‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஏன் திரளவில்லை என்றால், அவர்களில் பாதிப்பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள்’ என்று தமிழருவி மணியன் சொல்லி இருக்கிறாரே?
தமிழருவி மணியன் சொல்லி இருப்பது, தவறான கருத்து. ஒரு போராட்டக் களத்தில் ஈடுபட்டவர்களில் பாதிப்பேரை குடிப் பழக்கம் உள்ளவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்ன ஆதாரம் இதற்கு இருக்கிறது? மெரினா போராட்டக் களத்தில் அள்ளப்பட்ட குப்பைகளில் இருந்து ஒரு மது பாட்டில்கூட காண முடியவில்லை.
‘பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளைஞர்கள் அணி திரளவில்லை. ஏனென்றால், அவர்களும் அதே நோக்கம் கொண்டவர்கள்தான்’ என்று சொல்ல முடியுமா? ‘டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இளைஞர்கள் அணி திரள வேண்டும்’ என்ற ஆதங்கத்தில் அவர் ஒருவேளை இப்படிச் சொல்லி இருக்கலாம். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது.
‘களத்தில் எதிரிகள் இல்லை. ஆகையால் ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்’ என்கிறாரே கனிமொழி?
இதேபோல, ‘எதிரிகளே இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் தான் ஜெயலலிதா. ஆனால், கிடைத்த வெற்றியை, அவராலேயே அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் எப்போதுமே வார்த்தைகளை அளந்துதான் பேசவேண்டும்.
ஸ்டாலின் ரொம்ப அவசரப்படுகிறாரே?
பதவி, பவிசு, அதிகாரம், பாராட்டு, புகழ் ஆகிய ஐந்தையும் அனுபவித்தால்தான் தெரியும். ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அது இல்லாமல் வாழமுடியாது. அதனால்தான் அவசரப்படுகிறார்.
‘விவசாயிகளுக்காக வேலை நிறுத்தம் நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை’ என்று பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே?
அவர், பி.ஜே.பி கூட்டணிக்குத் தயார் ஆகிவிட்டார்.
இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதியாகத் தாங்கள் நிறுத்தும் மனிதரை வெற்றி பெற வைக்கும் பலம் பி.ஜே.பி-க்கு இருக்கிறதா?
பி.ஜே.பி அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்கும் பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை!
தினகரனிடம் பணம் கொட்டிக் கிடக்கும் அளவுக்கு விவேகம் இல்லையே?
மிதமிஞ்சிய தன்னம்பிக்கைதான் இவரது நடவடிக்கைகளுக்குக் காரணம். ‘நம்மை யாரால் என்ன செய்ய முடியும்? பணம் இருக்கிறது. ஆட்சி அதிகாரம் இருக்கிறது. பிறகு என்ன வேண்டும்?’ என்ற கோதாவில் செயல்பட்டார் தினகரன்.
‘நான் நேற்றே அ.தி.மு.க-வில் இருந்து விலகிவிட்டேன்’ என்று பேட்டி அளிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளரைக் கட்சியை விட்டு ஒதுங்கு என்று சொல்லும் அளவுக்குத் தைரியம் யாருக்கு இருக்க முடியும்?’ என்று கேட்டவர் அவர்.
ஏதோ புதிதாக சிக்கலில் சிக்குபவராக இருந்தால் பரவாயில்லை. அவர் மீதான புகார்களுக்கு 23 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. இதன் பிறகும் விவேகம் பிறக்கவில்லை என்றால், அவரது செயல்பாடுகள் குருட்டுத்தனமானவை என்றுதான் சொல்ல முடியும்.
சரியாகச் சொல்லுங்கள்... அ.தி.மு.க. இப்போது எத்தனை பிரிவுகளாக இருக்கிறது?
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா, அ.தி.மு.க. அம்மா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, ‘எடப்பாடியும் பன்னீரும் ஒன்று சேர வேண்டும்’ என்பவர்கள், ‘ஒன்று சேர வேண்டாம்’ என்பவர்கள், ‘முதலமைச்சர் பதவியை பன்னீருக்கு எடப்பாடி விட்டுத்தர வேண்டும்’ என்பவர்கள், ‘விட்டுத்தர வேண்டாம்’ என்பவர்கள், ‘சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டாம்’ என்பவர்கள், திவாகரன் அணி, நடராசன் அணி, விவேக் அணி, இவர்கள் யாருடனும் சேராதவர்கள், இந்தப் பிரச்னைகள் எது பற்றியும் தெரியாத அப்பாவித் தொண்டர்கள்... இப்படி அ.தி.மு.க-வில் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க அம்மா அணி
அ.தி.மு.க-வை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை ஒடுக்கிவிடலாம் என்று ஒரு சிலர் சிந்திக்கிறார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு கலாசார யுத்தம் என்பதை கழுகார் ஏற்றுக்கொள்கிறாரா?
அ.தி.மு.க-வினர் இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக்கொள்வது கொள்கைக்காக அல்ல. இரண்டு தனிமனிதர்களின் பதவி வேட்டையில் இது நடக்கிறது. முதலில் அது சசிகலாவுக்கும் பன்னீருக்கும் நடந்தது. இப்ப்போது பன்னீருக்கும் எடப்பாடிக்கும் நடக்கிறது. இதற்கு கலாசார யுத்தம் என்றெல்லாம் பெரிய வார்த்தை போட முடியாது. மேலும், அ.தி.மு.க.வை ஒடுக்குவது என்பது தமிழர்களை ஒடுக்குவதாக ஆகாது. அரசியல் புரிதலும் கொள்கைத் தெளிவும் இல்லாமல், வெறும் பதவி வேட்டைக்காக கூட இருந்தவர்களின் பேராசையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார் ஜெயலலிதா. அவர் இறந்ததும் அந்த மனிதர்கள் அனைவரும் கட்டுக்கு அடங்காமல் துள்ளிக் குதிக்கிறார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.
அதற்காக பி.ஜே.பி செய்யும் காரியங்களை, மத்திய அரசின் நடவடிக்கைகளை மறுக்கவில்லை. அ.தி.மு.க-வை பலவீனம் அடைய வைக்கும் பல்வேறு காரியங்களை அவர்கள் பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளிடமும் நேர்மையும் துணிச்சலும் இருக்குமானால், எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளலாம். ‘நீ கலைத்துப்பார்’ என்று சொல்லும் துணிச்சல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் பயப்படக் காரணம், மடியில் கனம்.
No comments:
Post a comment