Friday, May 12, 2017

‘‘இறால் பண்ணையாளர்களுக்கு சாதகம்... விவசாயிகளுக்கு பாதகமா?’’ - கொதிக்கும் நாகை

‘‘இறால் பண்ணையாளர்களுக்கு சாதகம்... விவசாயிகளுக்கு பாதகமா?’’ - கொதிக்கும் நாகை

ப்பு நீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம் வட்டாரத்தின் பிரச்னைக்குத் தீர்வுகாண, ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் இப்போது எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது!

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல்நீர், இயற்கையாக பேக் வாட்டராக உள்ளே புகுகிறது. இன்னொரு பக்கம், இறால் வளர்ப்புக்காகவும் பண்ணையாளர்கள் கடல்நீரைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி உப்புநீர் உள்ளே புகுவதால், நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்பட்டு குடிநீர்ப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குத் தீர்வாக, ஒரு திட்டத்தை ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் தமிழக அரசு கொண்டுவர முடிவு செய்தது.  

‘அந்தத் திட்டம் என்ன’ என்பது குறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஆசிய வங்கியின் 1,650 கோடி ரூபாய் நிதி உதவியோடு, இந்தப் பகுதியில் உப்புநீரைத் தடுப்பதற்காக, ‘பருவநிலை மாற்ற தழுவல் திட்டம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்காக வல்லுநர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. வளவனாறு, அரிச்சந்திரன் ஆறு, அடப்பனாறு, பாண்டவனாறு, வெள்ளையாறு, வேதாரண்யம் கால்வாய் ஆகிய ஆறு ஆறுகளின் கழிமுகப்பகுதிகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒப்பந்ததாரர் வேறு யாருமல்ல, ரெய்டில் சிக்கி,  சிறையில் இருக்கும் சேகர் ரெட்டிதான்.

திட்டத்துக்கான இடங்கள், செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. உப்புநீர் ஒரு சொட்டு கூட நுழைய முடியாத வகையில், இயக்கு அணைகள் உருவாக்கவும், வழக்கமான இரும்புக் கதவுகளுக்குப் பதிலாக, துருப்பிடிக்காத உலோகத்தால் கதவுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதன் மூலம், வேதாரண்யம் முதல் மன்னார்குடி வரை நல்ல குடிநீர் கிடைக்கும். மேலும், காவிரி நீரை எதிர்பார்க்காமலே சுமார் 75 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்றார். 

இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க் கிறார்கள்? எதிர்ப்பாளர்களில் ஒருவரான நமசி.நாகரெத்தினத்திடம் கேட்டோம். “எங்கள் ஊரான கள்ளிமேட்டில் அடப்பானாற்றுப் பாலத்தின் மேற்கே 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படும் ரெகுலேட்டரை, பாலத்தின் கிழக்கே 200 மீட்டரில் அமைத்தால், எங்கள் ஊர் வளம்பெரும். சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெறும். இதற்காக அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டோம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். திட்டப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. பிறகு, திடீரென திட்டத்தை மாற்றிவிட்டார்கள். இங்கே கட்டப்படும் அணை, பல ஊர்களுக்குப் பயன் தருமாம். ஆனால், எங்கள் ஊருக்கு எந்தப் பயனும் கிடையாதாம்.  இதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்.

நாகை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான இறால் பண்ணைகள் இருக்கின்றன. அனுமதியில்லாமலும் விதிகளை மீறியும் இந்த இறால் பண்ணைகள் நடத்தப்படுகின்றன. இதனால்தான் உப்புநீர் அதிகம் நிலத்தடியைப் பாதிக்கிறது. ‘‘இந்தத் திட்டத்தால் நல்ல குடிநீர் கிடைக்கும் அதே வேளையில் இறால் பண்ணை நடத்துகிறவர்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு. எனவே, திட்டம் தங்கள் பகுதிக்குள் வராமல் சிலர் பார்த்துக்கொண்டார்கள். மாவட்ட அமைச்சரான ஓ.எஸ்.மணியனுக்குக்கூட இறால்பண்ணைகள் இருக்கின்றன’’ என குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. “எங்கள் பகுதியில் இறால் பண்ணை உரிமையாளர்களுக்குச் சாதகமாகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சரிடமும், கலெக்டரிடமும் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை” என்றார் சிவராமன் என்பவர். சமூக ஆர்வலர் சோமு.இளங்கோ, “விவசாயிகளின் 15 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தற்போதைய திட்டப்படி செயல்படுத்தினால், மீண்டும் உப்புநீர் ஊருக்குள்தான் புகும். எனவே, அதை மாற்றியமைக்கக் கோருகிறோம். இல்லாவிட்டால் சுமார் 45 கிராமங்கள் பாதிக்கப்படும்” என்றார்.

‘‘இறால் பண்ணையாளர்களுக்கு சாதகம்... விவசாயிகளுக்கு பாதகமா?’’ - கொதிக்கும் நாகை

நாகை கலெக்டர் பழனிச்சாமியிடம் பேசினோம். “நாகப்பட்டினம் முதல் கோடியக்கரை வரையிலான வேதாரண்யம் கால்வாய், நிலத்தடி மட்டத்திலிருந்து ஆறு அடி தாழ்வாகவே உள்ளது. அதனால்தான், இந்தக் கால்வாய்க்கு மேற்கே ஜீரோ மட்டத்தில் இந்தத் திட்டத்துக்கான ரெகுலேட்டர்கள் அமைக்கப்படுகின்றன. அப்போதுதான் கடல்நீர் உள்புகாமலும், மழைநீர் கடலில் கலக்காமலும் தடுத்து நீர் ஆதாரத்தைப் பெருக்க முடியும். இதை அறியாமல், வேதாரண்யம் கால்வாய்க்குக் கீழே இந்த ரெகுலேட்டரை அமைக்கச் சொல்லி சில விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களுக்கு உரிய வகையில் விளக்கியிருக்கிறோம்” என்றார்.        

அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். “எங்கள் பகுதியின் உப்புநீர் பிரச்னையைத் தீர்த்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்கக்கூடிய அற்புதமான திட்டம் இது.  இதில், ஒரு சிறு மாற்றம் கூட செய்ய இயலாது. அதே நேரம், விவசாயிகளின் கோரிக்கைகளை மாற்று வழியில் பரிசீலித்து அதற்கும் நல்லது செய்ய இடமிருக்கிறது. இது தொடர்பாக, விவசாயிகள் அனைவரும் தமிழக முதல்வரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு இறால் பண்ணைகள் எல்லாம் கிடையாது” என்றார்.  

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment