‘நீட்’ தேர்வு சர்ச்சையும், ஐ.டி துறை ஆட்குறைப்பும், தமிழக கல்வித்துறையில் தலைகீழ் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக செங்கோட்டையனும், செயலாளராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பிறகு, துறை சார்ந்து பல்வேறு புதுமை - புரட்சிகளைச் செய்துவருகின்றனர். ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மேல் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வகுப்புகளை மாவட்டம்தோறும் முதல்முறையாக நடத்தினர். அதோடு நீட் தேர்வுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்படி கல்வித் துறையில் தினம் தினம் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
ரேங்க் முறை ஒழிப்பு!
ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இந்த ஆண்டு கிரேடு முறையைப் பள்ளிக் கல்வித்துறை புதிதாகக் கொண்டுவந்துள்ளது. ‘‘மதிப்பெண் அடிப்படையில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என இடங்களை அறிவிக்கும்போது, ஒரு மதிப்பெண்ணில் அந்த இடத்தைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, கிரேடு முறையைக் கொண்டு வந்துள்ளோம்” என்றார் அமைச்சர் செங்கோட்டையன். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், ‘‘கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்துதல், வினவுதல், திறன் அடைதல், புதியன படைத்தல் என்ற பல்வேறு நிலைகளில் நடைபெறும் அழகிய செயல்பாடு. இதில், எழுத்துபூர்வமான தேர்வின் மதிப்பெண்களே அதீத முக்கியத்துவம் பெற்று, ஒரு சில மாணவர்களே போற்றப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். எனவேதான், இந்த நடைமுறை” என்றார்.
இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு முடிவுக்குப் பிறகு அதிக அளவில் கொண்டாட்டங்களும், ஆர்ப்பரிப்புகளும் இல்லை. மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலைப் பள்ளிக் கல்வித்துறை அறிவிக்காததால், ஒரு சில மாணவர்கள் மட்டும் சாதனை புரிந்த ஹீரோக்கள் போல கொண்டாடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘எங்கள் பள்ளி மாணவர்கள்தான் மாநில அளவில்-மாவட்ட அளவில் முன்னணி இடங்களைப் பிடித்தனர்’ என்று பள்ளிகள், தங்கள் விளம்பரங்களில் தண்டோரா போடுவது தவிர்க்கப்பட்டது. அது மட்டுமில்லை, ‘தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு குறைந்துள்ளது’ எனச் சொல்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
இலவச கட்டாயக் கல்வி!
மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தில், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகக் கல்வி பயில வகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் ஏழை மாணவர்கள், கல்விக் கட்டணம் ஏதுமின்றி 8-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி பயில, 25 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தைப் பெரும்பாலான பள்ளிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்தக் குறையை இந்த ஆண்டு மாற்ற முடிவு செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. மாநிலம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற 9 ஆயிரம் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி) உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கு இலவசமாக மாணவர்களைச் சேர்க்க உத்தரவு போடப்பட்டு,
www.dge.tn.gov.in
என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயோமெட்ரிக் வருகைப் பதிவு!
தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை பயோமெட்ரிக் முறைக்கு (கைவிரல் ரேகை பதிவு) மாறி வருகின்றனர். இந்த பயோமெட்ரிக் முறையை அரசு பள்ளிகளுக்கும் கொண்டு வர கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிக்கு வராமலும் தங்களுக்குப் பதில் வேறு ஆசிரியர்களைப் பாடம் எடுக்க அனுப்பியும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் இனி மாட்டிக்கொள்வார்கள். மாணவர்களின் வருகை விவரம் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். இது, பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும்.
நன்னெறிக் கல்வி!
‘திருக்குறள்’ அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு 26-04-2016 அன்று, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதுகுறித்து அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டில் இருந்து இந்த நன்னெறிக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகள்!
சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே, வங்கிப் பணி என எல்லாப் போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களைத் தயார்படுத்த, தமிழகம் முழுவதும் தனியார் போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தரமற்ற மையங்கள்கூட பெரும் கட்டணத்தைக் கொள்ளை போல் வசூலிக்கின்றன. இதற்கு முடிவுகட்ட, அரசு நூலகங்களிலேயே தரமான போட்டித் தேர்வு குறித்த நூல்களை வாங்கி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி பாடப் புத்தகம்!
1984-ம் ஆண்டு வரை கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தங்களை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டு வந்தது. காலப்போக்கில், அவை மறுபதிப்பு செய்யப்படாமல், அப்படியே குடோனில் பழைய புத்தகங்களுக்கு இடையே கிடந்தன. அவற்றைக் கண்டெடுத்து, இப்போதைய தேவைக்கு ஏற்றபடி புதுப்பித்து வெளியிடும் வேலைகளில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்!
ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், பாதுகாவலர்கள் என பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை முழுமையாக நிரப்பவும் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) செயலாளராக உதயசந்திரன் முன்பு இருந்தபோதுதான், அரசின் துறைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்க இருக்கும் பணியாளர்களுக்கான தேர்வுப் பட்டியல் (Annual planner) டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதே நடைமுறை இப்போது பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்தந்தத் தேர்வுகளுக்குத் தயாராவோர் அதற்கு ஏற்றபடி திட்டமிட்டுப் படிக்க முடியும்.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை புதுப்பாதையில் பயணிக்கிறது. தொடர்ந்து பயணிக்க வேண்டும்..!
உயிர்பெறும் அண்ணா நூலகம்!
ஏழு வருடங்களாக முடங்கிக் கிடந்த, சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பராமரிப்புக்காக எட்டு கோடி ரூபாயைப் பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு ‘Orientation for Competitive Exam Aspirants’ எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வனப் பணி போன்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி வல்லுநர்கள் பங்கேற்று, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர். ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பெயரில் ஆளுமைகளின் சந்திப்பு வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. நெல்லை ஜெயந்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார், மருத்துவர் கு.சிவராமன், சு.வெங்கடேசன் என பலரும் பங்கேற்று அனுபவப் பகிர்தலைச் செய்கின்றனர். கோடை விடுமுறை என்பதால், தினமும் காலை 11 மணிக்குக் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அறிவுத் தேடலை நோக்கி தமிழகம் அடியெடுத்து வைக்கிறது.
No comments:
Post a comment