Sunday, May 28, 2017

மிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை!”

மிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை!”

‘‘ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கிற பிரதமர் அலுவலகத்துக்கு மாறிவிட்டார்கள் போலிருக்கிறது’’ என்றபடியே கழுகார் என்ட்ரி ஆனார். தான் போடும் அரசியல் புதிர் முடிச்சுகளை அவரே அவிழ்ப்பார் எனக் காத்திருந்தோம்.

‘‘கடந்த வாரம் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துவிட்டு வந்தார். இந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் அலுவலகத்தில் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார். நீட் தேர்வு விலக்கு, வறட்சி நிவாரணம் என பிரதமரைச் சந்திப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா ஆகியவற்றுக்கு பிரதமரை அழைப்பதுதான் பிரதானமாக இருந்தது. ஜெயலலிதாவைப் பற்றியும் எம்.ஜி.ஆரைப் பற்றியும் அதிகம் பேசுவது பன்னீர் அணியினர்தான். ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ எனக் கேட்டு வருகிறார் பன்னீர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அக்டோபரில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் பன்னீர் அணியினர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வைப் பற்றி அஞ்சுவதைவிட பன்னீர் அணியினரைக் கண்டுதான் பயந்து போயிருக்கிறார்கள் ஆளும் தரப்பினர். அதனால்தான் ஜெயலலிதாவையும் எம்.ஜி.ஆரையும் எடப்பாடி அணியினர் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் எடப்பாடியின் டெல்லி விசிட். மோடியிடம் யார் நல்ல பெயர் எடுப்பது என்கிற போட்டியில் பன்னீரும் எடப்பாடியும் டெல்லிக்குக் காவடித் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘டெல்லி சலோ!’’

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு முதல்வர் ஆன பன்னீர்செல்வம் அந்த மரணத்தைப்  பற்றி வாயே திறக்கவில்லை.சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்த பொதுக்குழு தீர்மானத்தை சசிகலாவிடம் கொடுத்து ‘நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ எனக் கெஞ்சினார். சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்றபோது அவர் காலில் விழுந்து வணங்கினார். இப்படி ஸ்மூத்தாகப் போய்க் கொண்டிருந்தவரை பன்னீருக்கு எந்த பங்கமும் வரவில்லை. முதல்வர் பதவியை சசிகலாவுக்காக விட்டுக்கொடுக்கச் சொன்னபோதுதான் பன்னீருக்கு ரோஷம் வந்து, ஜெயலலிதா சமாதியில் ஞானோதயம் பெற்றார். அதன்பிறகுதான் ‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்’ என்கிற முழக்கத்தை எல்லாம் எழுப்ப ஆரம்பித்தார். ‘முதல்வர் பதவி இல்லை என்பது மட்டுமல்ல... சசிகலா அமைக்க இருந்த அமைச்சரவைப் பட்டியலிலும் அவர் பெயர் இல்லாமல் போனதால்தான் இப்படிப் பொங்கி எழுந்தார்’ என்கிற பேச்சும் உண்டு. இந்த விஷயம் கவர்னர் வித்யாசாகர் ராவ் மூலம் பி.ஜே.பி-க்குச் சென்று, அங்கிருந்து பன்னீருக்குத் தகவல் போனபிறகுதான் சமாதியில் அவர் தியானம் கலைத்தார். அந்த இடத்தில் நெருக்கமானது, மோடி - பன்னீர் நட்பு.’’

மிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை!”

‘‘இந்த ஃப்ளாஷ்பேக் இப்போது ஏன்?’’

‘‘அவசரப்படாதீர். முன்கதை சொன்னால்தான் பின்கதை தெரியும். முதல்வராக இருந்தபோதே மோடியுடன் பன்னீர் நட்பாகிவிட்டார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையைத் தவிர்த்துவிட்டு மோடியைப் போய் பார்த்தபோதே பன்னீருக்கு டெல்லி, சிவப்பு கம்பளம் விரித்துவிட்டது. இப்படி கெட்டியான நட்பில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வரை ரெய்டு நடத்த முடிந்ததாகப் பேச்சு இருக்கிறது. ‘பன்னீருக்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் நுழையும் வருமானவரித் துறையினர் ஏன் பன்னீர் வீட்டுக்குப் போகவில்லை’ என்கிற கேள்வியை அர்த்தத்தோடு எழுப்புகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பன்னீரைப் போலவே எடப்பாடியும் பிரதமருடன் நெருங்க நினைத்தார். அந்தப் போட்டிதான் இப்போது அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுக்குள் நடக்கிறது. மோடியின் குட் புக்கில் இடம்பெறுவதற்காக ஜெயலலிதாவையும் எம்.ஜி.ஆரையும் திடீரென துணைக்கு அழைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஆரம்பித்த ஜனவரியில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாதவர்கள், டிசம்பரில் நடைபெறும் நூற்றாண்டு நிறைவு விழாவுக்குத் தேதி குறித்திருப்பதே மோடிக்காகத்தான். அதுவரையில் ஆட்சிக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வாகக்கூட இருக்கலாம்!”

