Friday, May 12, 2017

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

தாமரை மலரை கையில் ஏந்தியபடி என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘புரிகிறது. கமலாலயம் பக்கம் போய்விட்டு வருகிறீரோ? ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் வேகமெடுத்த பி.ஜே.பி-யின் ஓட்டம் கொஞ்சம் ஓய்ந்ததுபோல் தெரிகிறதே” என்றோம்.  

“பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டதை வைத்து அப்படி நினைக்கவேண்டாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர் சென்னை வருகிறார் என்றதுமே, புகார் கடிதங்கள் டெல்லிக்குப் பறந்தன. தமிழக பி.ஜே.பி பற்றி எதையெல்லாம் அவர் நேரில் வந்து அறிந்துகொள்ளத் திட்டமிட்டாரோ, அவை புகார் கடிதங்களின் வழியாக டெல்லிக்கே சென்று சேர்ந்துவிட்டன. கோஷ்டி சண்டை உச்சகட்டத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட அமித் ஷா, சென்னை விசிட்டை ரத்து செய்துவிட்டு, ‘கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்’ என தகவல் மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.”

‘அ.தி.மு.க உள் விவகாரங்களில் பி.ஜே.பி தலையிடவில்லை’ என்பதை கொஞ்சமாவது நம்ப வைக்கத்தான் அமித் ஷா வருகை ரத்தானதாம். எப்போது வருவார் என்பது இதுவரை முடிவாகவில்லை.” 

‘‘பி.ஜே.பி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதா?’’

‘‘அதுதான் இல்லை. ஓ.பி.எஸ் அணியில் காணப்படும் உற்சாகத்தைப் பாருங்கள். அதில் ஒளிந்திருக்கிறது, பி.ஜே.பி-யின் வேகம். தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்த பி.ஜே.பி-க்கு ஜெயலலிதாவின் மரணமும், கருணாநிதியின் உடல் தளர்வும் வழி போட்டுக் கொடுத்தன. அ.தி.மு.க-வில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியை உடைத்தார். அதன்பிறகும் தினகரன் பிடிவாதமாக கட்சியைத் தன் பிடிக்குள் வைத்திருந்தார். இப்போது அவரும் திஹார் சிறையில். இடையில் ரஜினிகாந்த்தை வைத்து தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்தத் துடித்த பி.ஜே.பி, அவருடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பார்த்தது. ஆனால், வழக்கம்போல் ரஜினி நழுவிக் கொண்டார். கடைசியில் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க-வை உடைக்கப் பயன்பட்ட பன்னீரை வைத்தே பி.ஜே.பி-யை வளர்க்கவும் முனைந்துள்ளது.’’

‘‘என்ன திட்டம்?”

‘‘தற்போது ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டு ஆதரவு திரட்டும் பன்னீர் அணியினரின் உற்சாகத்தைப் பார்த்தால் தெரியும். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைந்திருந்தால் கூட அவர்கள் இவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மிதமிஞ்சிய உற்சாகத்தில் மிதக்கின்றனர். சுற்றுப்பயணமும் ஊழியர் கூட்டமும் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. இறுதியாக அக்டோபர் மாதம் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரை சுற்றுப்பயணத் திட்டம் தயார். ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்றத் தேர்தல் வரும்’ என பன்னீர் சொல்வதைப் பாருங்கள். தங்கள் அணியைப் பலப்படுத்தி, பி.ஜே.பி-யோடு இணையும் முடிவுக்கு வந்துள்ளனர் பன்னீர் அணியினர்.’’ 

‘‘அப்படியானால் இனி அ.தி.மு.க இணைப்புக்கு வாய்ப்பில்லையா?’’

‘‘இரண்டு அணிகளின் இணைப்புக்கு இனி வாய்ப்பே இல்லை. பன்னீர்செல்வமே இணைய நினைத்தாலும், மற்றவர்கள் விட மாட்டார்கள். குறிப்பாக கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விசுவநாதன் ஆகியோர் ஒப்புக்கொள்ளவில்லை. தனிப்பட்ட வெறுப்புகளே காரணம். ஓ.பி.எஸ் அணியில் உள்ள செம்மலைக்கும் எடப்பாடி அணியில் உள்ள தம்பிதுரைக்கும் ஜென்மப் பகை. இதேபோல ஓ.பி.எஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமிக்கும் எடப்பாடி அணியில் உள்ள வேலுமணிக்கும் ஏழாம் பொருத்தம். இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் சிலருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். மாஃபா பாண்டியராஜனும், ஓ.பி.எஸ்ஸும் மட்டும் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டு கரையேறிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அதனால், அவர்கள் இணைப்பை விரும்பவில்லை. அதோடு சசிகலா குடும்பத்தில் ஒருவரை முடக்கினால், மற்றொருவர் முளைத்து வருகிறார். அந்த அணியில் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் திவாகரன் பின்னால் இருப்பதால் பன்னீர் அணியின் நிபந்தனைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.’’

‘‘பன்னீர் என்னதான் கேட்கிறார்?’’

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

‘‘பி.ஜே.பி என்ன நிபந்தனை வைக்கச் சொல்கிறதோ, அதைத்தான் பன்னீர் வைக்கிறார். அவருக்குத் தனியாக எந்தக் கருத்தும் கிடையாது. பன்னீர் மூலம் பி.ஜே.பி வைக்கும் முக்கியமான நிபந்தனை, பொதுச்செயலாளர் பதவிதான். அதை விட்டுத்தர சசிகலா குடும்பம் சம்மதிக்காது. மீறி அதை எடப்பாடி அணி பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்தால், எடப்பாடியின் ஆட்சி நீடிக்காது. அதனால், எடப்பாடியும் அடக்கி வாசிக்கிறார். எனவே, பன்னீரைப் பலப்படுத்தி தங்கள் நீரோட்டத்தில் கரைத்துக்கொள்ள பி.ஜே.பி நினைக்கிறது.’’ 

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்ததில் ஏதேனும் தகவல் உள்ளதா?’’ 

‘‘டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் முகம் கொடுத்தே பேசவில்லை. அதுபோல தனியாகச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை. மே 4-ம் தேதி மின் துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி சென்றார் அமைச்சர் தங்கமணி. அப்போது பிரதமரை, தங்கமணி சந்திக்க நேரம் கேட்டதும் உடனே கிடைத்தது. சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றது. மரியாதை நிமித்தமான சந்திப்புதான் எனச் சொல்லப்பட்டாலும் அங்கே அரசியல்தான் பேசப்பட்டதாம். தங்கமணி டெல்லியில் இருந்த நேரத்தில்தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும் திஹார் சிறையில் இருக்கும் தினகரனைச் சந்தித்தார்கள். தங்கமணி அங்கு தினகரன் பற்றி பேச்சே எடுக்கவில்லை.’’

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

‘‘கொடநாட்டில் என்ன நடக்கிறது?’’ 

‘‘கொடநாடு கொலைக்கான பின்னணி பற்றி பன்னீர் அணியினர் முழங்கப் போகிறார்களாம். சசிகலாவுக்கு நெருக்கமான மூவரை இந்த வழக்கில் இன்னும் விசாரிக்காதது குறித்து அவர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், மர வியாபாரி சஜீவன் ஆகியோரோடு மூன்றாவது நபராக ரஜினி என்ற பெண்ணையும் விசாரணை வளையத்தில் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.’’

‘‘யார் இந்த ரஜினி?”

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

“இந்த ரஜினியைப் பற்றி ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். கார்டனில் அவர் அதிகாரம் மையமாக செயல்பட்டு வந்தார். பல ஆண்டுகளாக கொடநாடு, சிறுதாவூர், போயஸ் கார்டன் பங்களாக்களில் தோட்டம் அமைக்கும் பணியை மேற்கொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தென் மாவட்டத் தொகுதிகளில் பலருக்கு சசிகலா மூலம் சீட் வாங்கி கொடுத்தவர். கொடநாடு பங்களாவில் அடிக்கடி தென்படும் நபராக ரஜினியும், அவருடைய கணவர் ரவிச்சந்திரனும் இருந்துள்ளார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சமீபத்தில் இந்தத் தம்பதி ஏகப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றதாக சொல்கிறார்கள். இவை ஜெயலலிதாவின் சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களாக இருக்குமோ எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள் பன்னீர் அணியினர். இவர்கள் மூலம் சில இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தகவல். கொடநாட்டில் ஆவணங்கள் திருடு போயிருக்கலாம் எனச் சந்தேகம் கிளம்பியிருக்கும் நிலையில், இவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும் என்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இளைய பிரமுகர் ஒருவருக்கும் வருமானவரித்துறை குறி வைத்துள்ளது. சமீபத்தில் சென்னையில் ஒரு சிட்பண்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டே இந்தப் பிரமுகரை குறி வைத்து நடத்தப்பட்டதுதானாம். பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை,இந்த நிறுவனத்தின்மூலம்தான் இந்த இளம் பிரமுகர் வெள்ளையாக்கி உள்ளார். இந்தத் தகவல் வருமான வரித்துறைக்குத் தெரிந்துதான் அங்கு அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தச் சூழலில், மத்திய அரசை டென்ஷனாக்கிய நிகழ்வு தமிழகத்தில் சத்தமில்லாமல் நடந்தது. தினகரன் கைது சம்பவத்தைக் கண்டித்து, மதுரையை அடுத்த மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்த கூட்டம்தான்டென்ஷனுக்குக் காரணம். அந்த கூட்டத்தை பார்த்து மத்திய உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. உசிலம்பட்டி, பெரியகுளம், நெல்லை என போராட்டங்கள் அடுத்தடுத்து நடக்க ஏற்பாடாகி வருகிறது. கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர்தான் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் எடப்பாடி அரசு எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் மத்திய அரசின் ஆதங்கம்”

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

‘‘கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே... தி.மு.க-வில் என்ன நடக்கிறது?’’

‘‘அ.தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இப்போது தி.மு.க-வுக்குள் நடக்கிறது. இளைஞரணியில் வெள்ளக்கோவில் சாமிநாதனின் பணிகள் வேகமாக இல்லையாம். மாணவரணி மாநிலச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்பாகச் செயல்பட்டாலும், அவரைவிட துடிப்பான இளைஞர் ஒருவரை நியமிப்பதே சரியாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மாணவரணிக்கு அன்பில் மகேஷ் பெயரும், இளைஞரணிக்கு இ.பரந்தாமன் பெயரும் அடிபடுகிறது. ஸ்டாலினிடம் சிறப்பு அனுமதி பெற்று தன்னுடைய பூவிருந்தமல்லி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ‘இளைஞர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் கலந்துரையாடல் நடத்துகிறார் இ.பரந்தாமன். இதெல்லாம் ஸ்டாலினிடம் அவர் மீதான நல்ல பார்வையை உண்டாக்கி இருக்கிறது. இந்த இருவரை தவிர உதயநிதியையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் யோசனையிலும் ஸ்டாலின் இருக்கிறார்.’’

‘‘வைகோ சிறையில் இருக்கும்போதே ம.தி.மு.க ஆண்டுவிழா நடந்து முடிந்திருக்கிறதே?”

‘‘தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, புழல் சிறையில் இருக்கிறார். இந்தநிலையில் மே 6-ம் தேதி,   ம.தி.மு.க-வின் 24-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள் நடத்தினர். கட்சித் தலைமை அலுவலகத்தில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்த குறிப்பேட்டில், ‘அண்ணாவின் லட்சியங்களை வைகோ தலைமையில் வென்றெடுப்போம்’ என்று எழுதினார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. வைகோ சிறைக்குள் இருந்தாலும் வெளியே கட்சி நிர்வாகிகள் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்” என்றபடியே கழுகார் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!

சேகர் ரெட்டி டைரியும் கை மாறிய பொறுப்பும்!

சேகர் ரெட்டி டைரி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. சேகர் ரெட்டியை வைத்து, மேலும் சில அமைச்சர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்த நினைக்கிறது மத்திய அரசு.

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில், சுமார் 300 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. இதில் பல அமைச்சர்கள், அதிகாரிகள் பெயர்கள் இருக்கின்றன. நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளை எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும்தான் கவனித்து வந்தனர். இந்த இரண்டு துறைகள் தொடர்புடைய கான்ட்ராக்ட்டுகள், மணல் குவாரி ஏலம் போன்றவற்றில்தான் கமிஷன்கள் தரப்பட்டதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இந்த இரண்டு துறைகளிலும் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என யார் யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்கிற விவரம் இருக்கிறது.  

சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளைத் தமிழக அரசுக்கு அனுப்பி, இதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர், தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோரின் ஒப்புதல் தேவையாம். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவி காலியாகக் இருக்கிறது. அடுத்து, தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் பதவியை தலைமைச் செயலாளரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்த இந்தப் பொறுப்பு  கடந்த வாரம் திடீரென உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் போயிருக்கிறது. இந்த மாற்றம் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

‘‘சேகர் ரெட்டி டைரி விவகாரத்தை இப்போது தமிழக அரசு அமுக்கி வைக்கலாம். ஆனால், அரசில் குழப்பங்கள் அதிகமாகி ஏதோ ஒன்று நடக்கும்போது, தமிழகத்தின் அதிகார மையமாக கவர்னர் வீற்றிருப்பார். அப்போது எல்லோருக்கும் சிக்கல் வரும்” என்று ராஜ்பவன் தரப்பில் சொல்கிறார்கள்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment