Wednesday, May 03, 2017

மொகல்லா கிளினிக்... இது மக்கள் மருத்துவமனை!

மொகல்லா கிளினிக்... இது மக்கள் மருத்துவமனை!

டெல்லி மாநில உள்ளாட்சித்    தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்வியை மற்ற கட்சிகள் மட்டுமல்ல... சில ஊடகங்களும் கொண்டாடி வருகின்றன. ‘ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இனி அவ்வளவுதான்’ என ஆரூடம் சொல்கிறார்கள். நாம் இங்கு அரசியல் பேச வேண்டியதில்லை. ஆனால், டெல்லி முதல்வர் ஆனதும் கெஜ்ரிவால் செய்த இரண்டு விஷயங்கள், இந்திய மருத்துவச் சேவையில் முக்கியமான சம்பவங்களாக அமைந்தன.

முதல்  விஷயம்,  கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொடர்பானது. 1980-களில்தான் இந்தியாவில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் வேர்விட ஆரம்பித்தன. தலைநகர் டெல்லியில் பெரும்பாலான நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனியார் மருத்துவமனைகள் துவங்குவது சிரமமாக இருந்தது. எனவே, பலரும் அரசிடமே நிலம் கேட்டனர். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்(!) மத்திய அரசு, பலருக்கும் சலுகை விலையில் நிலம் கொடுத்தது. அது மட்டுமில்லை, 100 படுக்கைகளுக்கு மேல் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகளைத் தொடங்க தேவையான நிதி மானியம், குறைந்த வட்டிக்கடன் என அனைத்தையும் வாரி வழங்க முன்வந்தது.

எல்லாவற்றையும் சும்மா அள்ளிக்கொடுத்தால் கேள்வி வருமே! அதற்காக சில விதிகளைக் கொண்டு வந்தார்கள். ‘சலுகை விலையில் நிலம் பெற்ற மருத்துவ மனைகள், அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு இலவச சேவை செய்ய வேண்டும். தங்கள் புறநோயாளிகள் சேவையில் 25 சதவிகிதத்தை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அதேபோல, உள்நோயாளிகளாகப் படுக்கைகளில் தங்கி சிகிச்சை பெறும் வாய்ப்பில் 10 சதவிகிதத்தை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும். கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்ன மாதிரியான உயர்தர சிகிச்சை தரப்படுகிறதோ, அதைப்பெற இவர்களுக்கும் உரிமை உண்டு’ என விதிமுறை வகுத்தார்கள். இதன்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் 100 படுக்கைகள் இருக்கிறது என்றால், அதில் 10 படுக்கைகளில் ஏழைகள் தங்கி, எந்தச் சிகிச்சையையும் இலவசமாகப் பெறுவதற்கு முழு உரிமை உண்டு. தினமும் புறநோயாளிகளாக 1,000 பேர் வருகிறார்கள் என்றால், சிகிச்சை பெறுபவர்களில் அதில் 250 பேர் ஏழைகளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்.

ஆனால், இப்படி ஒரு விதி வகுத்ததையே அரசும் மறந்துவிட்டது; மருத்துவமனைகளும் ‘வசதியாக’ மறந்துவிட்டன. 2002-ம் ஆண்டு அசோக் அகர்வால் என்ற வழக்கறிஞர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடும்வரை இந்த விஷயம் வெளியில் யாருக்குமே தெரியாது. அப்போதும், ‘அப்படியெல்லாம் உறுதிமொழி தரவில்லை’ என்று சாதித்தன மருத்துவமனைகள். ஆனால், ஆவணங்களைப் பார்த்துவிட்டு ‘அரசு விதிமுறைகளை மதித்து ஏழைகளுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்’ என 2007-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. மருத்துவமனைகள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போய்த் தோற்றன. அவர்களுக்கு அரசு தரும் எல்லா சலுகைகளும் வேண்டும். ஆனால், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை தர மனம் வராது. 

இப்படி சலுகை பெற்றவை 43 மருத்துவ மனைகள். இவற்றில் மொத்தம் 636 படுக்கைகள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை தர ஒதுக்கப் பட்டவை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இதற்காக ஒரு கமிட்டி போடப்பட்டது. இந்தச் சிகிச்சை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை இந்த கமிட்டி முடிவு செய்யும். ஒவ்வொரு மருத்துவமனையும், தங்களிடம் இருக்கும் இலவச படுக்கை பட்டியலையும், அதில் சிகிச்சை பெறுபவர்கள் விவரங்களையும் போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்பது பொது விதி. ஒரு மருத்துவமனையும் இதை முறையாகச் செய்வதில்லை. ‘யார் ஏழை என்பதை எதை வைத்துத் தீர்மானிப்பது’ என அரசு விதிகளில் புகுந்து குட்டையைக் குழப்பும் வேலையை கவனமாகச் செய் கின்றன தனியார் மருத்துவமனைகள்.

இதில் கெஜ்ரிவால் ஓர் அதிரடி செய்தார். இத்தனை ஆண்டுகள் ஏழைகளுக்கு சிகிச்சை தராமல் அரசு விதியை மீறியதற்காக, இந்த மருத்துவமனைகளுக்கு 600 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால், ‘இது மத்திய அரசு விவகாரம். இதில் அபராதம் விதிக்க டெல்லி மாநில அரசுக்கு உரிமை இல்லை’ என நழுவிக்கொண்டன மருத்துவமனைகள்.    

இளம் மருத்துவர்கள் சிறு சிறு கிராமங்களில் தங்கள் சேவையைத் துவங்க நிலமும் நிதியும் தர வேண்டிய அரசு, கார்ப்பரேட்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து ஏமாந்து நிற்கிறது. அரசு தெரிந்தே செய்த தவறை வெளிப்படுத்தி, அதற்கான மாற்று ஏற்பாடாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி  அரசு எடுத்த இன்னொரு நல்ல முயற்சி, ‘மொகல்லா கிளினிக்’ எனப்படும் அருகாமை மருத்துவ மையங்கள்.

கிராமங்களில் ஏழை மக்கள் இலவச சிகிச்சைப் பெறுவதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் இப்படி சாதாரண பிரச்னைகளுக்குத் தீர்வு தர வசதி ஏதும் இல்லாததால், எல்லோரும் அரசு மருத்துவமனை களுக்குச் செல்கிறார்கள். அங்கு கூட்டம் நெருக்குகிறது. ‘ஜுரம், தலைவலி, சாதாரண நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்னைகளுக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களே 90 சதவிகித நோயாளிகள். இவர்களுக்கு சிகிச்சை தருவதிலேயே அரசு மருத்துவர்களின் பெரும்பகுதி நேரம் போய்விடுவதால், அவர்களால் உயிர் காக்கும் சிறப்பு சிகிச்சைகள் தர முடிவதில்லை’ என்கிறது ஓர் ஆய்வு.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க கெஜ்ரிவால் அரசு, மொகல்லா கிளினிக் என்ற திட்டத்தை ஆரம்பித்தது. டெல்லி முழுக்க 110 இடங்களில் இந்த கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளன. விரைவில் 1,000 கிளினிக்குகள் என்பது இலக்கு. 

10 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு கிளினிக். இதில் ஒரு டாக்டர் இருப்பார். காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த மருத்துவமனை சேவை புரியும். இதில் ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர், ஓர்  ஆய்வக உதவியாளர் ஆகியோரும் பணிபுரிவர். 110 வகை மருந்துகளை இலவசமாக இங்கு தருகிறார்கள். மருத்துவமனையின் பரிசோதனைக் கூடத்தில் 212 வகை பரிசோதனைகள் செய்யப்படும். வாரம் ஒரு முறை பல் மருத்துவர் வருகை புரிகிறார்.

ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ‘நகர்ப்புற ஏழைகளுக்கு எப்படி மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் என உலக நாடுகள் இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்’ என மொகல்லா கிளினிக்கை நேரில் வந்து பார்த்துப் பாராட்டியுள்ளார்.  

கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு உதவும் கோடீஸ்வரத் திட்டத்துக்கு மாற்றாக, ஏழைகளுக்கு உதவும் ஆம் ஆத்மி அரசின் திட்டத்தைப் பிற மாநிலங்களும் பின்பற்றி மக்கள் நல்லாதரவைப் பெற முயற்சிக்கலாம். ஆட்சியாளர்கள் மட்டுமின்றி தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்களும் இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்க முயற்சி செய்வது அவசியம்.  

(நலம் அறிவோம்)

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment