Saturday, May 06, 2017

மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது!

மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது!

‘‘கொடைக்கானல் வரை பயணம் போயிருந்தேன்’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கிவிட்டாரே?” என்றோம். 

‘‘ஆம்! பன்னீர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். இனி இரண்டு அணிகளின் இணைப்பும் இருக்காது என்பதுதான் இன்றைய நிலவரம்!” என்றபடி கழுகார் செய்திகளைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘இனிமேல் தனி ஆவர்த்தனம்தான் என்ற  முடிவுக்கு பன்னீர் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். அ.தி.மு.க இரு அணிகளையும் இணைக்கும் பேச்சு வார்த்தைக்கு இரு அணிகள் சார்பிலும் 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்தனர். அந்தக் குழுக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்னரே, ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும், சசிகலா குடும்பத்தைக் கட்சியை விட்டே நீக்க வேண்டும்’ என்று இரண்டு நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார். ‘இதை ஏற்பதா? வேண்டாமா?’ என்று எடப்பாடி பழனிசாமி யோசனையில் இருந்தபோதே டி.டி.வி.தினகரன், சுற்றி வளைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் பிடி இறுகுவதை உணர்ந்த தினகரன், ‘அ.தி.மு.க-வில் இருந்து ஒதுங்கிவிட்டதாக’ அறிவித்தார். சசிகலா படங்களும் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டன. ஆனால், சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாகக் கட்சியில் இருந்து நீக்குவது, ஜெ. மரணம் தொடர்பான சி.பி.ஐ விசாரணை பற்றியும் முறையான அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வராததால், இணைப்பு பேச்சு வார்த்தை 15 நாள்களுக்கும் மேலாக முடங்கியே கிடக்கிறது. இப்படியே இருந்தால் தனது பெயர் ரிப்பேர் ஆகிவிடும் என்று கவலைப்பட்டவராக கிளம்பிவிட்டார் பன்னீர். மேலும், எடப்பாடியுடன் சேர்ந்தால் தனக்கு இருக்கும் கொஞ்சம் நல்ல பெயரும் கரைந்துவிடும் என்றும் பன்னீர் நினைக்கிறாராம்!”

‘‘இணைப்புக்குத் தடையாக இருந்தது என்னென்ன?”

‘‘வேறு என்ன? முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி மறுக்கிறார். இதுதான் முக்கியமானது. செம்மலை, பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அத்துடன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,  முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகியோருக்கு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார்கள். இதுபற்றிய ரகசியப் பேச்சுவார்த்தைகள் மூன்று கட்டங்களைக் கடந்தும் முன்னேற்றம் இல்லை. இதில் பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி தர சம்மதம் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. கே.பி.முனுசாமிக்கு பதவி தர திவாகரன் தடை போடுவதாகச் சொல்லப்படுகிறது!”

‘‘மறுபடியும் திவாகரனா?”

‘‘எடப்பாடி அணியின் சில நகர்வுகளுக்கு திவாகரன்தான் காரணம் என்கிறார்கள். சசிகலாவே பொதுச்செயலாளராகத் தொடர வேண்டும் என்று திவாகரன் சொல்வதைத்தான் எடப்பாடி ஆட்களும் சொல்கிறார்கள். எடப்பாடி அணி தினகரனுக்கு எதிரான அணி என்று மட்டும்தான் சொல்ல முடியும்!”

‘‘மத்திய அரசு என்ன நினைக்கிறதாம்?”

‘‘பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு அணிகளையும் தங்களுக்கு நெருக்கமானவர்களாக வைத்துக்கொள்ள பி.ஜே.பி நினைக்கிறது. 

ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி அறிவிக்கும் வேட்பாளருக்குத்தான் இந்த இரண்டு அணிகளும் வாக்களிப்பார்கள். ஜூலை 25-ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துவிடும். அதுவரை இவர்களை ஆடவிட்டு அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அதன்பிறகு இந்த ஆட்சியை அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்திச் செயல்படவிடாமல் சில மாதங்கள் முடக்கி வைப்பார்கள் என்றும், அடுத்த 6 மாதங்களில் 356-வது பிரிவைப் பயன்படுத்திக் கலைத்துவிடுவார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்துக்கும் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதுதான் டெல்லி பி.ஜே.பி. தலைமையின் திட்டமாம்!”

‘‘அந்தத் திட்டமிடுதல் இருக்கட்டும். தமிழ்நாட்டுக்கு நிரந்தர கவர்னர் வேண்டாமா? அதற்கான அறிவிப்பு எப்போது?”

‘‘அதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார். தமிழகம் தவிர்த்து வேறு சில மாநிலங்களின் கவர்னர் பதவிகளும் கூடுதல் பொறுப்பாகத்தான் கவனிக்கப்பட்டு வருகிறது. உ.பி தேர்தலை முன்வைத்துதான் கவர்னர் பதவியைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். தமிழகத்தின் கவர்னராக முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ், குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டவர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்த இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்கிறார்கள். தமிழக அரசியல் சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதால், பரத்வாஜ் கையில் கவர்னர் பதவியைக் கொடுக்கும் வாய்ப்பு உள்ளதாம். இந்த மாதம் இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வந்துவிடலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் மகாராஷ்டிராவுக்கு, வேறு கவர்னரை நியமித்துவிட்டு, வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு நிரந்தரமாக நியமிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது!

‘‘ரெய்டு நடவடிக்கைகள் நடந்ததே... அது இன்னும் தொடருமா?”

‘‘எடப்பாடி பழனிசாமியின் பிடியை இன்னும் பலமாக்கிக் கொள்ள பி.ஜே.பி தனது பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. மைன்ஸ்  பிரதர்ஸை கை வைக்கப் போகிறார்களாம்!”

‘‘யார் அவர்கள்?”

‘‘ஒடிஷாவில் இருந்தபடி இரும்புத் தாது சுரங்கம் எடுத்திருக்கும் சகோதரர்கள் அவர்கள். அரசு அனுமதித்த அளவையும் விட கூடுதலாக இரும்புத்தாது எடுத்து விற்பனை செய்கின்றனர். எப்போதாவது சிக்கும்போது அதற்கான அபராதத்தைக் கட்டிவிட்டு, தொழிலைத் தடையில்லாமல் தொடர்கின்றனர். அண்ணன் ஒடிஷாவிலும், தம்பி சேலத்திலும் இருந்தபடி செயல்படுகிறார்கள். பக்கத்து மாநிலப் பதவியில் இருக்கும் கொங்கு மண்டலப் பிரமுகரின் மகனுக்கும் இதில் பங்கு உண்டாம். இந்தத் தரப்புக்கும் எடப்பாடிக்கும் நெருக்கம் இருப்பதாக தரவுகள் சிக்கி இருக்கின்றனவாம். ‘மைன்ஸ் பிரதர்ஸ் யார் யாரிடமெல்லாம் பேசியுள்ளார்கள்’ என்ற மொத்த போன்கால் லிஸ்ட்டும் எடுத்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக வெளியே தெரியாமல் நெருக்குதலைக் கொடுக்கிறார்கள். தங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் இதை அறிந்து கொண்ட பிரதர்ஸ், இந்தத் தகவல்களை எடப்பாடியிடம் பரிமாறியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமான வருமானவரித் துறை ரெய்டு தொடங்கலாம். இதை அறிந்து, டெல்லி லாபியின் துணையோடு அவர்கள் மோடிக்குத் தூது அனுப்பி வருகிறார்களாம்.”

‘‘ஓஹோ!”

‘‘அகில இந்திய பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகைக்கு அரசியல் முக்கியத்துவம் கூடுகிறதே?”

‘‘ஆமாம்! பி.ஜே.பி தொண்டர்களை நேரில் சந்திக்கும் 95 நாள் பயணத்தை ஏப்ரல் 26-ம் தேதியே தொடங்கிவிட்டார் அமித் ஷா. மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காளத்தில் தொடங்கிய அமித் ஷாவின் பயணம், அங்கு இரண்டு நாள்கள் நடைபெற்றன. அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் சென்றார். அதன் தொடர்ச்சியாக மே 10-ம் தேதி சென்னை வருகிறார். 11-ம் தேதியும் சென்னையில்தான் இருக்கிறார். 12-ம் தேதி கோவையில் தொண்டர்களைச் சந்தித்துவிட்டு 13-ம் தேதி புதுச்சேரி செல்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரி சுற்றுப்பயணத்தில் ஒரு சில தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று விருந்து சாப்பிட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அமித் ஷாவின் சுற்றுப்பயண விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோரிடம்தான் சுற்றுப்பயணத்தின் பொறுப்பு முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு தமிழக பி.ஜே.பி-யின் தலைமை மாறும் என்கிறார்கள்.’’

“கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது?” 

‘‘இன்னும் உண்மை முழுமையாக வெளிவர வில்லை! ஆனால் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. கொள்ளைக் கும்பல் தப்பிப்போகும்போது போலீஸ் செக்போஸ்டில் கார் சிக்கியது. அவர்களை விடுவித்தது முன்னாள் மந்திரிகள் இருவர் என்று தெரியவந்துள்ளது. போலீஸில் பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவரது செல்போன் எண்ணிலிருந்து, குறிப்பிட்ட இரண்டு முன்னாள்களுக்கு அழைப்பு சென்றுள்ளதாம். இதையடுத்து, செக்போஸ்டில் கொள்ளையரின் காரை விடுவித்ததாகத் தெரிகிறது. ஆனால், ‘அந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கும் அந்த முன்னாள்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தெரிந்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்’ என்கிறார்கள் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள். சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான நீலகிரியைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவனுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் செல்போனில் சம்பவம் நடந்த நேரத்தில் பேசியிருப்பதும் போலீஸாருக்கு சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. சம்பவம் நடப்பதற்கு முன்பே, துபாய் சென்றிருந்த சஜீவன், தற்போது அவசரமாக ஊருக்குத் திரும்பிவிட்டார் ஆனால், தனக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி வருகிறார். இவரை இன்னும் போலீஸார் நெருங்கவில்லை. பிடிபட்டவர்கள் சொல்லிவரும் வாக்குமூலங்களின் அடிப்படையில் எந்த நேரமும் சஜீவனை போலீஸார் சுற்றி வளைக்கலாம்.”

மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது!

‘‘சஜீவன் என்ன சொல்கிறார்?”

‘‘சஜீவன் 3-ம் தேதி கோவை திரும்பினார். ‘நான் துபாயில் இருந்தே போலீஸ் அதிகாரிகளிடம் போனில் பேசினேன். என் மீதான சந்தேகங்களில் உண்மை இல்லை. அம்மா இருக்கும்போதுதான் கொடநாடு போவேன். சின்னம்மாவிடம்தான் பேசுவேன். டிரைவர் கனகராஜ் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் ஒருமுறை போனில் பேசினான். அவ்வளவுதான். அதன்பின் அவனை நான் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. சின்னம்மாதான் எனக்கு எல்லாமே. உயிர் இருக்கும்வரை அவர்களுக்கு விசுவாசமாக இருப்பேன். எனக்குத் தொழிலிலும் அரசியலிலும் கொஞ்சம் எதிர்ப்புகள் உண்டு. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின்போது நீலகிரி மாவட்டத்துக்கு நான் முக்கிய பொறுப்பில் இருந்து வேலை பார்த்தேன். அப்போது துரோகம் செய்தவர்கள் மீது அம்மா நடவடிக்கை எடுத்தார்கள். அவர்கள்தான் என்மீது அவதூறு பரப்புகிறார்கள்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொள்ளை வழக்கு புரியாத புதிராகவே உள்ளது.’’

‘‘வேறு என்ன சொல்கிறார்கள்?”

‘‘சில பினாமிகளிடம் ஏராளமான வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கி, அவற்றையெல்லாம் மூன்று சூட்கேஸ்களில் வைத்து கொடநாடு எஸ்டேட் வீட்டின் ரகசிய அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்களாம். ஜெயலலிதா மரணம், சசிகலா மற்றும் தினகரன் சிறைச்சாலைக்குப் போனபிறகு அந்த வெற்றுத்தாள்களைக் கைப்பற்றத் திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பார்களோ என்று போலீஸ் சந்தேகிக்கிறது. கொடநாட்டை உள்ளடக்கிய ஏரியாக்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலீஸார் ஒரு ரகசிய லிஸ்ட்டை வைத்துக்கொண்டு விசாரித்து வருகிறார்கள். கடந்த 6 வருடங்களில் யார் பெயரில் எஸ்டேட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவை வேறு பெயருக்கு மாற்றப்பட்டதா? என்றெல்லாம் குறிப்பெடுத்து வருகிறார்கள். அடுத்தகட்டமாக, சந்தேக வட்டத்தில் சிக்கும் எஸ்டேட் உரிமையாளர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்” என்று சொன்ன கழுகார், சட்டென பறந்தார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment