந்திட்டு சரிசெய்வதை விட்டுவிட்டு, காலையே வெட்டி எடுக்கப்போகிறேன் என்பது போல இருக்கிறது முதல்வரின் அறிவிப்பு’’ என்கிறார் லோகநாதன். 

இருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு!

மணல் கொள்ளையை எதிர்த்து, தொடர்ந்து போராடிவரும் முகிலனிடம் பேசினோம். ‘‘ஒவ்வொரு மாதமும் 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி எந்த ஆய்வும் இதுவரை நடந்ததே இல்லை. இப்போது முறைகேடு நடந்திருக்கிறது என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது என்றால், அந்த அதிகாரிகளின் மீது நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘எக்காரணத்தை முன்னிட்டும் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது’ என்று சொல்லப்பட்ட குவாரிகளில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளினார்களே... அதற்கெல்லாம் யார் பொறுப்பு? அரசாங்கமே சட்டத்தை மீறித்தானே செயல்பட்டிருக்கிறது. இங்கு முதல்வரே பொதுப்பணித்துறை அமைச்சர் அப்படியென்றால் இந்தத் தவறுக்கு எல்லோரும் உடந்தைதானே! ஒரு அறிவிப்பில் எல்லா தவறுகளையும் மூடி மறைத்துவிட முடியுமா?  

காவிரி ஆற்றில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மணல் அள்ளினார்கள் என்றால், அதில் 1,700 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு மட்டும் இவ்வளவு தொகை. இதுகுறித்து அரசாங்கத்திடம் என்ன கணக்கு இருக்கிறது?  

கேரளாவைப் பாருங்கள். கடந்த 25 வருஷங்களாக ஒரு கை மணல் அள்ளாமல், எப்படி அங்கே வீடு கட்டுகிறார்கள்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? கேரள அரசாங்கம் அரசு கட்டடங்களை எப்படிக் கட்டுகிறது? இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டாமா? இவ்வளவுக்கும் கேரளாவில் 80 கிலோமீட்டருக்கு மேலே பாயும் ஆறுகள் 25 இருக்கின்றன. ‘கடவுளின் தேசம்’ என அவர்களால் ஏன் சொல்லத் தோன்றுகிறது என்றால், அவர்கள் கடவுள் மாதிரி மண்ணைப் பாதுகாக்கிறார்கள். தெலங்கானாவில் மணல் விற்பனை முழுக்க ஆன்லைன்தான். எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கிறது. கர்நாடகாவில் ஆற்றில் மணல் எடுப்பதே இல்லை. இந்தியாவிலேயே இத்தனை இயந்திரங்களை வைத்து மணல் அள்ளும் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது. 

இவ்வளவு மணல் கொள்ளையடிக்கப் படாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு வறட்சி நிலை வந்திருக்காது. மணல் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரே நமக்குப் போதுமானதாக இருக்கும். மணலை சுத்தமாக அள்ளிவிட்டால் ஆறு மொட்டையாகிறது என்பது மட்டுமல்ல, உயிர்ச்சூழலே அங்கு பாதிக்கப்படுகிறது. எக்கச்சக்கமான உயிர்கள் அழிந்துபோகின்றன. இதைத்தான் மத்திய அரசும் எதிர்பார்க்கிறது. நமது ஆறுகள் அழிக்கப்பட்டு, நம் நிலங்கள் பாலைவனமாக்கப்பட்டால்தான், அவர்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மீத்தேன் எடுக்கமுடியும்.   

இங்கே அரசு... நிர்வாகம்... எல்லாமே சும்மா பெயரளவில்தான்! அவர்களுக்குத் தேவை பணம்... பணம்... பணம் மட்டும்தான். இந்த அரசாங்கம் எதைச் செய்தாலும் ஒரு உள்நோக்கம் இருக்கும். மணலை சுத்தமாக முடித்துவிட்டார்கள். இப்போது மலையைப் பிடித்திருக்கிறார்கள். கற்களைப் பொடியாக்கிப் பெறுவதுதான் எம் சாண்ட். மணலுக்கு மாற்றாக இதைக் காட்டி, இருக்கும் மலைகளையெல்லாம் வெட்டி எடுக்கத் திட்டம் போட்டிருக்கிறார்கள்’’ என ஆவேசமும் ஆதங்கமுமாக முடித்தார் முகிலன்.

மணல் விற்பனை தொடர்பான முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எந்த அறிவிப்பும் சின்ன மாற்றத்தைக்கூட கொண்டு வராது. 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment