எடப்பாடி பழனிசாமி, தன்னை ஜெயலலிதா போல் காட்டிக் கொள்கிறாராமே?
அதனால் என்ன தவறு? ஜெயலலிதா இருக்கும்போது ஜெயலலிதா போல் காட்டிக் கொண்டால்தான் சிக்கல். ஜெயலலிதா இல்லாதபோது அப்படிக் காட்டிக் கொண்டால் என்ன?
மேலும், அப்படி அவர் நடந்து கொண்டால் கூட அதைத் தட்டிக் கேட்பதற்கு அ.தி.மு.க-வில் யார் இருக்கிறார்கள்? சசிகலாவும் தினகரனும் சிறைக்குப் போன பிறகு அங்கு தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்தான்!
பீகார் காவல்நிலையக் கிடங்குகளில் வைக்கப்பட்டு இருந்த 9 லட்சம் லிட்டர் மதுபானங்களை அங்குள்ள எலிகள் குடித்து விட்டதாக அந்த மாநிலக் காவல்துறை தெரிவித்து இருப்பது பற்றி..?
போலீஸ் சொல்லும் பொய் எந்த அளவுக்கு அபத்தமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இது. 9 லட்சம் லிட்டர் மதுவைக் குடிக்க வேண்டுமானால், பீகார் காவல்துறையில் எத்தனை ஊழல் எலிகளின் நடமாட்டம் இருக்கும் என்பதை அறிய முடிகிறது.
மதுவைத் தடை செய்வதற்கு முன்பாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்த ஊழல் எலிகளைப் பிடிக்க எலி மருந்து வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற முறைகேடுகள் ஆங்காங்கே நடந்தாலும், துணிச்சலாக, பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல், லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் மதுவிலக்கை அமல்படுத்திய நிதிஷ் குமாரைப் பாராட்ட வேண்டும். உச்ச நீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டிய பிறகும், ‘எங்கெல்லாம் மீண்டும் கடை திறக்கலாம்’ என்று துடிக்கிறது எடப்பாடி அரசு. மேலும், இது ஏதோ மாநில அரசின் விவகாரம்தான் என்று பி.ஜே.பி-யினரும் சும்மா இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுவிலக்கு விஷயத்தில் அழுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் இருக்கிறது.
‘தமிழகம் முழுக்க டி.டி.வி.தினகரன் பேரவை அமைக்கப்படும்’ என்கிறார்களே?
பணம் இருக்கிறது. அமைக்க வேண்டியதுதானே? நாஞ்சில் சம்பத்துகள் இருக்கும் வரை என்ன கவலை?
‘‘அடுத்து தி.மு.க ஆட்சிதான்’’ என்று ஸ்டாலினும் துரைமுருகனும் என்ன தைரியத்தில் சொல்கிறார்கள்?
‘அ.தி.மு.க இரண்டு அணிகளாக ஆகிவிட்டது. அதனால் தி.மு.க வெல்லும்’ என்பதுதான் இவர்களின் கணக்கு. அ.தி.மு.க இரண்டு அணிகளாக ஆனபிறகும், அதில் ஒரு அணியான பன்னீர் அணிக்குத்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்று கருத்துக் கணிப்புகள் வந்தன என்பதால் இவர்களது லாஜிக் அடிபடுகிறது.
‘அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடாவிட்டால் நமக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்’ என்று தி.மு.க நினைக்கிறது. அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகள் மொத்தமாக தி.மு.க-வுக்கு விழும் என்ற நிலைமை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய்த்துப் போனது. சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் பி.ஜே.பி., தே.மு.தி.க., பா.ம.க, ம.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து உள்ளார்கள்.
எனவே, தி.மு.க தன்னை பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அடுத்தவர் பலவீனத்தை நம்பக் கூடாது.
அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணையத் தடையாக இருப்பது எது?
! பதவிதான். விட்டுத்தர மறுக்கிறார் எடப்பாடி. விடாப்பிடியாக இருக்கிறார் பன்னீர். இணைப்புக்குத் தடையாக இருப்பது நாற்காலிதான்!
இரட்டை இலையைப் பெற்றுத்தரும் விவகாரத்தில் பணம் வாங்கத் தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரி யார் என்று இப்போது வரை தெரியவில்லையே?
தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அந்தக் கறுப்பு ஆடு யார் என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டிய கடமை மத்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது. தினகரனையும் சுகேஷையும் கைது செய்வதோடு விவகாரம் முடிந்துவிடுவது இல்லை. ‘யாருக்காக பணம் வாங்கப்பட்டது, வாங்கத் தயாராக இருந்தது யார்’ என்பதை அறிவிப்பதன் மூலமாக மட்டும்தான் இனியும் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியும். ஒரு ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், முற்றிலுமாகக் கைது செய்யப்படுவது இல்லை. ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாததற்கு இதுதான் காரணம்.
ஜெயலலிதா வழக்கிலேயேகூட, அவர் வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்தார். அரசு அதிகாரிகள் துணை இல்லாமல் இதனைச் செய்திருக்க முடியாது. அந்த அதிகாரிகள் அனைவரும் தப்பிவிட்டார்கள். தண்டிக்கப்படவில்லை. ஊழல் ஒட்டுமொத்தமாக துடைக்கப்பட முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்.
‘பிரதமரையும் மத்திய அரசையும் தாக்கி யாரும் பேச வேண்டாம்’ என்று அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கட்டுப்பாடு விதித்திருக்கிறாரே ஏன்?
தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்குத்தான்.
காதலில் அதிகம் தோல்வி அடைவது ஆண்களா? பெண்களா?
யார் அதிகமாகக் காதலிக்கிறார்களோ, அவர்கள்!
‘நான் அரசியலுக்கு வருவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்’ என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறாரே?
அப்படிச் சொல்லி இருந்தால், தி.மு.க-வுக்குச் சறுக்கல் வெகு சீக்கிரம் ஆரம்பம்!
‘மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?
மூன்று ஆண்டுகள் கழித்து ஆற்றில் அள்ளுவதற்கு மணலே இருக்காது. அதைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அரசியல் கட்சிகளே உஷார்... உங்கள் சம்பாத்திய வாய்ப்பில் மண்!
கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
நீதி பரிபாலனம் செய்யும் உரிமையை இழந்த நீதிபதி கர்ணன், தனது லெட்டர் பேர்டில் எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பியதை எல்லாம் நீதிமன்ற உத்தரவுகள் போல் வெளியிட்டதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் பிறப்பித்த உத்தரவுக்குச் சமமாக முதல் பக்கத்தில் அவற்றை வெளியிட்டதும் ஊடக தர்மத்துக்கு நியாயமா? ஊடகங்கள் ஊதிப் பெருக்காமல் இருந்திருந்தால், இந்தப் பிரச்னை இந்த அளவுக்குச் சென்றிருக்காது அல்லவா?
நீதிபதி கர்ணன் விவகாரத்தில் யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்ற விவாதம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்த விவகாரத்தால் இந்திய நீதித்துறை தலை கவிழ்ந்து நிற்கிறது என்பதுதான் உண்மை. உயர் நீதிமன்ற நீதிபதியைக் கைது செய்யச் சொல்வதும், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கைது செய்யச் சொல்வதும் வரலாறு பார்க்காதது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
நீதித்துறை எத்தனையோ விஷயங்களை ‘இன்கேமரா’ விசாரணைகளாக நடத்தி உள்ளது. குறிப்பிட்ட வழக்குகளில் விசாரணை நடைமுறைகள் வெளியில் தெரிய வேண்டாம் என்று மறைமுகமாக விசாரிப்பார்கள். இந்த விவகாரத்தை ஆரம்பம் முதல் ‘இன்கேமரா’ வழக்காகவே விசாரித்திருக்க வேண்டும். ஓப்பன் கோர்ட்டில் விசாரித்து, வெளிப்படையாகத் தீர்ப்புத் தந்துவிட்டு, அதன் இன்னொரு பக்கத்தை (அதாவது, நீதிபதி கர்ணன் தரப்பு விளக்கத்தை மட்டும்!) வெளியிட்டதால்தான் பிரச்னை பெரிதானது என்று சொல்வது சரியா?
No comments:
Post a comment