Friday, May 12, 2017

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

அடுத்த அவதாரம்!

நடிகர்கள் திடீரென இயக்குநர் அவதாரம் எடுப்பதும், இயக்குநர்கள் அதிரடியாக நடிகர் ஆவதும், பேசாத சினிமா காலத்தில் இருந்து பேசப்பட்டுவரும் சங்கதிதான். இப்போது இயக்குநர் அவதாரம் எடுக்க இருப்பவர், விஜய்சேதுபதி. அதற்கான ஆயத்தமாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ இயக்குநர் பிஜு விஸ்வநாதன் இயக்கவிருக்கும் படத்தைத் தயாரிப்பதோடு, படத்தின் கதை - வசனப் பொறுப்பையும் கவனிக்கிறார் விஜய்சேதுபதி. ‘‘அடுத்தது இயக்கம்தான்’’ என்கிறது விஜய்சேதுபதியின் நட்பு வட்டம்.

டி.வி-க்கு போன கார்த்திகா!

‘பாகுபலி’க்குக் கதை எழுதிய ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், வரலாற்றுப் பின்னணியில் இந்தி சீரியல் ஒன்று எழுதிவருகிறார். ‘பாகுபலி’யில் அனுஷ்காவின் கேரக்டரான தேவசேனாதான் இதில் மெயின் ரோல். அந்தக் கேரக்டரில் நடிக்க இருப்பவர், ராதாவின் மகள் கார்த்திகா. பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டார் கார்த்திகா.

ரூபம்... பம்பம்!

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னையால் கிடப்பில் கிடந்த கமலின் ‘விஸ்வரூபம் 2’ உயிர்பெற்றுவிட்டது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. அந்தக் காட்சிகளுக்கான எடிட்டிங், டப்பிங் வேலைகளும்கூட முடிந்துவிட்டன. மீதமுள்ள காட்சிகளை, சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் அலுவலர் பயிற்சிக் கல்லூரியில், சிறப்பு அனுமதியுடன் ஷூட் செய்ய இருக்கிறது படக்குழு. இந்த வருட இறுதிக்குள் உறுதியாக ‘விஸ்வரூபம் 2’ வந்துவிடும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

இசை ரகசியம்?

க்ளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு ஆரம்பிப்பதுதான் கெளதம் வாசுதேவ் மேனன் ஸ்டைல். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வுக்கான தனுஷ், மேகா ஆகாஷுக்கான காட்சிகளின் படப்பிடிப்பு ஓவர். இப்போது க்ளைமாக்ஸுக்கான காட்சியைத் தயார் செய்துவிட்டார் கெளதம். அதில் முக்கிய ரோலில் நடிக்க சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். க்ளைமாக்ஸ் முடிவான நிலையிலும், படத்தின் இசையமைப்பாளர் யார் எனச் சொல்லாமல் மெளனம் காக்கிறார் மேனன்.

நடிப்பு டீச்சர் மீனா!

மலையாளத்தில் ஹிட்டானால் அப்படியே தமிழில் ரீமேக் செய்துவிடுவார் இயக்குநர் சித்திக். அதே ஃபார்முலாவில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழ் ரீமேக்கின் ஷூட்டிங்கிலும் பாதியை முடித்துவிட்டார். மம்மூட்டி, நயன்தாரா கேரக்டர்களில் தமிழில் அரவிந்த்சாமியும், அமலாபாலும் நடிக்கிறார்கள். அதுபோல அனிகா கேரக்டரில், மீனாவின் மகளான ‘தெறி’ பேபி நைனிகா நடித்துவருகிறார். மகள் கூடவே வரும் மீனா, திருப்தியாக இல்லாவிட்டால் ஸ்பாட்டிலேயே நடிக்கவும் சொல்லிக் கொடுக்கிறார். ஷூட்டிங்கில் நைனிகா நடிக்காமல் அடம் பிடித்தால், அமலாபால் வரை ஒட்டுமொத்த யூனிட்டும் விளையாட்டுக் காட்டி சிரிக்க வைக்கிறதாம். 

ரஜினிக்கு சாங் ரெடி!

‘கபாலி’யைத் தொடர்ந்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம், இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று பலரும் சொல்லிவந்த நிலையில், ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ என தன்னுடன் பயணித்த சந்தோஷ் நாராயணன்தான் இதிலும் இசை என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஞ்சித். சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்துக்கான டம்மி பாடல்களையும் தயார் செய்துவருகிறாராம். ஷூட்டிங் செல்லும்போது கையோடு பாடல்களையும் தயார் நிலையில் வைத்திருக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் ரஞ்சித்.

மியாவ் பதில்

‘‘நடிகர் உதயநிதி அரசியல் படத்தில் நடிப்பதும், காமெடியன் சூரி அதில் வில்லனாக நடிப்பதும் சரியாக வருமா?’’

‘‘இரு கட்சிகள் பிளவுபடுவதும், நடப்பு அரசியலை எள்ளி நகையாடுவதும்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் ஒன்லைன். அரசியலை காமெடி அதகளத்துடன் சொல்கிறது, எழில் இயக்கும் அந்தப் படம். சூரிக்கு, படத்தில் நெகட்டிவ் ரோல். இப்படியான படங்களுக்கு எப்போதும் ஒரு மினிமம் கியாரன்டி உண்டு என்கிறது படக்குழு. நிஜமாகவே உதயநிதி அரசியலுக்கு வருவாரா என்று கேட்டால், ‘‘நிச்சயம் வருவார். அரசியலுக்கு வருவதற்கான பல திட்டங்களுடன் இருக்கிறார் உதயநிதி. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியின் அரசியல் உதயம் ஆரம்பமாகும்’’ என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment