“பணியில் தொடர வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் கொடு. இல்லையென்றால், அழித்துவிடுவேன்” என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டியதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ மீனாட்சி பரபரப்பு குற்றம் சாட்டினார். சரோஜாவோ எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையில் ‘சமூகநலத் துறையே சமூக விரோதிகளின் கூடாரமாகியிருக்கிறது’ என புது பூகம்பம் கிளம்பியிருக்கிறது. அதோடு ‘‘ராஜ மீனாட்சி மீதும் முறைகேடு செய்ததாக புகார் உள்ளது’’ என அதிரடி கிளம்பியிருக்கிறது.
உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ராஜ மீனாட்சியை, கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி ஒப்பந்த அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு. மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் கண்காணிப்பு, குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு அது.
சரோஜா மீது பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கும் ராஜ மீனாட்சியிடம் பேசினோம். “அமைச்சர் சரோஜா, தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லியிருந்தார். அதனால் அவருடைய இல்லத்துக்கு, சகோதரியுடன் சென்றேன். ஏற்கெனவே சென்னைக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். அதை நினைவில் வைத்திருந்த அமைச்சர், ‘இந்த வேலைக்கு 30 லட்சம் ரூபாய் தர பலரும் தயாராக உள்ளனர். ஆனால், நீ இடமாற்றம் கேட்கிறாய்; அனைத்தையும் காசில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய். 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் இந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பாய்; இல்லையென்றால், மூட்டையைக் கட்டிக்கிட்டு ஊர் போய்ச் சேர். ஓசியிலேயே இருந்துவிட்டுப் போய்விடலாம் என்று பார்க்கிறாயா? இங்கே நடந்த விஷயங்களை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.
இது ஒருபுறமிருக்க, என்னுடைய இடமாற்றத்துக்காக ஏற்கெனவே அமைச்சரை எனது தந்தை சந்தித்துப் பேசினார். அவரிடமும் அமைச்சர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வேறு வழியில்லாமல் என் தந்தை 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அமைச்சர் மீது புகார் தெரிவிக்க முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றேன். ஆனால், முடியவில்லை. அமைச்சர் தங்கமணியிடம் புகார் கொடுத்தேன். அமைச்சர் சரோஜா லஞ்சம் பெற்றது தொடர்பான ஆடியோ உட்பட அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இதனை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வேன்’’ என்றார்.
‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநரும், குழந்தை உரிமை செயற்பாட்டாளருமான ‘பாடம்’ நாராயணன், ‘‘ஒட்டுமொத்தமாக சமூகநலத் துறையின் செயல்பாடு சீர்கெட்டுள்ளது” என்கிறார். ‘‘தகுதியில்லாத ஆட்கள் நியமனம், நிர்வாகச் சீர்கேடு, லஞ்சம் போன்ற கறையான்கள் அந்தத் துறையை அரிக்கத் தொடங்கிவிட்டது.
32 மாவட்டங்களிலும் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வழக்கு தொடர்ந்திருந்தோம். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலரும் சரியான முறையில் செயல்படவில்லை என்ற புகார் உள்ளது. ராஜ மீனாட்சி மீதும் புகார் சொல்கின்றனர். இந்த விவகாரத்தில், அமைச்சர், ராஜ மீனாட்சி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்புக்காக எல்லா மாவட்டங்களிலும் ‘குழந்தைகள் குழுமம்’ கொண்டு வரவேண்டும். பலமுறை எங்களுடைய அமைப்பு இதற்காகக் குரல் கொடுத்த பின்னர், இதற்கான முயற்சி தொடங்கியது. ஆனால், பணத்தை வைத்து பதவியை நிரப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். மாநில மகளிர் ஆணையத்துக்கும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் தகுதியில்லாத ஆட்களை நியமனம் செய்கின்றனர். எல்லா நியமனங்களுக்கும் பணமே பிரதானமாக இருக்கிறது. சமூகநலத் துறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது’’ என்றார் நாராயணன் ஆதங்கத்தோடு.
இதுதொடர்பாக அமைச்சர் சரோஜாவைப் பலமுறை தொடர்புகொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒன்றுதிரண்ட அமைச்சர்கள், ‘‘உங்கள்மீது பலரும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர். எனவே, எதுவும் பேசாமல் அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாக இருங்கள்’’ என்று சரோஜாவுக்கு அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய துறையின் அமைச்சர், ஒரு பெண் அலுவலரை மிரட்டியிருப்பது அரசின் மீதான நம்பிக்கையைச் சிதைத்திருக்கிறது.
No comments:
Post a comment