Thursday, May 18, 2017

‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க!’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்

‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க!’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்

ஜினி எது பேசினாலும் அது அரசியல்! ஆனால், அவரோ ‘‘நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது” என்கிறார் மீண்டும். பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். அதிலும் அதே கருத்தை மீண்டும் சொல்லியிருக்கிறார்.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியிருந்தது. தொடக்க விழாவில், சினிமா, அரசியல் என அனைத்தைப் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

காலை 8 மணி முதலே மண்டபத்துக்குள் ஆஜரானார்கள் ரசிகர்கள். அவர்களுக்கு ஏற்கெனவே நுழைவுச்சீட்டு கொடுக்கப்பட்டிருந்ததால், நெரிசல் போன்ற பிரச்னைகள் இல்லை. அவர்களை ஒழுங்குபடுத்த பெளன்ஸர்கள்  இருந்தனர்.

மேடையின் பின்னணியில் ‘பாபா’ பட விரல் முத்திரை, ஒரு வெண்தாமரையில் இணைந்து இருந்தது. இது ரசிகர்களுக்கு பல யூகங்களைக் கொடுத்தது. சில ரசிகர்கள், “தலைவர் அரசியலுக்கு வந்தால் இதுதான் நம்ம கட்சியின் சின்னம்” என பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது. 

மேடையில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மட்டுமே இருந்தார். நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து அவர் பேசினார். “கொடுத்து நிறைவுபெறுவது ரஜினியின் வழக்கம். பத்திரிகைகளில் வரும் செய்திகளைவிட, தனிப்பட்டமுறையில் அவர் செய்யும் உதவிகள் ஏராளம். அவை, அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்ந்தால்தான் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற வள்ளுவன் சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவருகிறார் ரஜினி. இதுதான் உண்மை” என்றார்.

ரஜினிகாந்த், மைக் பிடித்தவுடன் விசில் சத்தம் காதைப் பிளந்தது. 

“முத்துராமன் சார் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் ரெண்டு விஷயங்கள் மறக்காமல் சொல்வார். ஒன்று, ‘நீ எதுக்கும் டென்ஷன் ஆகாத ரஜினி. ஹெல்த்தைப் பாத்துக்கோ’ என்பார். ரெண்டாவதா, `நீ ரசிகர்களை மீட் பண்ணு’னு சொல்வார். அவர் சொன்ன மாதிரியே இந்த நிகழ்வு நடந்திருக்கு. எனக்குக் கிடைச்ச வழிகாட்டி முத்துராமன் சார்” என்று அவரைப் புகழ்ந்தவர், அரசியல் பேச்சை எடுத்தார்.

“கொஞ்ச நாள்களுக்கு முன்னாடியே உங்களைச் சந்திக்கிற ஐடியா இருந்தது. சில வேலைகளால் அது கேன்சல் ஆனது. அடுத்து நான் இலங்கை போற மாதிரி இருந்தது. அதையும் கேன்சல் பண்ற மாதிரி ஆகிடுச்சு. உடனே சில ஊடகங்கள், `அவர் எதிலும் ஸ்டெடியா நிற்க மாட்டார். அவர் மைண்டை சேஞ்ச் பண்ணிட்டே இருப்பார். அரசியலுக்கு வரத் தயங்குறார்; பயப்படுறார்’னு எல்லாம் பேசினாங்க; எழுதினாங்க. நான் ஒரு விஷயம் செய்றேன்னு சொன்னா, நிறைய யோசிப்பேன்; சிந்தனை பண்ணித்தான் முடிவு எடுப்பேன். இப்ப தண்ணியில கால் வைக்கிறோம். கால் வைச்ச பிறகுதான் தெரியுது, அதுக்குள்ள நிறைய முதலைகள் இருப்பது. சரி, `வைத்த காலை பின்னாடி எடுக்க மாட்டேன்’னு சொன்னால் என்ன ஆகும்? எப்பவும் முரட்டு தைரியம் எல்லாம் இருக்கவே கூடாது.பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.

அப்புறம் `அவர் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும், ரஜினி ஏதாவது ஸ்டன்ட் பண்ணுவார். படம் ஓடுறதுக்கு ஏதாவது உத்திகளைச் செயல்படுத்துவார்’னு சொல்றாங்க. ஆனா, உங்களுடைய ஆசீர்வாதத்தால், அன்பால் அப்படிப் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏன்னா, என்னுடைய ரசிகர்கள் இதுக்கெல்லாம் ஏமாற மாட்டாங்க. ஆனா, ஒரே ஒரு விஷயத்துலதான் ரொம்ப ஏமாந்துடுறாங்க. அது எதுனு நான் சொல்ல விரும்பலை’’ என்றதும் அர்த்தம் புரிந்ததுபோல ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்.

‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க!’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்

‘‘21 வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு ஒரு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கட்சிக்கு ஆதரவு தரவேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. அந்தக் கட்சிக்கே என்னை வாழ வைக்கிற தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைச்சாங்க. அப்ப இருந்தே என் பேரு அரசியலில் அடிபட ஆரம்பிச்சுடுச்சு. என் ரசிகர்களில் சில பேர் ரொம்ப ஆர்வமா அரசியலில் ஈடுபட ஆரம்பிச்சுட்டாங்க. சில அரசியல்வாதிகள் அவங்களைப் பயன்படுத்திக்கிட்டாங்க. இவங்களும் அவங்களைப் பயன்படுத்திக்கிட்டாங்க. அதுல நிறைய பணம்கூடப் பார்த்துட்டாங்க. ருசி கண்ட பூனை மாதிரி, அரசியல் ருசி அவங்களுக்குத் தெரிஞ்சுபோயிடுச்சு. அதைப் பார்த்து அடுத்த அடுத்த எலெக்‌ஷன் வரும்போதெல்லாம், இவங்க அவங்களை நாடுவது... அவங்க இவங்களை நாடுவதுனு எல்லாமே நடந்தது. அதனாலதான் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், `என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை’னு சொல்ற சூழலுக்கு நான் தள்ளப்படுறேன். நான் ஒரு பெரிய அரசியல் தலைவரோ, சமூக சேவகரோ, பெரிய ஆளோ, எல்லாரும் என் ஆதரவுக்காகக் காத்திருக்கிறதோ... அப்படி எதுவும் கிடையாது. என் பேரைச் சொல்லி யாரும் ஏமாத்திடக் கூடாதுனுதான் அறிக்கை விடுறேன்.

நிறைய ரசிகர்கள் லெட்டர் எழுதுறாங்க. `நாங்க உங்க படம் பார்த்துட்டு அப்படியே இருந்துவிடுவதா? நாம எப்ப முன்னேறுவது? நமக்கு அப்புறம் பிறந்தவங்க எல்லாம் ஒயிட் டிரெஸ் போட்டுக்கிட்டு இனோவா கார்ல போறாங்க. நாம எப்ப அப்படி எல்லாம் போறது? நாம எப்ப பணம் சம்பாதிக்கிறது? நாம எப்ப வீடு வாங்கிறது?’னு லெட்டர் எழுதுறாங்க. கவுன்சிலர் ஆகணும், எம்.எல்.ஏ ஆகணும்னு நினைப்பதில் தப்பு இல்லை. ஆனா, அதை வைச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கும்போது வருத்தப்படுறதா, கோபப்படுறதா, சிரிக்கிறதானு ஒண்ணுமே புரியலை. நான் அப்பவும் சொன்னேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையிலதான் என் வாழ்க்கை இருக்கு. இந்த உடம்பை நான் சுத்தமா வெச்சுக்கணும்; ஆரோக்கியமா வெச்சுக்கணும். இதயத்தைத் தூய்மையா வெச்சுகணும். அவ்வளவுதான். அந்த ஆண்டவனுக்கு நான் ஒரு கருவி. அவன் என்னைப் பயன்படுத்திட்டிருக்கான். இப்ப நடிகனாகப் பயன்படுத்திட்டிருக்கான். நடிகனா நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு அவன் என்னை என்னவாகப் பயன்படுத்தப்போறான்னு எனக்குத் தெரியாது. 

அவன் என்னைப் பயன்படுத்தும்போது எல்லாம் நியாயமா, தர்மமா, உண்மையா இருக்கேன். அந்த மாதிரி என்ன பொறுப்பு கொடுத்தாலும் இப்படித்தான் இருப்பேன். ‘என் தலையில அரசியல்னு எழுதலை’னு சொன்னா நீங்க ஏமாந்துபோவீங்க. ஒருவேளை நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிற ஆள்களைக் கிட்ட சேர்க்க மாட்டேன். அவங்களை என் மூலமா அரசியலுக்குள் நுழையவிட மாட்டேன். அதனால, அப்படிப்பட்ட ஆட்கள் இப்பவே ஒதுங்கிடுங்க. இல்லைன்னா ஏமாந்துபோவீங்க” என்று ஃபைனல் டச் கொடுத்தார்.

‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க!’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்

‘‘காமராஜர் ஆட்சியை ரஜினி அமைப்பார்!’’

“எனது ரசிகர்கள் கவுன்சிலர், எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில்கூட சேர்க்க மாட்டேன்” என ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேசியிருப்பது பற்றி ரசிகர் மன்றத்தினர் என்ன நினைக்கிறார்கள்?

தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசனிடம் பேசினோம். ‘‘தலைவர் சொல்வது உண்மை. இந்தப் பகுதியிலேயே ரசிகர் மன்ற பொறுப்புகளில் இருந்த நிறைய பேர், பல கட்சிகளுக்குச் சென்று பதவிகளில் இருக்கிறார்கள். ஒழுக்கம், நியாயம், நேர்மையுடைய தலைவர் முதல்வராகணும். அது ரசிகர்களுக்காக அல்ல, தமிழக மக்களுக்காக. தலைவர் அரசியலுக்கு வந்து நல்லது செய்யும்போது என்னைவிட நல்லவர் ஒருவர் வந்தால் அவருக்காக என் பதவியை விட்டுக்கொடுப்பேன். கடைசிவரை தலைவரின் கடைக்கோடி ரசிகனாகவே இருப்பேன்” என்றார்.

நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி பாஸ்கர், “15 வயசுல ரஜினி ரசிகனா வந்த என்னைப் போன்றோருக்கு இப்போது 40 வயசு தாண்டிடுச்சு. எந்தக் கட்சிக்குள்ளும் எங்களை அடைத்துக்கொள்ளாமல் தலைவர் சொல்லே வேதம்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். யார், யாரோ காமராஜர் ஆட்சியை அமைக்கப்போவதா சொல்றாங்க. ஆனா, சுயநலமில்லாத, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை ரஜினி ஒருவரால்தான் அமைக்கமுடியும்’’ என்றார். 

‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க!’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்

கூப்பன்களை விலைக்கு விற்றார்களா?

ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில்... சேலத்தில் ரஜினி ரசிகர்களுக்குள் மோதல். ‘‘ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி கூப்பன்களை, சேலம் ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேல் விற்றுப் பணம் பார்த்துவிட்டார்’’ எனக் குமுறுகிறார், சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை சட்ட ஆலோசகர் ரஜினி செந்தில்.

‘‘ஒவ்வொரு ரஜினி ரசிகர்களின் வாழ்நாள் கனவு தலைவர் ரஜினியோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுவது. அதற்காக தவமாய் தவம் இருந்து வருகிறோம். அதற்காக இப்போது வழங்கப்பட்ட கூப்பன்களில் பாதியை பழனிவேல் தன் உறவினர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் கொடுத்துவிட்டு, மீதியை 3,000 முதல் 5,000 ரூபாய் வரை சினிமா டிக்கெட்டுகள் விற்பதைப் போல விற்றுவிட்டார். இதனால், தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்மையான சேலம் ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விட்டது’’ என்று கொதித்தார். 

இதுபற்றி பழனிவேலிடம் கேட்டோம். ‘‘இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்பவர்கள் உண்மையான ரசிகர்கள் அல்ல. ரஜினி ரசிகர் மன்றம் என்ற போர்வையில் வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களோடு இணைந்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள். தலைமையில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளைத் தேர்வுசெய்து, 150 பேரின் புகைப்படத்தோடு கூடிய பெயர் பட்டியல அனுப்பச் சொல்லியிருந்தார்கள். நான் அதே போல 194 நிர்வாகிகள் பெயரை அனுப்பி இருந்தேன். அவர்களுக்குத் தான் கூப்பன்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர் சொல்வதைப் போல என் உறவினர்களுக்கும், பணம் வாங்கிக்கொண்டும் கொடுத்ததாக நிரூபித்தால் என் பதவியை விட்டே விலகத் தயார்” என்று சவால் விட்டார். 

‘‘பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில்கூட சேர்க்க மாட்டேன்” என ரஜினி கர்ஜிக்கும் நிலையில், இதேபோன்ற குற்றச்சாட்டு சில இடங்களில் எழுந்தது.

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment