Friday, May 19, 2017
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்?
Friday, May 19, 2017முரண்பாடுகளின் தேசம், நம் இந்தியா. உலகப் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் அக்கறையோடு கவனிக்க, தேசத்தின் தரமான கார்ப்பரேட் மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட ஆபரேஷன் தியேட்டரில் ஒரு பிரசவம் நிகழும். எங்கோ ஒரு குக்கிராமத்தில், பூட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில், பழைய புடவைகளே திரைமறைப்புகளாக இருக்க, பெரிய பயிற்சி எதுவும் இல்லாத மூதாட்டி ஒருவரின் உதவியோடு குழந்தை பெற்றெடுப்பார் ஒரு பெண்மணி.
இந்த முரண்பாடு, மருத்துவத்தின் எல்லாப் படிநிலைகளிலும் இருக்கிறது. ‘இந்தியாவில் மருத்துவமனையைத் தேடிவரும் நோயாளிகளில் சுமார் 86 சதவிகிதம் பேர் கிராமத்து மக்கள். இவர்களில் நிறைய பேர், சராசரியாக 50 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இலவச சிகிச்சை எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் வாய்ப்பதில்லை. முக்கால்வாசி பேர் தங்கள் சொந்தப் பணத்தையே செலவழிக்க நேர்கிறது. ‘இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 23 சதவிகிதக் கிராமப்புறக் குடும்பங்கள், தங்கள் வாழ்வையே நிர்மூலமாக்கும் அளவுக்கான மருத்துவ செலவுகளைச் சந்தித்திருக்கின்றன.’ இது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத்தில் கொடுத்த புள்ளிவிவரம்.
கிராமங்களில் போதுமான மருத்துவ வசதிகளை அரசுகளால் செய்துகொடுக்க முடியவில்லை. இந்த இடைவெளியைத்தான் போலி டாக்டர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ‘போலி டாக்டர் கைது’ என்று அவ்வப்போது செய்திகள் வரும். ஆங்காங்கே நிகழும் சில கைது நடவடிக்கைகளால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னை அல்ல இது. ‘போலி டாக்டர்களிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பது நிச்சயமாக மக்களின் விருப்பமாக இருக்காது. அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்திருக்கிறோம்? இந்தக் கேள்வி இந்தியா முழுக்கவே இருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் நிலைமை மிக மோசம். அங்கே டாக்டர்கள் பற்றாக்குறை மிக அதிகம். அரசு மருத்துவமனைகளிலேயே சுமார் 50 சதவிகித டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைச் சரிசெய்யும் விதமாக மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்கவோ, மருத்துவர்களை ஈர்க்கவோ அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, வேறொரு முடிவை எடுத்திருக்கிறது. மேற்கு வங்காளக் கிராமங்களில், முறையான பயிற்சியோ, பட்டமோ பெறாத சுமார் இரண்டரை லட்சம் போலி டாக்டர்கள் இருக்கிறார்கள். அலோபதி சிகிச்சை மட்டுமில்லை, ஆயுர்வேதம், யுனானி என சகலவிதமான சிகிச்சைகளையும் இவர்கள் கொடுக்கிறார்கள். ‘இவர்களையே நிஜமான டாக்டர்களாக மாற்றிவிட்டால் என்ன?’ என்ற எண்ணம் அந்த மாநில அரசுக்கு எழுந்திருக்கிறது.
இவர்களுக்கு அரசு சுகாதாரப் பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மருத்துவம் தொடர்பான பயிற்சி கொடுப்பது, அந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு ‘கிராமப்புற மருத்துவர்’ என்ற பட்டம் வழங்குவது எனக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறது அரசு. அங்கு இதுபோல பழக்கத்தின் அடிப்படையில் சிகிச்சை கொடுக்கும் போலி டாக்டர்கள், தங்களுக்கு என சங்கம் வைத்திருக்கிறார்கள். கட்சிகளின் சார்பில் இந்தச் சங்கங்கள் இருக்கின்றன என்பதைக் கேட்கவே உங்களுக்கு விநோதமாக இருக்கலாம். ஏற்கெனவே இரண்டு முறை இதேபோன்ற முடிவை மேற்கு வங்காள அரசு எடுத்தது. அப்போதெல்லாம் இந்திய மருத்துவ கவுன்சிலும், இந்திய மருத்துவர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து, இதைத் தடுத்துவிட்டன. ‘‘இவர்களையும் டாக்டர்கள் என்று அழைத்தால், எம்.பி.பி.எஸ் முடித்த எங்களை என்னவென்று சொல்வீர்கள்?” என்பதே மருத்துவர்களின் வாதம். இம்முறையும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இதேபோல குறுகிய காலப் பயிற்சி ஒன்றைத் தந்து, கிராமப்புற மருத்துவர்களை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சியும், எதிர்ப்புகளால் முடங்கிப் போயிருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிராமங்களில், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு சுவாரஸ்யமான ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், ‘அமெரிக்கன் எகனாமிக் ரிவ்யூ’ என்ற இதழில் வெளியாகின. இந்த ஆய்வுக்காக சிலரைத் தேர்வு செய்தனர். ஆரோக்கியமாக இருந்த அவர்களுக்கு ‘உண்மையான நோயாளி’ போல நடிப்பதற்குப் பயிற்சி தரப்பட்டது. நெஞ்சுவலி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு நோயாளிகளாக நடித்து, நோய் அறிகுறிகளைக் கச்சிதமாகச் சொல்வதற்கு அவர்கள் பயிற்சி பெற்றனர். தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் 1,100 பேரிடம் அவர்கள் நோயாளிகளாகச் சென்று ‘சிகிச்சை’ பெற்றனர்.
இதில் சில உண்மைகள் வெளிப்பட்டன:
நோய் அறிகுறிகள் குறித்து முழுமையாகக் கேள்விகள் கேட்காமல், அவசர அவசரமாக நோயாளிகளிடம் பேசிவிட்டு டாக்டர்கள் சிகிச்சை தருகிறார்கள். நோயாளிகளிடம், அரசு டாக்டர்களைவிட தனியார் டாக்டர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள். வித்தியாசம் பெரிதாக இல்லை. ஒரு நோயாளிக்கு ஒன்றரை நிமிடம் கூடுதலாகச் செலவிடுகிறார்கள்.
அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் என இரண்டு தரப்பினருமே கிட்டத்தட்ட சரியாக அறிகுறிகளை வைத்து, நோயைக் கணித்தார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தனியார் டாக்டர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர், முறையான மருத்துவக் கல்வி பெறாத போலி டாக்டர்கள்.
வேதனையான ஒரு உண்மை... அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர், அங்கு வரும் நோயாளியிடம் குறைந்த நேரமே செலவிடுகிறார். அதே டாக்டர், தன் சொந்த கிளினிக்கில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அதிக நேரம் செலவிடுகிறார்.
இதைவிட வேதனையான ஒரு உண்மை... சிகிச்சைக் கட்டணம் தொடர்பானது. தனியார் டாக்டர்கள் சராசரியாக ஒரு நோயாளியின் அடிப்படை சிகிச்சைக்கான கட்டணமாக 50 ரூபாய் பெறுகிறார்கள் என்றால், அரசு மருத்துவமனையில் இது 240 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இது, நோயாளியின் பாக்கெட்டில் இருந்து நேரடியாக டாக்டரின் கைக்குப் போவதில்லை. ஆனால், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்; அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்குச் சம்பளம் உட்பட எல்லா வகைகளிலும் அரசு செலவிடும் தொகை என்ன என்பதை வைத்து கணக்கிடப்பட்ட தொகை இது. வெவ்வேறு மாநிலங்களில் இதில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனாலும், அடிப்படை சிகிச்சைகளைப் பொறுத்தவரை தனியார் கிளினிக்குகளைவிட அரசு மருத்துவமனைகளில்தான் செலவு அதிகம். ஆனால், இவ்வளவு செலவிடும் அரசு, அங்கு மருத்துவர்கள் இருப்பதை, சிகிச்சை முறையாகக் கிடைப்பதை உறுதி செய்வதில்லை.
அரசு நெருங்க முயலாத மலைப்பகுதிகளில் சில சேவை உள்ளம் கொண்ட மருத்துவர்கள், உன்னதமான தியாக வாழ்வை மேற்கொண்டு, ஒதுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர். மகாராஷ்ட்ர மலைப்பகுதியில் பாபா ஆம்தேவைத் தொடர்ந்து டாக்டர் பிரகாஷ் ஆம்தே, கபினி காடுகளில் டாக்டர் வெங்கட்ராமன், தர்மபுரி சிட்லிங்கி காடுகளில் டாக்டர் ரெஜி, லலிதா தம்பதி போன்றவர்கள் செய்துவரும் தன்னலமற்ற மருத்துவ சேவை, நமது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.
இந்தியாவில் கல்வி, மருத்துவம் போன்றவை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, அரசு பெரும்பாலும் தனது பொறுப்பைக் கைகழுவி வருகிறது. இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கூட அரசு மூலமாக மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக வழங்கி வரும்போது, இந்தியாவில் 80 சதவிகித மருத்துவ சேவை தனியார் கைகளிலேயே உள்ளது. அனைத்தும் வணிகமயமாக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஏழை இந்தியர்களுக்கு மருத்துவம் எட்டாக் கனவாகவே உள்ளது.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மத்திய சுகாதார அமைச்சராக இருந்தவர் ராஜ் நாராயண். இந்திரா காந்தியைத் தோற்கடித்து இந்தியா முழுக்க பிரபலமானவர். அவரை ஒரு கோமாளி போல எதிர்க்கட்சியினரும், பத்திரிகைகாரர்களும் சித்திரித்தனர். அவர் என்ன கோமாளித்தனம் செய்தார் தெரியுமா? ‘தகிக்கும் கோடை வெயிலில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழைக்கும்போது, அவர்களின் சேவகர்களான அமைச்சர்கள் தங்கள் அலுவலக அறைகளில் ஆறு ஏ.சி-க்களைப் போட்டுக்கொண்டு சொகுசாக இருக்க வேண்டுமா’ என்று கேட்டார். ‘மருத்துவமனைகளைத் தேடி மக்கள் போகக்கூடாது. மக்களை நோக்கி மருத்துவ சேவை போக வேண்டும்’ என்று சொன்னார். ‘மக்களுக்குச் செலவின்றி சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஒவ்வொரு கிராமத்திலும் அலோபதியோ, ஆயுர்வேதமோ, யுனானியோ, ஏதோ ஒருவகையான மருத்துவ சேவை, மக்களுக்குக் கிடைக்க வேண்டும்’ என்றார். அவர் மேற்கொண்ட மக்களுக்கான மருத்துவ முயற்சிகள், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கும், கேலிக்கும் உள்ளாகி தடைபட்டுப் போயின.
விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நெருங்கிய பின்னும், இந்தியாவின் பெரும்பான்மை மக்களை மருத்துவம் எட்டவில்லை. ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்ற வாசகம் தவிர, நம்பிக்கை தரும் ஒளி எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
(நலம் அறிவோம்)
By:
News2
News2
This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.
you may also like
Subscribe to:
Post Comments (Atom)
- Junior-Vikatan (37)

social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[youtube][#][215,635]
[dribbble][#][14K]
[linkedin][#][556]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
[rss][#][5124]

No comments:
Post a comment