‘‘ஓஹோ.’’

‘‘ஜெயலலிதா மறைந்து ஒன்றரை மாதங்கள் கழித்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் போட்டதோடு கடமை முடிந்துவிட்டது என ஒதுங்கிவிட்டார்கள். ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சியின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டத்தைக்கூட அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் நடத்தவில்லை. இப்போது திடீரென சட்டசபையில் படத்தை வைக்க நினைக்கிறது எடப்பாடி அணி. ‘ஜெயலலிதா சமாதியில் நினைவிடம்  அமைப்போம்’ எனச் சொல்லி அதற்காக 15 கோடி ரூபாய் நிதி எல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் எழுப்பினால் தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பும் என்பதால், அவரின் படத்தை சட்டசபையில் திறக்க முடிவு செய்துள்ளார்கள். சட்டமன்றத்தில் நீதிமன்றம் தலையிடாது என்பதால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.’’

‘‘புதிருக்கான விடை இன்னும் வரவில்லையே?’’

‘‘வியாழக்கிழமை ஸ்டாலின் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? ‘அ.தி.மு.க-வை உடைத்தும், உடைந்த அ.தி.மு.க-வை இணைக்கும் முயற்சியையும் ஒரு கட்டப்பஞ்சாயத்து போல நடத்துகிறார் பிரதமர் மோடி’ எனக் கடுமையாகச் சொல்லி இருந்தார் ஸ்டாலின். ‘அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருந்தாலும் அதை இயக்குவது டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கிற பிரதமர் இல்லம்தான்’ என்கிற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் வைக்கிறார்கள். இரண்டு அணிகளும் இணையும் பேச்சுவார்த்தைகள் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் நடக்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகளை இங்கே தீர்மானிக்காமல், டெல்லிதான் தீர்மானிக்கிறது. பிரதமர் ஒருவர், வழக்கமான மரபுகளை எல்லாம் தாண்டி முதல்வரின் இல்லம் வந்த வரலாறு தமிழகத்துக்கு உண்டு. பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கே வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் கோரிக்கை மனுவையே பெற்றுக்கொண்டு போனார். அப்படிப்பட்ட மோடி, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எட்டிக்கூட பார்க்கவில்லை.  இப்போது மோடியைத் தேடிப் போய்ப் பார்க்கிறார்கள் ஜெயலலிதாவின் சிஷ்யர்கள். ஜெயலலிதா மரணத்தை தி.மு.க பயன்படுத்திக் கொண்டதோ இல்லையோ, பி.ஜே.பி சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியாவில் பி.ஜே.பி கால் பதிக்க முடியாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இங்கே கால் ஊன்றுவதற்கான வேலைகளைப் பின்னணியில் இருந்து செய்து கொண்டிருக்கிறது பி.ஜே.பி. அதற்காக அ.தி.மு.க-வைப் பயன்படுத்தி வருகிறது.’’

‘‘ம்...’’

‘‘மத்திய அரசு தனது அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தி, அ.தி.மு.க-வைப் பணிய வைத்துக் கொண்டிருக்கிறது. வருமானவரித் துறை ரெய்டு அதில் ஓர் அங்கம். பி.ஜே.பி-யின் முதல் அஜென்டா, ஜனாதிபதி தேர்தல். அதில் அ.தி.மு.க-வின் ஓட்டுகளை அறுவடை செய்துவிட நினைக்கிறார்கள். ‘ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளைப் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளையும் மோடி மிரட்டுகிறார்’ எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். பி.ஜே.பி-யோடு கூட்டணி என அவசரமாக அறிவித்து, பன்னீர் அணியின் பூனைக்குட்டி வெளியே வந்தது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய பிளான் ஒன்றுடன் களமிறங்குகிறது பி.ஜே.பி. ‘இனி உங்கள் சின்னம் தாமரை’ என்ற முழக்கம் அப்போது கேட்கும். அதாவது, ‘இனி உங்கள் சின்னம் தாமரை’ என்று எடப்பாடியையும் பன்னீரையும் சொல்ல வைப்பதற்கான முயற்சிகள்தான் இப்போது நடக்கின்றன.”

‘‘எப்படி?”

‘‘கடந்த சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. தனித்துப் போட்டியிட்டது. அப்போது அந்த கட்சியின் தாமரை சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள், வெறும் 2.8 சதவிகிதம். தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், பி.ஜே.பி-யின் செல்வாக்கு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அதனால், இரட்டை இலையை முடக்கி, தாமரையை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் என்பது பிளான். இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதை எந்த அ.தி.மு.க தொண்டராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அந்த வேலையை, பன்னீர் அணி செய்தது. ‘தங்களுக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது’ என்பதைக் காட்ட, தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்து, இரட்டை இலையை முடக்க பன்னீர் அணி முயன்றது. அதில் வெற்றியும் கிடைத்தது. இரட்டை இலை முடக்கம், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது என இரட்டை இலையைச் சுற்றியே வலை பின்னப்பட்டிருந்தது கவனிக்க வேண்டிய விஷயம். இரட்டை இலைச் சின்னம்அடுத்த உள்ளாட்சித் தேர்தலிலும்,2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்காது என்பதுதான் இப்போதைய நிலை.’’

‘‘ஏன்?”

‘‘இரண்டு அணிகளும் ஒன்றாகச் சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். இப்படி சின்னத்தை இழந்து நிற்கிற அ.தி.மு.க, எப்படித் தேர்தலை எதிர்கொள்ள முடியும்? ‘தெரிந்த சின்னம் இருந்தால் மட்டுமே அ.தி.மு.க என்கிற கட்சி காப்பாற்றப்படும்’ என்கிற நிலையை செயற்கையாக உருவாக்குவார்கள். ‘இரட்டை இலைச் சின்னம் இல்லாததால், சுயேச்சை சின்னத்தில் நிற்பதைவிட, எல்லோருக்கும் தெரிந்த சின்னமான தாமரை சின்னத்தை இரவலாகப் பெற்று நிற்கிறோம்’ என்கிற அறிவிப்பை இரண்டு அணிகளில், ஏதாவது ஒரு அணி அறிவிக்கும். அதாவது பி.ஜே.பி-யின் பிளானை அ.தி.மு.க வாயால் சொல்ல வைப்பார்கள். ஜெயலலிதாவின் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற முழக்கத்தை ஞாபகப்படுத்தி, ‘தமிழகம் வளர்ச்சி பெற அ.தி.மு.க நிலைத்து நிற்க வேண்டும். அதற்காகத்தான் தாமரையில் தடம் பதிக்கிறோம். இது தற்காலிக ஏற்பாடுதான்’ என ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லுவார்கள்.’’

‘‘தேர்தல் சின்னங்கள் தொடர்பான விதிமுறைகள்படி, ஒரு கட்சியின் சின்னத்தை இன்னொரு கட்சிக்கு இரவலாகத் தர முடியாதே?’’

‘‘உண்மைதான். ஆனால் தேர்தல் கமிஷனை ஏமாற்றிவிட்டு சின்னங்களை இரவல் கொடுத்த வரலாறுகள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளில் இடம்பெறும் சிறிய கட்சிகள், உதயசூரியன் மற்றும் இரட்டை இலைச் சின்னங்களில் நிற்பார்கள். முஸ்லிம் லீக் கட்சி பல முறை தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறது. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில்கூட சரத்குமார் கட்சி இரட்டை இலை சின்னத்தில்தான் இரண்டு தொகுதிகளில் வென்றது. இப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு என அனைவருமே இரட்டை இலைச் சின்னத்தில் வென்று எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்கள். அதாவது தங்கள் உண்மையான கட்சியைச் சொல்லிவிட்டு, வேட்புமனுவோடு இரட்டை இலைச் சின்னத்துக்கான ஃபார்ம் பி அத்தாட்சிக் கடிதத்தை அ.தி.மு.க-விடம் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இவை எல்லாமே அப்பட்டமாக நடப்பவைதான். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மோசடிக்கு, இதுவரையில் எந்த நடவடிக்கையையும் தேர்தல் கமிஷன் எடுத்ததில்லை. இந்தச் சூத்திரத்தை வைத்துதான் தாமரை சின்னத்தை இரவல் கொடுத்து, பி.ஜே.பி-யின் கணக்கைக் காட்ட நினைக்கிறார்கள். அதன் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி, தன் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறது.’’

‘‘இதனால் அ.தி.மு.க-வுக்கு என்ன லாபம்?’’

‘‘வேட்பாளர்கள் அ.தி.மு.க-வினராகத்தான் இருப்பார்கள். அதில் கொஞ்சம் பேர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களும் கலந்திருக்கலாம். சின்னத்தை மட்டும் இரவல் வாங்க மாட்டார்கள். பி.ஜே.பி-யோடு கூட்டணி எனச் சொல்லிக் கொண்டு அந்தக் கட்சிக்கு சில தொகுதிகளை அ.தி.மு.க விட்டுத் தரும். தேசிய அளவில் பார்க்கும்போது, பி.ஜே.பி இங்கே அபார வளர்ச்சி பெற்றிருப்பதாகக் கணக்கு இருக்கும். திரைமறைவில் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment